அறிவுறுத்தல்
 
நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து, நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான், மிகப் பெரிதும் விரைகின்றேன்;
ஆடகச் சீர் மணிக் குன்றே! இடை அறா அன்பு உனக்கும் என்
ஊடு அகத்தே நின்று, உருகத் தந்தருள்; எம் உடையானே!
உரை
   
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன்; இறப்பு அதனுக்கு என் கடவேன்?
வானேயும் பெறில் வேண்டேன்; மண் ஆள்வான் மதித்தும் இரேன்;
தேன் ஏயும் மலர்க் கொன்றைச் சிவனே! எம்பெருமான்! எம்
மானே! `உன் அருள் பெறும் நாள் என்று?' என்றே வருந்துவனே.
உரை
   
வருந்துவன், நின் மலர்ப் பாதம் அவை காண்பான்; நாய் அடியேன்
இருந்து நல மலர் புனையேன்; ஏத்தேன் நாத் தழும்பு ஏற;
பொருந்திய பொன் சிலை குனித்தாய்! அருள் அமுதம் புரியாயேல்,
வருந்துவன் அத் தமியேன்; மற்று என்னே நான் ஆம் ஆறே?
உரை
   
ஆம் ஆறு, உன் திருவடிக்கே அகம் குழையேன்; அன்பு உருகேன்;
பூமாலை புனைந்து ஏத்தேன்; புகழ்ந்து உரையேன்; புத்தேளிர்
கோமான்! நின் திருக்கோயில் தூகேன், மெழுகேன், கூத்து ஆடேன்,
சாம் ஆறே விரைகின்றேன் சதிராலே சார்வானே.
உரை
   
வான் ஆகி, மண் ஆகி, வளி ஆகி, ஒளி ஆகி,
ஊன் ஆகி, உயிர் ஆகி, உண்மையும் ஆய், இன்மையும் ஆய்,
கோன் ஆகி, யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு
வான் ஆகி, நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!
உரை
   
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான்; மனம் நின்பால்
தாழ்த்துவதும், தாம் உயர்ந்து, தம்மை எல்லாம் தொழவேண்டி;
சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை, நாய் அடியேன்,
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான், யானும் உன்னைப் பரவுவனே.
உரை
   
பரவுவார் இமையோர்கள்; பாடுவன நால்வேதம்;
குரவு வார் குழல் மடவாள் கூறு உடையாள், ஒரு பாகம்;
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள், மேன்மேல்; உன்
அரவு வார் கழல் இணைகள் காண்பாரோ, அரியானே?
உரை
   
அரியானே யாவர்க்கும்! அம்பரவா! அம்பலத்து எம்
பெரியானே! சிறியேனை ஆட்கொண்ட பெய் கழல்கீழ்
விரை ஆர்ந்த மலர் தூவேன்; வியந்து அலறேன்; நயந்து உருகேன்;
தரியேன்; நான் ஆம் ஆறு என்? சாவேன்; நான் சாவேனே!
உரை
   
வேனல் வேள் மலர்க் கணைக்கும், வெள் நகை, செவ் வாய், கரிய
பானல் ஆர் கண்ணியர்க்கும், பதைத்து உருகும் பாழ் நெஞ்சே!
ஊன் எலாம் நின்று உருக, புகுந்து ஆண்டான்; இன்று போய்
வான் உளான்; காணாய் நீ, மாளா வாழ்கின்றாயே.
உரை
   
வாழ்கின்றாய்; வாழாத நெஞ்சமே! வல் வினைப் பட்டு
ஆழ்கின்றாய்; ஆழாமல் காப்பானை ஏத்தாதே,
சூழ்கின்றாய் கேடு உனக்கு; சொல்கின்றேன், பல்காலும்;
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே.
உரை