12. திருச் சாழல்


கடகரியும் பரிமாவும் தேரும்உகந் தேறாதே
இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.

பதப்பொருள் : ஏடீ - தோழியே, கடகரியும் - மதயானையும், பரிமாவும் - குதிரையையும், தேரும் - இரதத்தையும், உகந்து ஏறாது - விரும்பி ஏறாமல் இடபம் உகந்து - எருதை விரும்பி, ஏறிய ஆறு - ஏறிய விதத்தை, எனக்கு அறிய - எனக்கு விளங்கும்படி, இயம்பு - சொல்லுவாய்.

தடமதில்கள் - பெரிய மதில்களாகிய, அவை மூன்றும் - அக்கோட்டைகள் மூன்றனையும், தழல் எரித்த அந்நாளில் - நெருப்பினால் எரித்துச் சாம்பராக்கிய அக்காலத்தில், திருமால் - திருமாலானவன், இடபமதாய் - எருது உருக்கொண்டு, தாங்கினான் - இறைவனைச் சுமந்தான்.

விளக்கம் : திரிபுரமெரித்தற்பொருட்டு விண்ணவர் அமைத்த தேரின் அச்சு முரிந்தபோது திருமால் எருது வடிவாய்த் தாங்கினான் என்பது வரலாறு. கடகரியும் பரிமாவும் முதலியன இன்மையால் எருதினை ஊர்ந்திலன்; திருமாலினது விருப்பத்திற்கு இயைய ஏறினான் என்பதாம்.

இதனால், சிவபெருமானது இறைமைத் தன்மை கூறப்பட்டது.

15