2. கீர்த்தித் திரு அகவல்


35. அரியொடு பிரமற் களவறி யொண்ணான்
நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்

பதப்பொருள் : அரியொடு பிரமற்கு - திருமாலுக்கும் பிரமனுக்கும், அளவு அறி ஒண்ணான் - அளவு அறியப்படாத வனாகிய சிவபெருமான்,நரியைக் குதிரையாக்கிய நன்மையும் - நரியைக் குதிரைகளாகச் செய்த நன்மையும்

விளக்கம் : அடி முடி தேடியது.

முன்னொரு காலத்தில் திருமாலும் பிரமனும் தாம் தாம் பெரியவர் என்ற தருக்கியிருக்க, அங்குச் சோதி வடிவம் ஒன்று தோன்றியது. அதன் திருவடியைப் பன்றி வடிவெடுத்துத் திருமால் தேடியும், திருமுடியை அன்னவடிவெடுத்துப் பிரமன் தேடியும் காணாது திகைத்துத் தங்கள் முன் நின்ற தோற்றம் சிவபெருமானுடையது என்று உணர்ந்து, தங்களது செருக்கு ஒழிந்து, பெருமானை வணங்கினர், (கந்தபுராணம் - அடி முடி தேடிய படலம்)

நரியைப் பரியாக்கியது :

அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் மாணிக்கவாசக அடிகள், ஒருகால், போதிய நிதி பெற்றப் பாண்டியனுக்காகக் குதிரை வாங்க அடிகள் சென்றார். ஆனால், திருப்பெருந்துறையில் இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று, அந்நிதி முழுவதையும் இறைவனுக்கு ஆலயம் எழுப்பச் செலவிட்டார். குதிரை வாங்கவில்லை. பாண்டியன் கோபங் கொண்டு, அடிகளைத் தருவித்து, சிறை செய்து துன்புறுத்தினான். அடியார்க்கு இரங்கும் பெருமான், அடிகளுக்காகக் காட்டிலிருந்த நரிகளைக் குதிரைகள் ஆக்கிப் பாண்டியன்முன் கொண்டுவந்து காட்டி மறைந்தருளினான். (திருவிளையாடற் புராணம் - நரி பரியாக்கிய படலம்)