7.92 திருப்புக்கொளியூர் அவிநாசி
குறிஞ்சி
1எற்றால் மறக்கேன், எழுமைக்கும் எம்பெருமானையே?
“உற்றாய்” என்று உன்னையே உள்குகின்றேன், உணர்ந்து உள்ளத்தால்;
புற்று ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே
பற்று ஆக வாழ்வேன்; பசுபதியே! பரமேட்டியே!
உரை
   
2வழி போவார் தம்மோடும் வந்து உடன் கூடிய மாணி-நீ
ஒழிவது அழகோ? சொல்லாய்! அருள், ஓங்கு சடையானே!-
பொழில் ஆரும் சோலைப் புக்கொளியூரில் குளத்து இடை
இழியாக் குளித்த மாணி-என்னைக் கிறி செய்ததே?
உரை
   
3எங்கேனும் போகினும், எம்பெருமானை, நினைந்தக்கால்,
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை;
பொங்கு ஆடு அரவா! புக்கொளியூர் அவிநாசியே!
எம் கோனே! உனை வேண்டிக்கொள்வேன், பிறவாமையே.
உரை
   
4உரைப்பார் உரை உகந்து, உள்க வல்லார் தங்கள் உச்சியாய்!
அரைக்கு ஆடு அரவா! ஆதியும் அந்தமும் ஆயினாய்!
புரைக் காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே!-
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு, காலனையே!
உரை
   
5அரங்கு ஆவது எல்லாம் மாய் இடுகாடு; அது அன்றியும்,
சரம்-கோலை வாங்கி, வரிசிலை நாணியில் சந்தித்து,
புரம் கோட எய்தாய்-புக்கொளியூர் அவிநாசியே!
குரங்கு ஆடு சோலைக் கோயில் கொண்ட குழைக்காதனே.
உரை
   
6“நாத்தானும் உனைப் பாடல் அன்று நவிலாது” எனா,
“சோத்து!” என்று தேவர் தொழ நின்ற சுந்தரச் சோதியாய்!
பூத் தாழ்சடையாய்! புக்கொளியூர் அவிநாசியே!
கூத்தா!-உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே!
உரை
   
7மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி, மலைப்புறம்
சந்திகள்தோறும் சலபுட்பம் இட்டு வழிபட,
புந்தி உறைவாய்! புக்கொளியூர் அவிநாசியே!
நந்தி உனை வேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே
உரை
   
8பேணாது ஒழிந்தேன், உன்னை அலால் பிற தேவரை;
காணாது ஒழிந்தேன்; காட்டுதியேல் இன்னம் காண்பன், நான்;-
பூண் நாண் அரவா! புக்கொளியூர் அவிநாசியே!
காணாத கண்கள் காட்ட வல்ல கறைக்கண்டனே!
உரை
   
9நள்ளாறு, தெள்ளாறு, அரத்துறைவாய் எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய், வேங்கையின் தோலை விரும்பினாய்!-
புள் ஏறு சோலைப் புக்கொளியூரில் குளத்து இடை
உள் ஆடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே?
உரை
   
10நீர் ஏற ஏறும் நிமிர் புன்சடை நின்மல மூர்த்தியை-
போர் ஏறு அது ஏறியை, புக்கொளியூர் அவிநாசியை,
கார் ஏறு கண்டனை,-தொண்டன் ஆரூரன் கருதிய
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை, துன்பமே.
உரை