முதல் தந்திரம்

17. கள்ளுண்ணாமை

1கழுநீர்ப் பசுப் பெறில் கயம் தொறும் தேரா
கழுநீர் விடாய்த்துத் தம் காயம் சுருக்கும்
முழுநீர்க் கள் உண்போர் முறைமை அகன்றோர்
செழுநீர்ச் சிவன் தன் சிவ ஆனந்தத் தேறலே.
உரை
   
2சித்தம் உருக்கிச் சிவம் ஆம் சமாதியில்
ஒத்த சிவ ஆனந்தத்து ஓவாத தேறலைச்
சுத்த மது உண்ணச் சுவ ஆனந்தம் விட்டிடா
நித்தல் இருத்தல் கிடத்தல் கீழ்க் காலே.
உரை
   
3காமமும் கள்ளும் கலதி கட்கே ஆகும்
மா மலமும் சமயத்துள் மயல் உறும்
போ மதி ஆகும் புனிதன் இணை அடி
ஓமய ஆனந்தத் தேறல் உணர்வு உண்டே.
உரை
   
4வாமத்தோர் தாமும் மது உண்டு மாள்பவர்
காமத்தோர் காமக் கள் உண்டே கலங்குவர்
ஓமத்தோர் உள் ஒளிக்கு உள்ளே உணர்வார்கள்
நாமத்தோர் அன்றே நணுகுவர் தாமே.
உரை
   
5உள் உண்மை ஓரார் உணரார் பசு பாசம்
வள்ளன்மை நாதன் அருளினின் வாழ்வு உறார்
தெள் உண்மை ஞானச் சிவயோகம் சேர் உறார்
கள் உண்ணும் மாந்தர் கருத்து அறியாரே.
உரை
   
6மயக்கும் சமய மலம் மன்னு மூடர்
மயக்கும் மது உண்ணும் மா மூடர் தேரார்
மயக்கு உறு மா மாயையை மாயையின் வீடு
மயக்கில் தெளியின் மயக்கு உறும் அன்றே.
உரை
   
7மயங்கும் தியங்கும் கள் வாய்மை அழிக்கும்
இயங்கும் மடவார் தம் இன்பமே எய்தி
முயங்கும் நயம் கொண்ட ஞானத்து முந்தார்
இயங்கும் இடை அறா ஆனந்தம் எய்துமே.
உரை
   
8இராப் பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கு அற ஆனந்தத் தேறல் பருகார்
இராப் பகல் அற்ற இறை அடி இன்பத்து
இராப் பகல் மாயை இரண்டு இடத்தேனே.
உரை
   
9சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள் உண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவ ஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்தில் சார்தலே.
உரை
   
10சத்தன் அருள் தரில் சத்தி அருள் உண்டாம்
சத்தி அருள் தரில் சத்தன் அருள் உண்டாம்
சத்தி சிவம் ஆம் இரண்டும் தன் உள் வைக்கச்
சத்தியம் எண் சித்தித் தன்மையும் ஆமே.
உரை
   
11தத்துவம் நீக்கி மருள் நீக்கித் தான் ஆகிப்
பொய்த்தவம் நீக்கி மெய்ப் போகத்துள் போகியே
மெய்த்த சகம் உண்டு விட்டுப் பரானந்தச்
சித்தி அது ஆக்கும் சிவ ஆனந்தத் தேறலே.
உரை
   
12யோகிகள் கால் கட்டி ஒண் மதி ஆனந்தப்
போத அமுதைப் பொசித்தவர் எண் சித்தி
மோகியர் கள் உண்டு மூடராய் மோகம் உற்று
ஆகும் மதத்தால் அறிவு அழிந்தாரே.
உரை