2. கீர்த்தித் திரு அகவல்


அந்தண னாகி யாண்டுகொண் டருளி
இந்திர ஞாலங் காட்டிய இயல்பும்

பதப்பொருள் : அந்தணண் ஆகி - வேதியனாகி, ஆண்டு கொண்டு அருளி - அடியேனை ஆட்கொண்டருளி, இந்திர ஞாலம் காட்டிய இயல்பும் - மாயம் செய்து மறைந்த தன்மையும்

விளக்கம் : இறைவன் திருப்பெருந்துறையிலே அந்தண வடிவங் கொண்டு அடிகளை ஆட்கொண்டு அருள் செய்தான். ஆனால், மாணவர் பலர் புடைசூழ வந்து அருள் செய்த பின்னர் அவர்களுடன் அவன் மறைந்தருளினான். அது அடிகளுக்குப் பெருமாயமாய்த் தோன்றிற்றாதலால், தம்மை ஆண்டுகொண்டருளியதை இந்திர ஞாலம் காட்டியதாகக் கூறினார்.