திருப்பூவல்லி
 
இணை ஆர் திருவடி என் தலைமேல் வைத்தலுமே,
துணை ஆன சுற்றங்கள் அத்தனையும், துறந்தொழிந்தேன்;
அணை ஆர் புனல் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
புணையாளன் சீர் பாடி பூவல்லி கொய்யாமோ!
உரை
   
எந்தை, எம் தாய், சுற்றம், மற்றும் எல்லாம், என்னுடைய
பந்தம் அறுத்து, என்னை ஆண்டுகொண்ட பாண்டிப் பிரான்;
அந்த இடைமருதில், ஆனந்தத் தேன் இருந்த
பொந்தைப் பரவி, நாம் பூவல்லி கொய்யாமோ!
உரை
   
நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்து,
தாயின் பெரிதும் தயா உடைய தம் பெருமான்,
மாயப் பிறப்பு அறுத்து, ஆண்டான்; என் வல் வினையின்
வாயில் பொடி அட்டி பூவல்லி கொய்யாமோ!
உரை
   
பண் பட்ட தில்லைப் பதிக்கு அரசைப் பரவாதே,
எண் பட்ட தக்கன், அருக்கன், எச்சன், இந்து, அனல்,
விண் பட்ட பூதப் படை வீரபத்திரரால்
புண் பட்டவா பாடி பூவல்லி கொய்யாமோ!
உரை
   
தேன் ஆடு கொன்றை சடைக்கு அணிந்த சிவபெருமான்
ஊன் நாடி, நாடி வந்து, உட்புகுந்தான்; உலகர் முன்னே
நான் ஆடி ஆடி நின்று, ஓலம் இட, நடம் பயிலும்
வான் நாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ!
உரை
   
எரி மூன்று தேவர்க்கு இரங்கி, அருள்செய்தருளி,
சிரம் மூன்று அற, தன் திருப் புருவம் நெரித்தருளி,
உரு மூன்றும் ஆகி, உணர்வு அரிது ஆம் ஒருவனுமே
புரம் மூன்று எரித்தவார் பூவல்லி கொய்யாமோ!
உரை
   
வணங்க, தலை வைத்து; வார் கழல், வாய், வாழ்த்த வைத்து;
இணங்க, தன் சீர் அடியார் கூட்டமும் வைத்து; எம்பெருமான்,
அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே, ஆடுகின்ற
குணம் கூர, பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!
உரை
   
நெறி செய்தருளி, தன் சீர் அடியார் பொன் அடிக்கே
குறி செய்துகொண்டு, என்னை ஆண்ட பிரான் குணம் பரவி,
முறி செய்து, நம்மை முழுது உழற்றும் பழ வினையைக்
கிறி செய்தவா பாடி பூவல்லி கொய்யாமோ!
உரை
   
பல் நாள் பரவிப் பணி செய்ய, பாத மலர்
என் ஆகம் துன்னவைத்த பெரியோன், எழில் சுடர் ஆய்,
கல் நார் உரித்து, என்னை ஆண்டுகொண்டான்; கழல் இணைகள்
பொன் ஆனவா பாடி பூவல்லி கொய்யாமோ!
உரை
   
பேர் ஆசை ஆம் இந்தப் பிண்டம் அற, பெருந்துறையான்,
சீர் ஆர் திருவடி என் தலைமேல் வைத்த பிரான்,
கார் ஆர் கடல் நஞ்சை உண்டு உகந்த காபாலி,
போர் ஆர் புரம் பாடி பூவல்லி கொய்யாமோ!
உரை
   
பாலும், அமுதமும், தேனுடன், ஆம் பரா பரம் ஆய்,
கோலம் குளிர்ந்து, உள்ளம் கொண்ட பிரான் குரை கழல்கள்
ஞாலம் பரவுவார் நல் நெறி ஆம்; அந் நெறியே
போலும் புகழ் பாடி பூவல்லி கொய்யாமோ!
உரை
   
வானவன், மால், அயன், மற்றும் உள்ள தேவர்கட்கும்
கோன் அவன் ஆய் நின்று, கூடல் இலாக் குணக் குறியோன்
ஆன நெடும் கடல் ஆலாலம் அமுது செய்ய,
போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ!
உரை
   
அன்று, ஆல நீழல் கீழ் அரு மறைகள், தான் அருளி,
நன்று ஆக வானவர், மா முனிவர், நாள்தோறும்,
நின்று, ஆர ஏத்தும் நிறை கழலோன், புனை கொன்றைப்
பொன் தாது பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!
உரை
   
படம் ஆக, என் உள்ளே தன் இணைப் போது அவை அளித்து, இங்கு
இடம் ஆகக் கொண்டிருந்த, ஏகம்பம் மேய பிரான்,
தடம் ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா,
நடம் ஆடுமா பாடி பூவல்லி கொய்யாமோ!
உரை
   
அங்கி, அருக்கன், இராவணன், அந்தகன், கூற்றன்,
செம் கண் அரி, அயன், இந்திரனும், சந்திரனும்,
பங்கம் இல் தக்கனும், எச்சனும், தம் பரிசு அழிய,
பொங்கிய சீர் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!
உரை
   
திண் போர் விடையான், சிவபுரத்தார் போர் ஏறு,
மண்பால், மதுரையில் பிட்டு அமுது செய்தருளி,
தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட,
புண் பாடல் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!
உரை
   
முன் ஆய மால் அயனும், வானவரும், தானவரும்,
பொன் ஆர் திருவடி தாம் அறியார்; போற்றுவதே?
எனாகம் உள் புகுந்து ஆண்டுகொண்டான் இலங்கு அணியாம்
பல் நாகம் பாடி, நாம் பூவல்லி கொய்யாமோ!
உரை
   
சீர் ஆர் திருவடித் திண் சிலம்பு சிலம்பு ஒலிக்கே
ஆராத ஆசை அது ஆய், அடியேன் அகம் மகிழ,
தேர் ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திரு நடம் செய்
பேரானந்தம் பாடி பூவல்லி கொய்யாமோ!
உரை
   
அத்தி உரித்து, அது போர்த்தருளும் பெருந்துறையான்,
பித்த வடிவு கொண்டு, இவ் உலகில் பிள்ளையும் ஆய்,
முத்தி முழு முதல், உத்தரகோசமங்கை வள்ளல்,
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ!
உரை
   
மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித்
தேவார்ந்த கோலத் திகழப் பெருந்துறையான்
கோவாகி வந்தெம்மைக் குற்றேவல் கொண்டருளும்
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ
உரை