7.27 திருக்கற்குடி
நட்டராகம்
1விடை ஆரும் கொடியாய்! வெறி ஆர் மலர்க் கொன்றையினாய்!
படை ஆர் வெண்மழுவா! பரம் ஆய பரம்பரனே!
கடி ஆர் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அடிகேள்! எம்பெருமான்! அடியேனையும், “அஞ்சல்!” என்னே! .
உரை
   
2மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற
இறைவா! எம்பெருமான்! எனக்கு இன் அமுது ஆயவனே!
கறை ஆர் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அறவா! அங்கணனே! அடியேனையும், “அஞ்சல்!” என்னே! .
உரை
   
3சிலையால் முப்புரங்கள் பொடி ஆகச் சிதைத்தவனே!
மலை மேல் மா மருந்தே! மட மாது இடம் கொண்டவனே!
கலை சேர் கையினனே! திருக்கற்குடி மன்னி நின்ற
அலை சேர் செஞ்சடையாய்! அடியேனையும், “அஞ்சல்!” என்னே! .
உரை
   
4செய்யார் மேனியனே! திரு நீல மிடற்றினனே!
மை ஆர் கண்ணி பங்கா! மதயானை உரித்தவனே!
கை ஆர் சூலத்தினாய் திருக்கற்குடி மன்னி நின்ற
ஐயா! எம்பெருமான்! அடியேனையும், “அஞ்சல்!” என்னே! .
உரை
   
5சந்து ஆர் வெண்குழையாய்! சரி கோவண ஆடையனே!
பந்து ஆரும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தவனே!
கந்து ஆர் சோலைகள் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
எந்தாய்! எம்பெருமான்! அடியேனையும் ஏன்று கொள்ளே! .
உரை
   
6அரை ஆர் கீளொடு கோவணமும்(ம்) அரவும்(ம்) அசைத்து
விரை ஆர் கொன்றை உடன் விளங்கும் பிறை மேல் உடையாய்!
கரை ஆரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
அரையா! எம்பெருமான்! அடியேனையும் அஞ்சல்! என்னே! .
உரை
   
7பாரார் விண்ணவரும் பரவிப் பணிந்து ஏத்த நின்ற
சீர் ஆர் மேனியனே! திகழ் நீல மிடற்றினனே!
கார் ஆர் பூம்பொழில் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
ஆரா இன்னமுதே! அடியேனையும், “அஞ்சல்!” என்னே! .
உரை
   
8நிலனே, நீர், வளி, தீ, நெடுவானகம், ஆகி நின்ற
புலனே! புண்டரிகத்து அயன், மாலவன், போற்றி செய்யும்
கனலே! கற்பகமே! திருக்கற்குடி மன்னி நின்ற
அனல் சேர் கையினனே! அடியேனையும், “அஞ்சல்!” என்னே! .
உரை
   
9வரும் காலன்(ன்) உயிரை மடியத் திரு மெல்விரலால்
பெரும் பாலன் தனக்கு ஆய்ப் பிரிவித்த பெருந்தகையே!
கரும்பு ஆரும் வயல் சூழ் திருக்கற்குடி மன்னி நின்ற
விரும்பா! எம்பெருமான்! அடியேனையும் வேண்டுதியே! .
உரை
   
10அலை ஆர் தண் புனல் சூழ்ந்து, அழகு ஆகி, விழவு அமரும்
கலை ஆர் மா தவர் சேர் திருக்கற்குடிக் கற்பகத்தைச்
சிலை ஆர் வாள் நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூ உலகு ஆள்பவரே .
உரை