2804.நாடகமா டிடநந்தி கேச்சுரமா காளேச்

சுரநாகேச் சுரநாக ளேச்சுரநன் கான

கோடீச்சுரங் கொண்டீச் சுரந்திண் டீச்சுரங்

குக்குடேச் சுரமக்கீச் சுரங்கூ றுங்கால்

ஆடகேச் சுரமகத்தீச் சுரமய னீச்சுர

மத்தீச்சுரஞ் சித்தீச்சுர மந்தண் கானல்

ஈடுதிரை யிராமேச்சுர மென்றென் றேத்தி

யிறைவனுறை சுரம்பலவு மியம்பு வோமே.

8


8. பொ-ரை: கூத்தப் பெருமானது இடமாகிய நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகேச்சுரம், நாகளேச்சுரம், நன்மை பொருந்திய கோடீச்சரம், கொண்டீச்சரம், திண்டீச்சரம், குக்குடேச்சுரம், அக்கீச்சரம் என்றுமிவற்றைக் கூறுமிடத்து உடன்வரும் ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம், அத்தீச்சுரம், சித்தீச்சுரம், அழகிய குளிர்ந்த கடற்கரையில் முத்துபவளம் முதலியவற்றைக் கொணர்ந்து போகடும் திரைகள் சூழ்ந்த இராமேச்சுரம் என்றெல்லாம் இறைவன் தங்குகின்றஈச்சுரம் பலவற்றையும் கூறி அவனைப் புகழ்வோமாக.

கு-ரை: இத்திருத்தாண்டகம், 'ஈச்சரம்' என வருவனவற்றை வகுத்து அருளிச் செய்தது.

'ஈச்சுரம்' என்றும், 'ஈச்சரம்' என்றும் இருவகையாகவும் ஆங்காங்கு ஏற்றபெற்றியாற் பாடம்ஓதுவர். 'இறைவன்' எனப் பொருள் தரும். 'ஈஸ்வரன்' என்னும் ஆரியச்சொல், தமிழில் வடசொல்லாய் வந்து வழங்குமிடத்து, 'ஈச்சுவரன்' எனத் திரிந்து, பின், 'அவன் இருக்கும் இடம்' எனப் பொருள் தருதற் பொருட்டு. அம்முப் பெறுங்கால். இங்ஙனம் இருவகையாகச் சிதைந்து வழங்குகின்றது.

கோடீச்சரம் - கொட்டையூர்; இதுசோழநாட்டுத் தலம்.

நாகேச்சுரம், கொண்டீச்சுரம், திண்டீச்சுரம், சித்தீச்சுரம், இராமேச்சுரம் இவை மேலைத் திருப்பதிகத்திற் சொல்லப்பட்டன.

நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம். அத்தீச்சுரம் இவை வைப்புத் தலங்கள்.

'நாடகம் ஆடி' என்னும் பெயரினது ஈற்று இகரம் தொகுத்தலாயிற்று. நன்கு ஆன - நன்மை பொருந்திய. கானல் - கடற்கரை. 'இடுதிரை' என்பது நீட்டலாயிற்று. சுரம், 'ஈச்சரம்' என்பதன் முதற்குறை.