125. எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும் அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளி; பதப்பொருள் : எப்பெருந்தன்மையும் - எப்படிப்பட்ட பெருந்தன்மையையும், எ எவர் திறமும் - எவ்வகைப்பட்டவர் திறத்தினையும், அப்பரிசு அதனால் - அவ்வத்தன்மைகளால், ஆண்டு கொண்டு அருளி - ஆட்கொண்டருளி. விளக்கம் : உயிர் விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என முத்திறப்படும். விஞ்ஞானகலர் ஆணவமாகிய ஒரு மலம் மட்டும் உடையவர். பிரளயாகலர், ஆணவம், கன்மம் ஆகிய இரு மலம் உடையவர், சகலர், ஆணவம் கன்மம் மாயையாகிய மும்மலம் உடையவர். அதனால், இம்முத்திறப்பட்ட உயிர்களையும் உணர்த்துவார், "எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும்" என்றார். இறைவன் விஞ்ஞானகலர்க்கு உள் நின்றும், பிரளயாகலர்க்கு நாற்றோளும் முக்கண்ணும் கறை மிடறும் கொண்டு முன்னின்று காட்சி கொடுத்தும், சகலர்க்குக் குரு வடிவாய்த் தோன்றியும் ஞானத்தை அருளுவான்; சகலருள்ளும் அவரவரை அவரவர்க்கு ஏற்ற பெற்றியால் ஆட்கொள்வன் ஆதலின், "அப்பரிசதனால் ஆண்டு கொண்டருளி" என்றார்.
|