738புரை உடைய கரி உரிவைப் போர்வையானை,
    புரிசடை மேல் புனல் அடைத்த புனிதன் தன்னை,
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை,
                வெண்நீறு செம்மேனி விரவினானை,
வரை உடைய மகள் தவம் செய் மணாளன் தன்னை,
        வரு பிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை,
நரை விடை நல் கொடி உடைய நாதன் தன்னை,
             நாரையூர் நன்நகரில் கண்டேன், நானே.