இரண்டாம் தந்திரம்

4. தக்கன் வேள்வி

1தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை
வெம் தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறை கெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினம் செய்த போதே.
உரை
   
2சந்தி செயக் கண்டு எழுகின்ற அரிதானும்
எந்தை இவன் அல்ல யாமே உலகினில்
பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவம் செய்ய
அந்தம் இலானும் அருள் புரிந்தானே.
உரை
   
3அப்பரிசே அயனார் பதி வேள்வியுள்
அப்பரிசே அங்கி அதிசயம் ஆகிலும்
அப்பரிசே அது நீர்மையை உள் கலந்து
அப்பரிசே சிவன் ஆலிக் கின்றானே.
உரை
   
4அப்பரிசே அயன் மால் முதல் தேவர்கள்
அப்பரிசே அவர் ஆகிய காரணம்
அப்பரிசு அங்கி உள நாளும் உள்ளிட்டு
அப்பரிசு ஆகி அலர்ந்து இருந்தானே.
உரை
   
5அலர்ந்து இருந்தான் என்று அமரர் துதிப்பக்
குலம்தரும் கீழ் அங்கி கோள் உற நோக்கிச்
சிவந்த பரம் இது சென்று கதுவ
உவந்த பெருவழி ஓடி வந்தானே.
உரை
   
6அரி பிரமன் தக்கன் அருக்கன் உடனே
வருமதி வாலை வன்னி நல் இந்திரன்
சிர முக நாசி சிறந்த கை தோள் தான்
அரன் அருள் இன்றி அழிந்த நல்லோரே.
உரை
   
7செவி மந்திரம் சொல்லும் செய் தவத் தேவர்
அவி மந்திரத்தின் அடுக்களை கோலிச்
செவி மந்திரம் செய்து தாம் உற நோக்கும்
குவி மந்திரம் கொல் கொடியது ஆமே.
உரை
   
8நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்
பல்லார் அமரர் பரிந்து அருள் செய்க என
வில்லால் புரத்தை விளங்கு எரி கோத்தவன்
பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே.
உரை
   
9தெளிந்தார் கலங்கினும் நீ கலங்காதே
அளித்து ஆங்கு அடைவது எம் ஆதிப் பிரானை
விளிந்தான் அது தக்கன் வேள்வியை வீயச்
சுளிந்தாங்கு அருள் செய்த தூய் மொழியானே.
உரை