7.3 திருநெல்வாயில் அரத்துறை
இந்தளம்
1கல்வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிவவின் கரை மேல்
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும், நில வெண்மதி சூடிய, நின்மலனே!
“நல் வாய் இல்செய்தார், நடந்தார், உடுத்தார், நரைத்தார், இறந்தார்” என்று நானிலத்தில்
சொல் ஆய்க் கழிகின்றது அறிந்து, அடியேன் தொடர்ந்தேன்; உய்யப் போவது ஓர் சூழல்                                                                                 சொல்லே! .
உரை
   
2கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல்,
நெறி வார் குழலார் அவர் காண, நடம் செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே!
வறிதே நிலையாத இம் மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை; நான் நிலையேன்;
பொறி வாயில் இவ் ஐந்தினையும் அவியப் பொருது, உன் அடியே புகும் சூழல் சொல்லே! .
உரை
   
3புற்று ஆடு அரவம்(ம்) அரை ஆர்த்து உகந்தாய்! புனிதா! பொரு வெள் விடை                                                                                 ஊர்தியினாய்!
எற்றே ஒரு கண் இலன், நின்னை அல்லால், நெல்வாயில் அரத்துறை நின்மலனே!
மற்றே ஒரு பற்று இலன்; எம்பெருமான்! வண்டு ஆர் குழலாள் மங்கை பங்கினனே!
அற்று ஆர் பிறவிக் கடல் நீந்தி ஏறி, அடியேன் உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! .
உரை
   
4கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல்
நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே! நினைவார் மனத்தாய்!
ஓடு புனல் கரை ஆம், இளமை; உறங்கி விழித்தால் ஒக்கும், இப் பிறவி;
வாடி இருந்து வருந்தல் செய்யாது, அடியேன் உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! .
உரை
   
5உலவும் முகிலில்-தலை கல் பொழிய, உயர் வேயொடு இழி நிவவின் கரை மேல்,
நிலவும் மயிலார் அவர் தாம் பயிலும், நெல்வாயில் அரத்துறை நின்மலனே!
புலன் ஐந்தும் மயங்கி, அகம் குழைய, பொரு வேல் ஓர் நமன் தமர் தாம் நலிய,
அலமந்து மயங்கி அயர்வதன் முன், அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே! .
உரை
   
6ஏலம்(ம்) இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல்,
நீலம் மலர்ப் பொய்கையில் அன்னம் மலி, நெல்வாயில் அரத்துறையாய்! ஒரு நெல்-
வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது, அழகா! அலந்தேன், இனி யான்;
ஆல(ந்)நிழலில் அமர்ந்தாய்! அமரா! அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே! .
உரை
   
7சிகரம் முகத்தில்-திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிவவின் கரை மேல்,
நிகர் இல் மயிலார் அவர் தாம் பயிலும், நெல் வாயில் அரத்துறை நின்மலனே!
மகரக்குழையாய்! மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம், பிறவி இது தான்;
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய்! அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே! .
உரை
   
8திண் தேர் நெடுவீதி இலங்கையர் கோன் திரள் தோள் இருபஃதும் நெரித்து அருளி,
ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே!
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால், பரஞ்சோதி! நின் நாமம் பயிலப் பெற்றேன்;
அண்டா! அமரர்க்கு அமரர் பெருமான்! அடியேன் உய்யப் போவது ஓர் சூழல் சொல்லே! .
உரை
   
9மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான், மலர் மேலவன், நேடியும் காண்பு அரியாய்!
நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே!
வாண் ஆர் நுதலார் வலைப்பட்டு, அடியேன், பலவின் கனி ஈஅது போல்வதன் முன்,
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய்! அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே! .
உரை
   
10நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனைத்
தேர் ஊர் நெடுவீதி நல் மாடம் மலி தென் நாவலர் கோன்-அடித்தொண்டன், அணி
ஆரூரன்-உரைத்தன நல்-தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார்
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர்-அவர் ஆகி, ஓர் விண்முழுது ஆள்பவரே .
உரை