Try error :java.sql.SQLException: Closed Resultset: next
 
7.45 திருஆமாத்தூர்
கொல்லிக்கௌவாணம்
1காண்டனன் காண்டனன், காரிகையாள் தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன்; ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆட்-
பூண்டனன் பூண்டனன்; பொய் அன்று; சொல்லுவன்; கேண்மின்கள்:
மீண்டனன் மீண்டனன், வேதவித்து அல்லாதவர்கட்கே.
உரை
   
2பாடுவன் பாடுவன், பார்ப் பதிதன் அடி பற்றி, நான்
தேடுவன் தேடுவன்; திண்ணெனப் பற்றிச் செறிதர
ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளை,
கூடுவன் கூடுவன், குற்றம் அது அற்று என் குறிப்பொடே.
உரை
   
3காய்ந்தவன் காய்ந்தவன், கண் அழலால் அன்று காமனை;
பாய்ந்தவன் பாய்ந்தவன், பாதத்தினால் அன்று கூற்றத்தை;
ஆய்ந்தவன் ஆய்ந்தவன், ஆமாத்தூர் எம் அடிகளார்,
ஏய்ந்தவன் ஏய்ந்தவன், எம்பிராட்டியைப் பாகமே.
உரை
   
4ஓர்ந்தனன் ஓர்ந்தனன், உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள்,
சேர்ந்தனன் சேர்ந்தனன், சென்று திரு ஒற்றியூர் புக்கு;
சார்ந்தனன் சார்ந்தனன், சங்கிலி மென்தோள் தடமுலை;
ஆர்ந்தனன் ஆர்ந்தனன், ஆமாத்தூர் ஐயன் அருள் அதே.
உரை
   
5வென்றவன் வென்றவன், வேள்வியில் விண்ணவர் தங்களை;
சென்றவன் சென்றவன், சில்பலிக்கு என்று தெரு இடை;
நின்றவன் நின்றவன், நீதி நிறைந்தவர் தங்கள் பால்;
அன்று அவன் அன்று அவன், செய் அருள்; ஆமாத்தூர் ஐயனே.
உரை
   
6காண்டவன் காண்டவன், காண்டற்கு அரிய கடவுளாய்;
நீண்டவன் நீண்டவன், நாரணன் நான்முகன் நேடவே;
ஆண்டவன் ஆண்டவன், ஆமாத்தூரையும் எனையும் ஆள்;
பூண்டவன் பூண்டவன், மார்பில் புரிநூல் புரளவே.
உரை
   
7எண்ணவன் எண்ணவன், ஏழ் உலகத்து உயிர் தங்கட்கு;
கண் அவன் கண் அவன், “காண்டும்” என்பார் அவர் தங்கட்கு;
பெண் அவன் பெண் அவன், மேனி ஓர்பாகம்; ஆம், பிஞ்ஞகன்;
அண்ணவன் அண்ணவன்-ஆமாத்தூர் எம் அடிகளே.
உரை
   
8பொன்னவன் பொன்னவன்; பொன்னைத் தந்து என்னைப் போக விடா
மின்னவன் மின்னவன்; வேதத்தின் உள் பொருள் ஆகிய
அன்னவன் அன்னவன்; ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
“என்னவன் என்னவன்!” என் மனத்து இன்புற்று இருப்பனே.
உரை
   
9தேடுவன் தேடுவன், செம்மலர்ப் பாதங்கள் நாள்தொறும்;
நாடுவன் நாடுவன், நாபிக்கு மேலே ஓர் நால்விரல்;
மா(ட்)டுவன் மா(ட்)டுவன், வன் கை பிடித்து; மகிழ்ந்து உளே
ஆடுவன் ஆடுவன், ஆமாத்தூர் எம் அடிகளே.
உரை
   
10உற்றனன், உற்றவர் தம்மை ஒழிந்து, உள்ளத்து உள்பொருள்
பற்றினன், பற்றினன், பங்கயச் சேவடிக்கே செல்ல;
அற்றனன் அற்றனன்; ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆட்-
பெற்றனன் பெற்றனன், பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே.
உரை
   
7.78 திருக்கேதாரம்
நட்டபாடை
1வாழ்வு ஆவது மாயம்(ம்); இது மண் ஆவது திண்ணம்;
பாழ் போவது பிறவிக் கடல்; பசி, நோய், செய்த பறி தான்;
தாழாது அறம் செய்ம்மின்! தடங்கண்ணான் மலரோனும்
கீழ் மேல் உற நின்றான் திருக்கேதாரம் எனீரே!
உரை
   
3கொம்பைப் பிடித்து ஒருக்(கு)காலர்கள் இருக்கால் மலர் தூவி,
“நம்பன் நமை ஆள்வான்” என்று, நடுநாளையும் பகலும்;
கம்பக் களிற்று இனம் ஆய் நின்று, சுனை நீர்களைத் தூவி,
செம்பொன் பொடி சிந்தும் திருக்கேதாரம் எனீரே!
உரை
   
5வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில்(ல்) அழுந்தாதே,
நாள் ஓடிய நமனார் தமர் நணுகாமுனம் நணுகி,
ஆள் ஆய் உய்ம்மின்! அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே;
கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே!
உரை
   
7பண்ணின் தமிழ் இசை பாடலின், பழ வேய் முழவு அதிர,
கண்ணின்(ன்) ஒளி கனகச்சுனை வயிரம்(ம்) அவை சொரிய,
மண் நின்றன மதவேழங்கள் மணி வாரிக் கொண்டு எறிய,
கிண்ணென்று இசை முரலும் திருக்கேதாரம் எனீரே!
உரை
   
9பொதியே சுமந்து உழல்வீர்; பொதி அவம் ஆவதும் அறியீர்;
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும், வினையால்;
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க(வ்) வரை அடர்த்துக்
கெதி பேறு செய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே!
உரை
   
10நாவின் மிசை அரைய(ன்)னொடு, தமிழ் ஞானசம்பந்தன்,
யாவர் சிவன் அடியார்களுக்கு, அடியான் அடித்தொண்டன்,
தேவன் திருக்கேதாரத்தை ஊரன்(ன்) உரை செய்த
பாவின் தமிழ் வல்லார், பரலோகத்து இருப்பாரே.
உரை