தான்அந்தம் இல்லான் தனையடைந்த நாயேனை ஆனந்த வெள்ளத் தழுத்துவித்தான் காணேடீ ஆனந்த வெள்ளத் தழுத்துவித்த திருவடிகள் வானுந்து தேவர்கட்கோர் வான்பொருள்காண் சாழலோ. பதப்பொருள் : ஏடீ - தோழியே, தான் அந்தம் இல்லான் - தான் முடிவில்லாத பெரியோன் என்று உன்னால் சொல்லப்பட்டவன், தனை அடைந்த நாயேனை - தன்னை விரும்பியடைந்த நாய் போன்ற என்னை, ஆனந்த வெள்ளத்து - இன்பக் கடலில், அழுத்துவித்தான் - திளைக்கச் செய்தான்; இதனை அறிந்துகொள். ஆனந்த வெள்ளத்து - இன்பக் கடலில், அழுத்துவித்த திருவடிகள் - உன்னைத் திறைக்கச் செய்த திருவடிகள், வான் உந்து தேவர்க்கு - விண்ணுலகத்தில் வாழ்கின்ற தேவர்களுக்கு, ஓர் வான் பொருள் - ஒப்பற்ற கிடைத்தற்கரிய பெரும்பொருளாகும். விளக்கம் : கீழ்ப்பட்டவளாகிய என்னை இன்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்தவன் பெரியோனாவனோ என்று வினாவினாள். அதற்குத் தனது இன்ப வேட்கையாலன்றி உன் அன்பு நோக்கிய கருணையினால் அவ்வாறு செய்தான்; ஆயினும், மேலான தேவர்க்கும் மேலானவன் அவன் என்று விடை கூறினாள். ‘கனவிலும் தேவர்க்கரியாய் போற்றி, நனவிலும் நாயேற்கருளினை போற்றி’ என்றதையுங் காண்க. இதனால், இறைவன் அடியாரைப் பேரின்ப வெள்ளத்துள் ஆழ்த்துகின்றான் என்பது கூறப்பட்டது. 10
|