7.64 திருத்தினை நகர்
தக்கேசி
1நீறு தாங்கிய திரு நுதலானை, நெற்றிக் கண்ணனை, நிரை வளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையினானை, குற்றம் இ(ல்)லியை, கற்றை அம் சடை மேல்
ஆறு தாங்கிய அழகனை, அமரர்க்கு அரிய சோதியை, வரிவரால் உகளும்
சேறு தாங்கிய திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
உரை
   
2பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி, ஈசன் திருவடி                                                                                 இணைக்கு ஆள்-
துணிய வேண்டிடில், சொல்லுவன்; கேள், நீ: அஞ்சல், நெஞ்சமே! வஞ்சர் வாழ் மதில்                                                                                              மூன்று
அணி கொள் வெஞ்சிலையால் உகச் சீறும் ஐயன், வையகம் பரவி நின்று ஏத்தும்
திணியும் வார் பொழில்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
உரை
   
3வடி கொள் கண் இணை மடந்தையர் தம்பால் மயல் அது உற்று, வஞ்சனைக்கு இடம்                                                                                                  ஆகி,
முடியுமா கருதேல்! எருது ஏறும் மூர்த்தியை, முதல் ஆய பிரானை,
“அடிகள்!” என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன், ஒப்பு இலா முலை உமை கோனை,
செடி கொள் கான் மலி திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை,                                                                                             மனனே! .
உரை
   
4பாவமே புரிந்து, அகலிடம் தன்னில் பல பகர்ந்து, அலமந்து, உயிர் வாழ்க்கைக்கு
“ஆவ!” என்று உழந்து அயர்ந்து வீழாதே, அண்ணல் தன் திறம் அறிவினால் கருதி;
மாவின் ஈர் உரி உடை புனைந்தானை, மணியை, மைந்தனை, வானவர்க்கு அமுதை,
தேவ தேவனை, திருத் தினை நகருள் சிவக் கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
உரை
   
5ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு, உடல் தளர்ந்து, அரு மா நிதி இயற்றி,
“என்றும் வாழல் ஆம், எமக்கு” எனப் பேசும் இதுவும் பொய் எனவே நினை, உளமே!
குன்று உலாவிய புயம் உடையானை, கூத்தனை, குலாவிக் குவலயத்தோர்
சென்று எலாம் பயில் திருத் தினை நகருள் சிவக் கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
உரை
   
6வேந்தராய், உலகு ஆண்டு, அறம் புரிந்து, வீற்றிருந்த இவ் உடல் இது தன்னைத்
தேய்ந்து, இறந்து, வெந்துயர் உழந்திடும் இப் பொக்க வாழ்வினை விட்டிடு, நெஞ்சே!
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை, பரமனை, கடல் சூர் தடிந்திட்ட
சேந்தர் தாதையை, திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
உரை
   
7தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி, தவம் முயன்று, அவம் ஆயின பேசி,
பின்னல் ஆர் சடை கட்டி, என்பு அணிந்தால், பெரிதும் நீந்துவது அரிது; அது நிற்க;
“முன் எலாம் முழு முதல்” என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன் தன்னை,
செந்நெல் ஆர் வயல்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
உரை
   
8பரிந்த சுற்றமும், மற்று வன் துணையும், பலரும், கண்டு அழுது எழ உயிர் உடலைப்
பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால், பேதை வாழ்வு எனும் பிணக்கினைத் தவிர்ந்து;
கருந் தடங்கண்ணி பங்கனை, உயிரை, கால காலனை, கடவுளை, விரும்பி,
செருந்தி பொன் மலர் திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
உரை
   
9நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன், நன்மை ஒன்று இலாத் தேரர் புன் சமண்                                                                                               ஆம்
சமயம் ஆகிய தவத்தினார் அவத்தத்-தன்மை விட்டொழி, நன்மையை வேண்டில்!
உமை ஒர் கூறனை, ஏறு உகந்தானை, உம்பர் ஆதியை, எம்பெருமானை,
சிமயம் ஆர் பொழில்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தினை, சென்று அடை, மனனே! .
உரை
   
10நீடு பொக்கையின் பிறவியைப் பழித்து, நீங்கல் ஆம் என்று மனத்தினைத் தெருட்டி,
சேடு உலாம் பொழில்-திருத் தினை நகருள் சிவக்கொழுந்தின திருவடி இணை தான்
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி, வன் தொண்டன், ஊரன்-உரைத்த
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதிப் பயனே .
உரை