இரண்டாம் தந்திரம்

9. படைத்தல்

1ஆதியோடு அந்தம் இலாத பரா பரம்
போதம் அது ஆகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம்
தீதுஇல் பரை அதன் பால் திகழ் நாதமே.
உரை
   
2நாதத்தில் விந்துவும் நாத விந்துக் களில்
தீது அற்று அகம்வந்த சிவன் சத்தி என்னவே
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த விச்சையில் வந்து எழும் விந்துவே.
உரை
   
3இல்லது சத்தி இடம் தனில் உண்டாகிக்
கல் ஒளி போலக் கலந்து உள் இருந்திடும்
வல்லது ஆக வழி செய்த அப் பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.
உரை
   
4தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய்
பாரச் சதா சிவம் பார் முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்தி ஓர் சாத்தும் ஆனாமே.
உரை
   
5மானின் கண் வான் ஆகி வாயு வளர்ந்திடும்
கானின் கண் நீரும் கலந்து கடினமாய்த்
தேனின் கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப்
பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே.
உரை
   
6புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப் பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப் பானும் பூமிசையான் ஆய்
புவனம் படைப்பான் அப்புண்ணியன் தானே.
உரை
   
7புண்ணியன் நந்தி பொருந்தி உலகு எங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியும்
கண் இயல் பாகக் கலவி முழுதும் ஆய்
மண் இயல் பாக மலர்ந்து எழு பூவிலே.
உரை
   
8நீர் அகத்து இன்பம் பிறக்கும் நெருப்பு இடை
காயத்தில் சோதி பிறக்கும் அக் காற்று இடை
ஓர் உடை நல் உயிர்ப் பாதம் ஒலி சத்தி
நீர் இடை மண்ணின் நிலைப் பிறப்பு ஆமே.
உரை
   
9உண்டு உலகு ஏழும் உமிழ்ந்தான் உடன் ஆகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டு இவ் உலகம் படைக்கும் பொருளே.
உரை
   
10ஓங்கு பெரும் கடல் உள் உறு வானொடும்
பாங்கர் கயிலைப் பராபரன் தானும்
வீங்கும் கமல மலர்மிசை மேல் அயன்
ஆங்கு உயிர் வைக்கும் அது உணர்ந்தானே.
உரை
   
11காரணன் அன்பில் கலந்து எங்கும் நின்றவன்
நாரணன் நின்ற நடு உடலாய் நிற்கும்
பாரணன் அன்பில் பதம் செய்யும் நான்முகன்
ஆரணமாய் உலகாய் அமர்ந்தானே.
உரை
   
12பயன் எளிது ஆம் பரு மா மணி செய்ய
நயன் எளிது ஆகிய நம்பன் ஒன்று உண்டு
அயன் ஒளியாய் இருந்து அங்கே படைக்கும்
பயன் எளிதாம் வயணம் தெளிந்தேனே.
உரை
   
13போக்கும் வரவும் புனிதன் அருள் புரிந்து
ஆக்கமும் சிந்தை அது ஆகின்ற காலத்து
மேக்கு மிக நின்ற எட்டுத் திசை யொடும்
தாக்கும் கலக்கும் தயா பரன் தானே.
உரை
   
14நின்று உயிர் ஆக்கும் நிமலன் என் ஆருயிர்
ஒன்று உயிர் ஆக்கும் அளவை உடல் உற
முன்துயர் ஆக்கும் உடற்கும் துணை அதா
நன்று உயிர்ப் பானே நடுவு நின்றானே.
உரை
   
15ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம் பொனின் மேல் அணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்து உடலாய் உளன்
ஆகின்ற தன்மை செய் ஆண் தகை யானே.
உரை
   
16ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன் பல ஆன
திரு ஒன்றில் செய்கை செகம் முற்றும் ஆமே.
உரை
   
17புகுந்து அறிவான் புவனா பதி அண்ணல்
புகுந்து அறிவான் புரி சக்கரத்து அண்ணல்
புகுந்து அறிவான் மலர் மேல் உறை புத்தேள்
புகுந்து அறியும் முடிக்கு ஆகி நின்றாரே.
உரை
   
18ஆணவச் சத்தியும் ஆம் அதில் ஐவரும்
காரிய காரண ஈசர் கடை முறை
பேணிய ஐந் தொழிலால் விந்துவில் பிறந்து
ஆணவம் நீங்காதவர் எனல் ஆகுமே.
உரை
   
19உற்ற முப்பால் ஒன்று மாயாள் உதய மா
மற்றைய மூன்று மாயோதயம் விந்து
பெற்றவன் நாதம் பரையில் பிறந்ததால்
துற்ற பரசிவன் தொல் விளையாட்டு இதே.
உரை
   
20ஆகாயம் ஆதி சதாசிவர் ஆதி என்
போகாத சத்தியுள் போந்து உடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன் மால் பிரமன் ஆம்
ஆகாயம் பூமி காண அளித்தலே.
உரை
   
21அளியார் முக்கோணம் வயிந்தவம் தன்னில்
அளியார் திரிபுரை ஆம் அவள் தானே
அளியார் சதா சிவம் ஆகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்து செய்வாளே.
உரை
   
22வார் அணி கொங்கை மனோன்மணி மங்கலி
காரணி காரியம் ஆகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமும் ஆமே.
உரை
   
23நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்று அங்கு இயங்கும் அரன் திருமாலவன்
மன்றது செய்யும் மலர் மிசை மேல் அயன்
என்று இவர் ஆக இசைந்து இருந்தானே.
உரை
   
24ஒருவனுமே உலகு ஏழும் படைத்தான்
ஒருவனுமே உலகு ஏழும் அளித்தான்
ஒருவனுமே உலகு ஏழும் துடைத்தான்
ஒருவனுமே உலகோடு உயிர் தானே.
உரை
   
25செந்தாமரை வண்ணன் தீ வண்ணன் எம் இறை
மைந்தார் முகில் வண்ணன் மாயம் செய் பாசத்தும்
கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்
அந்தார் பிறவி அறுத்து நின்றானே.
உரை
   
26தேடும் திசை எட்டும் சீவன் உடல் உயிர்
கூடும் பிறவிக் குணம் செய்த மா நந்தி
ஊடும் அவர் தமது உள்ளத்துள்ளே நின்று
நாடும் வழக்கமும் நான் அறிந்தேனே.
உரை
   
27ஓராய மே உலகு ஏழும் படைப்பதும்
ஓராய மே உலகு ஏழும் அளிப்பதும்
ஓராய மே உலகு ஏழும் துடைப்பதும்
ஓராய மே உலகோடு உயிர்தானே.
உரை
   
28நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடும் கூட்டிக் குழைத்தனர்
ஏதுபணி என்று இசையும் இருவருக்கு
ஆதி இவனே அருளுகின்றானே.
உரை
   
29அப்பரிசு எண்பத்து நான்கு நூறாயிரம்
மெய்ப் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும்
பொய்ப் பரிசு எய்திப் புகலும் மனிதர் கட்கு
இப்பரிசே இருள் மூடி நின்றானே.
உரை
   
30ஆதித்தன் சந்திரன் அங்கி எண் பாலர்கள்
போதித்த வான் ஒலி பொங்கிய நீர் புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே.
உரை