7.33 “நமக்கு அடிகள் ஆகிய அடிகள்”
கொல்லி
1பாறு தாங்கிய காடரோ? படுதலையரோ? மலைப் பாவை ஓர்-
கூறு தாங்கிய குழகரோ? குழைக் காதரோ? குறுங் கோட்டு இள
ஏறு தாங்கிய கொடியரோ? சுடு பொடியரோ? இலங்கும் பிறை
ஆறு தாங்கிய சடையரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
உரை
   
2இட்டிது ஆக வந்து உரைமினோ! நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்!
கட்டி வாழ்வது நாகமோ? சடை மேலும் நாறு கரந்தையோ?
பட்டி ஏறு உகந்து ஏறரோ? படு வெண்தலைப் பலி கொண்டு வந்து
அட்டி ஆளவும் கிற்பரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
உரை
   
3ஒன்றினீர்கள், வந்து உரைமினோ! நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்!
குன்றி போல்வது ஒர் உருவரோ? குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ?
இன்றியே இலர் ஆவரோ? அன்றி உடையராய் இலர் ஆவரோ?
அன்றியே மிக அறவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
உரை
   
4தேனை ஆடு முக்கண்ணரோ? மிகச் செய்யரோ? வெள்ளை நீற்றரோ?
பால் நெய் ஆடலும் பயில்வரோ? தமைப் பற்றினார்கட்கு நல்லரோ?
மானை மேவிய கண்ணினாள் மலை மங்கை நங்கையை அஞ்ச, ஓர்
ஆனை ஈர் உரி போர்ப்பரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
உரை
   
5கோணல் மாமதி சூடரோ? கொடுகொட்டி, காலர் கழலரோ?
வீணை தான் அவர் கருவியோ? விடை ஏறு வேத முதல்வரோ?
நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ? நலம் ஆர்தர
ஆணை ஆக நம் அடிகளோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
உரை
   
6வந்து சொல்லுமின், மூடனேனுக்கு! வல்லவா நினைந்து ஏத்துவீர்!
வந்த சாயினை அறிவரோ? தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ?
புந்தியால் உரை கொள்வரோ? அன்றிப் பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ?
அன்றியே மிக அறவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
உரை
   
7மெய் என்? சொல்லுமின், நமரங்காள்! உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்!
கையில் சூலம் அது உடையரோ? கரிகாடரோ? கறைக் கண்டரோ?
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ? விடை ஏறரோ? கடைதோறும் சென்று
ஐயம் கொள்ளும் அவ் அடிகளோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
உரை
   
8நீடு வாழ் பதி உடையரோ? அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ?
பாடுவாரையும் உடையரோ? தமைப் பற்றினார்கட்கு நல்லரோ?
காடு தான் அரங்கு ஆகவே, கைகள் எட்டினோடு இலயம் பட,
ஆடுவார் எனப்படுவரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
உரை
   
9நமண நந்தியும், கருமவீரனும், தருமசேனனும், என்று இவர்
குமணமாமலைக் குன்று போல் நின்று, தங்கள் கூறை ஒன்று இன்றியே,
“ஞமணம், ஞாஞணம், ஞாணம், ஞோணம்” என்று ஓதி யாரையும் நாண் இலா
அமணரால் பழிப்பு உடையரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
உரை
   
10படி செய் நீர்மையின் பத்தர்காள்! பணிந்து ஏத்தினேன்; பணியீர், அருள்!
வடிவு இலான் திரு நாவலூரான்-வனப்பகை அப்பன், வன் தொண்டன்,
செடியன் ஆகிலும் தீயன் ஆகிலும் தம்மையே மனம் சிந்திக்கும்
அடியன்-ஊரனை ஆள்வரோ? நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
உரை