3004.தந்தையார் தாயா ருடன்பி றந்தார்

தாரமார் புத்திரரார் தாந்தா மாரே

வந்தவா றெங்ஙனே போமா றேதோ

மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா

சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின்

திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி

எந்தையார் திருநாமம் நமச்சி வாய

என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே.

10

திருச்சிற்றம்பலம்


10. பொ-ரை: ஒருவருக்குத் தந்தை யார்? தாய் யார்? உடன் பிறந்தார் தாம் யார்? தாரம் யார்? புத்திரர் யார்? தாம் தாம் தமக்கு என்ன தொடர்புடையர்? நிலவுலகிற் பிறந்தது தந்தை முதலியவரோடு முன்னேயும் கூடிநின்றோ? இறப்பது அவர்களோடு பின்னும் பிரியாது கூடிநிற்கவோ? ஆகவே சிந்தையீர், பொய்யான இத்தொடர்பு கொண்டு ஏதும் மகிழ வேண்டா. உமக்கு ஓர் உறுதி சொல்லக் கேண்மின். ஒளிவீசித் திகழும் மதியும் கொடிய பாம்பும் நட்புக்கொண்டு விளையாடி மகிழும் முடியை உடைய எந்தையாரது திருநாமமாகிய நமச்சிவாய என்ற திருஐந்தெழுத்தை ஓதியவாறே துயிலெழுவார்க்குப் பெரிய வீட்டுலகில் நிலை பெற்றிருத்தல் கைகூடும். ஆகவே அதனைச் செய்ம்மின்.

கு-ரை: இத்திருப்பதிகத்துள் இதுகாறும் தலங்களுள் சில வற்றை எடுத்தோதிய குறிப்பினால் இறைவன் எழுந்தருளியுள்ள தலங்கள் பலவற்றிலும் சென்று வழிபடுதலை விதித்தருளி, இறுதியில் இத்திருத்தாண்டகத்தினால், "சுற்றத் தொடர்பால் மயங்காது. இறைவனது திருவைந்தெழுத்தை மனம்பற்றி ஓதுமாறு" அதனை அறிவுறுத் தருளுகின்றார்.

