குதிரையைக் கொண்டு குடநா டதன்மிசைச் சதுர்படச் சாத்தாய்த் தானெழுந் தருளியும் பதப்பொருள் : குடநாடு அதன்மிசை - மேல்நாட்டுக்கு, குதிரையைக் கொண்டு - குதிரைகளைக்கொண்டு, சதுர்பட - அழகு பொருந்த, சாத்தாய் - வாணிகக் கூட்டமாய், தான் எழுந்தருளியும் - தானே எழுந்தருளி வந்தும். விளக்கம் : குதிரையைக் கொண்டு சாத்தாய் எழுந்தருளியது : அடிகள், பாண்டியனிடம் குதிரை வாங்குவதற்காகப் பெற்று வந்த நிதி முழுமை யினையும் திருப்பெருந்துறையில் ஆலயத்திருப்பணிக்குச் செலவு செய்துவிட்டார். இதனையறிந்த பாண்டியன் கோபம் கொண்டு அடிகளைத் துன்புறுத்தவே, இறைவன் அடிகளுக்கு அருளும்பொருட்டுக் குதிரை வீரனாய்த் திருப்பெருந்துறையிலிருந்து மதுரை வந்தருளின வரலாறு குறிப்பிடப்பட்டது. திருப்பெருந்துறைக்கு மேற்கே மதுரை இருத்தலால் ‘குடநாடு’ என்றார்.
|