664தலையானை, எவ் உலகும் தான் ஆனானை, தன்
               உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா
நிலையானை, நேசர்க்கு நேசன் தன்னை, நீள்
                வானமுகடு அதனைத் தாங்கி நின்ற
மலையானை, வரி அரவு நாணாக் கோத்து
            வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த
சிலையானை, திரு நாகேச்சுரத்து உளானை,
               சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.