642நீற்றவன் காண்; நீர் ஆகித் தீ ஆனான் காண்; நிறை
              மழுவும், தமருகமும், எரியும், கையில்-
தோற்றவன் காண்; தோற்றக் கேடு இல்லாதான் காண்;
    துணை இலி காண்; துணை என்று தொழுவார் உள்ளம்
போற்றவன் காண்; புகழ்கள் தமைப் படைத்தான் தான்
     காண்; பொறி அரவும், விரிசடை மேல், புனலும் கங்கை
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
           ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.