7.31 திருஇடையாற்றுத் தொகை
கொல்லி
1முந்தை ஊர் முதுகுன்றம், குரங்கணில் முட்டம்,
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர்,
பந்தையூர், பழையாறு, பழனம், பைஞ்ஞீலி,
எந்தை ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடை மருதே.
உரை
   
2சுற்றும் ஊர் சுழியல், திருச் சோபுரம், தொண்டர்
ஒற்றும் ஊர் ஒற்றியூர், திரு ஊறல், ஒழியாப்
பெற்றம் ஊர்தி, பெண் பாதி இடம் பெண்ணைத் தெண்நீர்
எற்றும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
3கடங்களூர், திருக்காரிக்கரை, கயிலாயம்,
விடங்களூர், திரு வெண்ணி, அண்ணாமலை, வெய்ய
படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான், பரஞ்சோதி,
இடம் கொள் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
4கச்சையூர், காவம், கழுக்குன்றம், காரோணம்,
பிச்சை ஊர் திரிவான்-கடவூர், வடபேறூர்,
கச்சி ஊர் கச்சி, சிக்கல், நெய்த்தானம், மிழலை,
இச்சை ஊர் எமது அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
5நிறையனூர், நின்றியூர், கொடுங்குன்றம், அமர்ந்த
பிறையனூர், பெருமூர், பெரும்பற்றப் புலியூர்,
மறையனூர், மறைக்காடு, வலஞ்சுழி, வாய்த்த
இறையனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
6திங்களூர், திரு ஆதிரையான் பட்டினம் ஊர்,
நங்களூர், நறையூர், நனி நால் இசை நாலூர்,
தங்களூர், தமிழான் என்று பாவிக்க வல்ல
எங்களூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
7கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன், கொல் ஏற்றன்,
தருக்கு அரக்கனைச் செற்று உகந்தான், தன் முடிமேல்
எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி,
இருக்கும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
8தேசனூர், வினை தேய நின்றான்-திரு ஆக்கூர்,
பாசனூர், பரமேட்டி, பவித்திர பாவ-
நாசன்-ஊர் நனிபள்ளி, நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
9பேறனூர், பிறைச் சென்னியினான்-பெருவேளூர்,
தேறனூர், திருமாமகள் கோன் திருமால் ஓர்-
கூறன்-ஊர் குரங்காடு துறை, திருக்கோவல்,
ஏறனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே.
உரை
   
10ஊறி வாயினன், நாடிய வன் தொண்டன்-ஊரன்
தேறுவார் சிந்தை தேறும் இடம் செங்கண் வெள் ஏறு
ஏறுவார் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதைக்
கூறுவார் வினை எவ்விட, மெய் குளிர்வாரே.
உரை