2801.பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்

பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றுங்

கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்

கருப்பறியற் பொருப்பனைய கொகுடிக் கோயில்

இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்

இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்

திருக்கோயில் சிவனுறையுங் கோயில் சூழ்ந்து

தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரும் அன்றே.

5


5. பொ-ரை: நீர்ப்பெருக்கினை உடைய கங்கையாற்றைச் சடையிலணிந்த சிவபெருமான்திகழும் பெருங்கோயில்கள் எழுபத்தெட்டுடன், கடம்பூர்கரக் கோயில், மணங்கமழும் பொழில்கள் சூழ்ந்தஞாழற் கோயில், கருப்பறியலூரில் மலை போன்று விளங்கும் கொகுடிக்கோயில், அந்தணர்கள் வேதம் ஓதி வழிபாடு செய்து துதிக்கும் இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயிலாகிய திருக்கோயில், என்னும் சிவபெருமானுறையும் கோயில்களை வலம் வந்துபடி மீது வீழ்ந்து வணங்கத் தீவினைகள் யாவும்தீரும்.

கு-ரை: இத் திருத்தாண்டகம், 'கோயில்' என வருவனவற்றை வகுத்தருளிச்செய்தது.

பிற்காலத்தில், 'தஞ்சைப்பெருங்கோயில்' என்பதுபோல, அக்காலத்தில், 'பெருங்கோயில்' என எழுபத்தெட்டுக் கோயில்கள் இருந்திருத்தல் வேண்டும். 'அம்பர்ப்பெருங்கோயில்' என்பது ஒன்று திருப்பதிகத்தாற்றானே காணப்படுகின்றது. இனி, 'பெருங்கோயில் எழுபதினோடு எட்டு' என்று அருளப்பட்டவை கோச்செங்கட்சோழ நாயனாரால் எடுக்கப்பட்ட கோயில்கள்' என்றலும் பொருந்தும்.

'கரக்கோயில்' என்பது, கடம்பூர்க்கோயில்; 'கொகுடிக்கோயில்' என்பது கருப்பறியலூர்க் கோயில்; இவை சோழ நாட்டில் உள்ளவை. 'கரக்கோயில்' என்பது, 'இந்திரன் கரத்தால் அகழ்ந்தகோயில்' எனவும், 'கொகுடி' என்பது' 'முல்லைக் கொடியின் வகை' எனவும் கூறுவர்.

இளங்கோயிலும், ஆலக்கோயிலும் மேலைத்திருப்பதிகத்துட் சொல்லப்பட்டன.

ஞாழற் கோயில், மணிக் கோயில் இவை வைப்புத் தலங்கள்.

இருக்கு - வேதம்; மந்திரமுமாம். 'திருக்கோயிலாகிய, சிவன் உறையும் கோயில்' என்க. இதனால், இத்திருப்பெயர் சிவன்கோயிலுக்கே உரித்தாதல் அறிக. இவ்வாறாகவே, "திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும்" (தி.6.ப.95. பா.5.) "திருக்கோயிலுள்ளிருக்கும் திருமேனிதன்னை" (சிவஞான சித்தி. சூ. 12-4) என்றவற்றின் பொருள் இனிது உணர்ந்து கொள்ளப்படும். சூழ்தல் -வலம் வருதல்.