நான்காம் தந்திரம்

2. திருவம்பலச் சக்கரம்

1இருந்த இவ் வட்டங்கள் ஈராறு ரேகை
இருந்த இரேகை மேல் ஈர் ஆறு இருத்தி
இருந்த மனைகளும் ஈர் ஆறு பத்து ஒன்று
இருந்த மனை ஒன்றில் எய்துவன் தானே.
உரை
   
2தான் ஒன்றி வாழிடம் தன் எழுத்தே ஆகும்
தான் ஒன்று அந்நான்கும் தன் பேர் எழுத்து ஆகும்
தான் ஒன்று நால் கோணம் தன் ஐந்து எழுத்து ஆகும்
தான் ஒன்றிலே ஒன்று அவ் அரன் தானே.
உரை
   
3அரகர என்ன அரியது ஒன்று இல்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பு அன்றே.
உரை
   
4எட்டு நிலை உள எம் கோன் இருப்பிடம்
எட்டினில் ஒன்றும் இரு மூன்றும் ஈர் ஏழும்
ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப்
பட்டது மந்திரம் பான் மொழி பாலே.
உரை
   
5மட்டு அவிழ் தாமரை மாது நல்லா ளுடன்
ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர்
விட்ட எழுத்தை விடாத எழுத்துடன்
கட்ட வல்லார் உயிர் காக்க வல்லாரே.
உரை
   
6ஆலயம் ஆக அமர்ந்த பஞ் சாக்கரம்
ஆலயம் ஆக அமர்ந்த இத் தூலம் போய்
ஆலயம் ஆக அறிகின்ற சூக்குமம்
ஆலயம் ஆக அமர்ந்து இருந்தானே.
உரை
   
7இருந்த இவ்வட்டம் இருமூன்று ரேகை
இருந்த அதன் உள் இரேகை ஐந்து ஆக
இருந்த அறைகள் இருபத்து ஐந்து ஆக
இருந்த அறை ஒன்றில் எய்தும் அகாரமே.
உரை
   
8மகாரம் நடுவே வளைத்திடும் சத்தியை
ஓகாரம் வளைத்திட்டும் பிளந்து ஏற்றி
அகாரம் தலையாய் இரு கண் சிகாரம் ஆய்
நகார வகார நல் காலது நாடுமே.
உரை
   
9நாடும் பிரணவ நடு இரு பக்கமும்
ஆடும் அவர் வாய் அமர்ந்து அங்கு நின்றது
நாடு நடுவுள் முக நமசிவாய
வாடும் சிவாய நம புற வட்டத்து ஆயதே.
உரை
   
10ஆயும் சிவாய நம மசி வாய ந
வாயு நமசி வாய யநம சிவாய ந
வாயுமே வாய நமசி எனும் மந்திரம்
ஆயும் சிகாரம் தொட்ட அந்தத்து அடைவிலே.
உரை
   
11அடைவினில் ஐம்பதும் ஐ ஐந்து அறையின்
அடையும் அறை ஒன்றுக்குக் கீழ் எழுத்து ஆக்கி
அடையும் மகாரத்தில் அந்தம் ஆம் க்ஷவ்வும்
அடைவின் எழுத்து ஐம் பத்து ஒன்றும் அமர்ந்ததே.
உரை
   
12அமர்ந்த அரகர ஆம் புற வட்டம்
அமர்ந்த அரிகரி ஆம் அதன் உள் வட்டம்
அமர்ந்த அசபை ஆம் அதன் உள் வட்டம்
அமர்ந்த ரேகையும் ஆகின்ற சூலமே.
உரை
   
13சூலத் தலையினில் தோற்றிடும் சத்தியும்
சூலத் தலையினில் சூழும் ஓங் காரத்தால்
சூலத்து இடை வெளி தோற்றிடும் அஞ்சு எழுத்து
ஆலப் பதிக்கும் அடைவது ஆமே.
உரை
   
14அதுவாம் அகார இகார உகாரம்
அதுவாம் எகாரம் ஒகாரம் அது அஞ்சாம்
அது ஆகும் சக்கர வட்டம் மேல் வட்டம்
பொது ஆம் இடைவெளி பொங்கு நம் பேரே.
உரை
   
15பேர் பெற்றது மூல மந்திரம் பின்னது
சோர் உற்ற சக்கர வட்டத்து உள் சந்தியின்
நேர் பெற்று இருந்திட நின்றது சக்கரம்
ஏர் பெற்று இருந்த இயல்பு இது ஆமே.
உரை
   
16இயலும் இம் மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கும் நாதன்
புயலும் புனலும் பொருந்து அங்கி மண் விண்
முயலும் எழுத்துக்கு முன்னா இருந்ததே.
உரை
   
