மூல மாகிய மும்மல மறுக்கும் தூய மேனிச் சுடர்விடு சோதி காதல னாகிக் கழுநீர் மாலை* ஏலுடைத் தாக எழில்பெற அணிந்தும்; பதப்பொருள் : மூலம் ஆகிய - மூலகாரணமாகிய, மும்மலம் அறுக்கும் - மூன்று மலங்களையும் நீக்குகிற, தூய மேனி - பரிசுத்த மாகிய திருமேனியில், சுடர்விடு சோதி - ஒளி வீசுகின்ற சோதியாய் உள்ளவன், காதலன் ஆகி - அன்பரிடத்து அன்புடையனாகி, கழுநீர் மாலை - செங்கழுநீர் மலர் மாலையை, ஏல் உடைத்தாக - பொருத்த முடையதாக, எழில் பெற அணிந்தும் - அழகு பெறத் தரித்தும். விளக்கம் : மும்மலங்களாவன : ஆணவம், மாயை, கன்மம் என்பன. உயிரோடு அநாதியே கலந்திருந்து அறிவை விளங்கவொட்டாது மறைப்பது ஆணவம்; சற்றே அறிவை விளங்க வைப்பது மாயை; அறிவு விளங்கும் போது உயிர்களுக்கு அனுபவத்தைக் கொடுப்பது கன்மம். ஆக, மூன்றுமே துன்பம் தருவன. இம்மூன்றையும் அழித்து இன்பத்தைக் கொடுப்பவன் இறைவன் என்பதைக் காட்டுவார், "மும்மலம் அறுக்கும் சோதி" என்றார். இறைவன் உயிர்களுக்கு இன்பத்தைக் கொடுக்கும் பொருட்டுச் செங்கழுநீர் மலர் மாலையை அழகு பெற அணிந்துகொள்கிறான். இதில் செங்கழுநீர்ப்பூ மாலையாகக் கூறப்பட்டது.
|