388எண் திசைக்கும் ஒண்சுடர் ஆய் நின்றாய், நீயே;
                  ஏகம்பம் மேய இறைவன், நீயே;
வண்டு இசைக்கும் நறுங்கொன்றைத் தாராய், நீயே;
              வாரா உலகு அருள வல்லாய், நீயே;
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய், நீயே;
       தூ மலர்ச்சேவடி என்மேல் வைத்தாய், நீயே;
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய், நீயே
           திரு ஐயாறு அகலாத செம்பொன்சோதீ!.