இருள்கடிந் தருளிய இன்ப வூர்தி அருளிய பெருமை யருண்மலை யாகவும்; பதப்பொருள் : இருள் கடிந்து அருளிய - அடியார்கட்கு அஞ்ஞான இருளை நீக்கியதனால் ஆகிய, இன்ப ஊர்தி - பேரின்பமாகிய ஊர்தியை, அருளிய பெருமை அருள் - கொடுத்தருளிய பெருமையை உடைய அருளே, மலையாகவும் - மலையாகக்கொண்டும். விளக்கம் : அறியாமை, துன்பத்தைத் தருவது; அறிவு, இன்பத்தைத் தருவது. அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் உயிர்களுக்கு அறிவே வடிவமாயுள்ள இறைவன் துன்பத்தை நீக்கி இன்பத்தை நல்குகிறான். அதனால், ‘இருள் கடிந்தருளிய இன்ப வூர்தி அருளிய பெருமை அருள்’ என்றார். உயிர்கள் வாழ வேண்டும் என்ற அருளே இன்பத்தை வழங்குவதற்குக் காரணமாகையால், 'அருளையே மலையாகவுடையான் இறைவன், ' என்றார். இதில் அருளாகிய மலை கூறப்பட்டது. இதுகாறும் கொடி முதலாக மலையீறாகத் தசாங்கம் எனப்படும் பத்து உறுப்புகளும் கூறப்பட்டன.
|