'தந்தை ஆர், தாய் ஆர்' எனப் பிரிக்க. "ஆர்" என்றதனை "உடன் பிறந்தார்" என்றதற்கும் கூட்டுக. தாரம் - மனைவி. 'யார்' என்னும் வினாவினைக் குறிப்பு, 'என்ன தொடர்பு உடையர்' என்னும் பொருளுடையதாய், 'யாதொரு தொடர்பும் உடையரல்லர்' எனப் பொருள் தந்து நின்றது. இவை அனைத்திற்கும், 'ஒருவர்க்கு' என்னும் முறைதொடர் பெயரை முதற்கண் வருவித்து உரைக்க. இங்ஙனம் உரைக்கவே, உலகர் கூறும், 'தந்தை' முதலிய முறைகள் எல்லாம் போலியே என்று அருளியவாறாயிற்று. அங்ஙனம் அருளினமைக்குக் காரணம், "உற்றார் ஆர்உளரோ - உயிர்கொண்டு போம்பொழுது" (தி.4. ப.9. பா.10.), "செத்தால் வந்துதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்" (ப.62. பா.1.) என்றாற் போல்வனவற்றால் இனிது விளக்கப்பட்டன. "தாம் தாம் ஆர்" என்றது, இனி, 'தாம் தாம் தமக்கு என்ன தொடர்புடையர்' என்றருளிய தாம். அஃதாவது, 'தாமே தம்மைக் காத்துக்கொள்வதாக நினைத்தலும் மயக்க உணர்வேயாம்' என்றபடி. 'அது. தமக்கு இறுதி முதலியன வந்தவிடத்துத் தம்மால் ஒன்றும் ஆகாமையான் இனிது உணரப்படும்' என்பது திருக்குறிப்பு. "வந்தவாறு எங்ஙன் போமாறு ஏது" என்றது, 'நிலவுலகிற் பிறந்தது, இங்குப் பிணிப்புற்று நிற்கின்ற தந்தை முதலியவரோடு முன்னேயும் கூடி நின்றோ? இறப்பது அவர்களோடு பின்னும் பிரியாது கூடி நிற்கவோ? அவ்வாறின்றி அவரவர் முன்னும் தொடர்பில்லாதவராய் இருந்து, பின்னும் தொடர்பில்லாதவராய்ப் போகவோ? என்னும் பொருட்டாய், 'அனைவரும் முன்னும் பின்னும் ஏதும் தொடர்பில்லாத தமியரேயன்றோ' எனப் பொருள்தந்தது. ஓர்ந்துணராதபோது, தந்தை தாய் முதலியவர்களும். தாமும் தமக்கு உறுதி செய்பவர் போலத் தோன்றினும், ஓர்ந்துணருங்கால் அவை அனைத்தும் போலியே ஆம் என்பார், "மாயமாம் இதற்கு ஏதும் மகிழ வேண்டா" என்றருளிச்செய்தார். இதற்கு ஏதும் மகிழ வேண்டா - இதனால் சிறிதும் மயங்கற்க. 'ஆதலின், சிந்தையீர், இதற்கு ஏதும் மகிழ வேண்டா' என உரைக்க. 'ஆரே, எங்ஙனே, ஏதோ' என்னும் ஏகார ஓகாரங்கள் அசைநிலை. "திகழ்மதி" என்றதனால் பிறையினது தட்பத்தையும், "வாளரவு" என்றதனால் பாம்பினது கொடுமையையும் குறிப்பித்தருளினார். திளைத்தல் - நட்புக்கொண்டு விளையாடி மகிழ்தல். 'மதியும் அரவும் திளைக்கும் சென்னியை (தலையை) உடையவன்' எனவும், "எந்தை" எனவும் அருளியவாற்றால், 'அவனே எல்லாப் பொருளையும் தாங்குபவனும், துன்பம் நீங்கி இன்பம் பெறச் செய்பவனும், யாவர்க்கும் உறவினனும்' என்பதனை அறிவுறுத் தருளினார். 'அன்ன பெரியோனது திருப்பெயரே திருவைந்தெழுத்து' என்பார், "எந்தையார் திருநாமம் நமச்சிவாய" எனவும், 'அதனை எஞ்ஞான்றும் காதலாகி ஓதி உணரும் தன்மையால், துயில்நீங்கி உணர்வு உண்டாகும்பொழுது அதனையே உணரும் உணர்வு உடையவரே வினைத்தொடக்கு அகன்று வீடுபெறுவர்' என்பார், "நமச்சிவாய என்று எழுவார்க்கு இருவிசும்பில் இருக்கலாம்" எனவும் அருளிச்செய்தார். இருக்கல் ஆம் - இருத்தல் கூடும். இவ்வாறு பொய் அனைத்தையும் அகற்றி உண்மையை அறுதியிட்டு அறிவுறுத்தருளியதனால், இத் திருத்தாண்டகம் அரியதோர் உறுதித் திருத் தாண்டகமாதல் காண்க.

திருநாவுக்கரசர் புராணம்

முந்திமூ வெயில் எய்த முதல்வனார் எடுத்துச்

சிந்தைகரைந் துருகுதிருக் குறுந்தொகையும் தாண்டகமும்

சந்தநிறை நேரிசையும் முதலான தமிழ்பாடி

எந்தையார் திருவருள்பெற் றேகுவார் வாகீசர்.


அம்மலர்ச்சீர்ப் பதியைஅகன்

றயல்உளவாம் பதிஅனைத்தின்

மைம்மலருங் களத்தாரை

வணங்கிமகிழ் வொடும்போற்றி

மெய்ம்மைநிலை வழுவாத

வேளாள விழுக்குடிமைச்

செம்மையினாற் பழையனூர்த்

திருஆல வனம்பணிந்தார்.

-.12 சேக்கிழார்.