திருப்பள்ளி எழுச்சி
 
போற்றி! என் வாழ் முதல் ஆகிய பொருளே! புலர்ந்தது; பூம் கழற்கு இணை துணைமலர் கொண்டு
ஏற்றி, நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும் எழில் நகை கண்டு, நின் திருவடிதொழுகோம்
சேற்று இதழ்க் கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
ஏற்று உயர் கொடி உடையாய்! எமை உடையாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
உரை
   
அருணன், இந்திரன் திசை அணுகினன்; இருள் போய் அகன்றது; உதயம் நின் மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழ எழ, நயனக் கடி மலர் மலர, மற்று அண்ணல் அம்கண் ஆம்
திரள் நிரை அறுபதம் முரல்வன; இவை ஓர் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே! அலை கடலே! பள்ளி எழுந்தருளாயே!
உரை
   
கூவின பூம் குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம்;
ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஒருப்படுகின்றது விருப்பொடு, நமக்கு.
தேவ! நல் செறி கழல் தாள் இணை காட்டாய்! திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
யாவரும் அறிவு அரியாய்! எமக்கு எளியாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
உரை
   
இன் இசை வீணையர், யாழினர், ஒருபால்; இருக்கொடு தோத்திரம் இயம்பினர், ஒருபால்;
துன்னிய பிணை மலர்க் கையினர், ஒருபால்; தொழுகையர், அழுகையர்,துவள்கையர், ஒருபால்;
சென்னியில் அஞ்சலி கூப்பினர், ஒருபால். திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு, இன் அருள் புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
உரை
   
`பூதங்கள்தோறும் நின்றாய்' எனின், அல்லால், `போக்கு இலன், வரவு இலன்,' என,நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல், ஆடுதல், அல்லால், கேட்டு அறியோம், உனைக் கண்டு அறிவாரை.
சீதம் கொள் வயல் திருப்பெருந்துறை மன்னா! சிந்தனைக்கும் அரியாய்! எங்கள் முன்வந்து,
ஏதங்கள் அறுத்து, எம்மை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
உரை
   
பப்பு அற வீட்டு இருந்து உணரும் நின் அடியார், பந்தனை வந்து அறுத்தார்; அவர்பலரும்,
மைப்பு உறு கண்ணியர், மானிடத்து இயல்பின் வணங்குகின்றார். அணங்கின் மணவாளா!
செப்பு உறு கமலங்கள் மலரும் தண் வயல் சூழ் திருப்பெருந்துறை உறைசிவபெருமானே!
இப் பிறப்பு அறுத்து, எமை ஆண்டு, அருள்புரியும் எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
உரை
   
அது, பழச் சுவை என, அமுது என; அறிதற்கு அரிது என, எளிது என; அமரரும்அறியார்.
இது அவன் திருஉரு; இவன், அவன்; எனவே எங்களை ஆண்டுகொண்டு, இங்கு எழுந்தருளும்,
மது வளர் பொழில் திரு உத்தரகோச மங்கை உள்ளாய்! திருப்பெருந்துறை மன்னா!
எது எமைப் பணி கொளும் ஆறு? அது கேட்போம்: எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
உரை
   
முந்திய முதல், நடு, இறுதியும், ஆனாய்; மூவரும் அறிகிலர்; யாவர் மற்றுஅறிவார்?
பந்து அணை விரலியும், நீயும், நின் அடியார் பழம் குடில்தொறும் எழுந்தருளியபரனே!
செம் தழல் புரை திருமேனியும் காட்டி, திருப்பெருந்துறை உறை கோயிலும் காட்டி,
அந்தணன் ஆவதும் காட்டி, வந்து ஆண்டாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!
உரை
   
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள்,
மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!
உரை
   
`புவனியில் போய்ப் பிறவாமையின், நாள் நாம் போக்குகின்றோம் அவமே; இந்தப் பூமி,
சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு' என்று நோக்கி, திருப்பெருந்துறை உறைவாய்! திருமால்ஆம்
அவன் விருப்பு எய்தவும், அலரவன் ஆசைப் படவும், நின் அலர்ந்த மெய்க்கருணையும், நீயும்,
அவனியில் புகுந்து, எமை ஆட்கொள்ள வல்லாய்! ஆர் அமுதே! பள்ளி எழுந்தருளாயே!
உரை