17ஆறு எட்டு எழுத்தின் மேல் ஆறும் பதினாலும்
ஏறு இட்ட அதன் மேல் விந்துவும் நாதமும்
சீறிட்டு நின்று சிவாய நம என்னக்
கூறிட்டு மும் மலம் கூப்பிட்டுப் போமே.
உரை
   
18அண்ணல் இருப்பது அவளக் கரத்து உளே
பெண்ணின் நல்லாளும் பிரான் அக் கரத்து உளே
எண்ணி இருவர் இசைந்து அங்கு இருந்திடப்
புண்ணிய வாளர் பொருள் அறிவார்களே.
உரை
   
19அவ்விட்டு வைத்து அங்கு அரவிட்டு மேல் வைத்து
இவ்விட்டுப் பார்க்கில் இலிங்கம் அதாய் நிற்கும்
மவ்விட்டு மேலே வளி உறக் கண்ட பின்
தொம் இட்டு நின்ற சுடக் கொழுந்து ஆமே.
உரை
   
20அவ் உண்டு சவ் உண்டு அனைத்தும் அங்கு உள்ளது
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவார் இல்லை
கவ் உண்டு நிற்கும் கருத்து அறிவாளர்க்குச்
சவ் உண்டு சத்தி சதா சிவன் தானே.
உரை
   
21அஞ்சு எழுத்தாலே அமர்ந்தனன் நந்தியும்
அஞ்சு எழுத்தாலே அமர்ந்த பஞ்சாக்கரம்
அஞ்சு எழுத்து ஆகிய வக்கர சக்கரம்
அஞ்சு எழுத்து உள்ளே அமர்ந்து இருந்தானே.
உரை
   
22கூத்தனைக் காணும் குறிபல பேசிடில்
கூத்தன் எழுத்தின் முதல் எழுத்து ஓதினார்
கூத்தனொடு ஒன்றிய கொள்கைய ராய் நிற்பர்
கூத்தனைக் காணும் குறி அது ஆமே.
உரை
   
23அத் திசைக்குள் நின்ற அனலை எழுப்பியே
அத் திசைக்குள் நின்ற நவ் எழுத்து ஓதினால்
அத் திசைக்குள் நின்ற அந்த மறையனை
அத் திசைக்குள் உறவு ஆக்கினன் தானே.
உரை
   
24தானே அளித்திடும் தையலை நோக்கினால்
தானே அளித்திட்டு மேல் உற வைத்திடும்
தானே அளித்த மகாரத்தை ஓதிடத்
தானே அளித்தது ஓர் கல் ஒளி ஆகுமே.
உரை
   
25கல் ஒளியே என நின்ற வட திசை
கல் ஒளியே என நின்றனன் இந்திரன்
கல் ஒளியே என நின்ற சிகாரத்தை
கல் ஒளியே எனக் காட்டி நின்றானே.
உரை
   
26தானே எழுகுணம் தண் சுடராய் நிற்கும்
தானே எழுகுணம் வேதமும் ஆய் நிற்கும்
தானே எழுகுணம் ஆவதும் ஓதிடில்
தானே எழுந்த மறையவன் ஆமே.
உரை
   
27மறையவன் ஆக மதித்த பிறவி
மறையவன் ஆக மதித்திடக் காண்பர்
மறையவன் அஞ்சு எழுத்து உள் நிற்கப் பெற்ற
மறையவன் அஞ்சு எழுத்தாம் அது ஆகுமே.
உரை
   
28ஆகின்ற பாதமும் அந் நவாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே மகாரம் ஆம்
ஆகின்ற சீய் இரு தோள் வவ்வாய் கண்ட பின்
ஆகின்ற அச் சுடர் அவ் இயல்பு ஆமே.
உரை
   
29அவ் இயல்பு ஆய இரு மூன்று எழுத்து ஐந்தையும்
செவ் இயல்பு ஆகச் சிறந்தனன் நந்தியும்
ஒவ் இயல்பு ஆக ஒளி உற நோக்கிடில்
பவ் இயல்பு ஆகப் பரந்து நின்றானே.
உரை
   
30பரந்தது மந்திரம் பல் உயிர்க்கு எல்லாம்
வரம்தரு மந்திரம் வாய்த்திட வாங்கித்
துரந்திடு மந்திரம் சூழ்பகை போக
உரம் தரு மந்திரம் ஓம் என்று எழுப்பே.
உரை
   
31ஓம் என்று எழுப்பித் தன் உத்தம நந்தியை
நாம் என்று எழுப்பி நடு எழு தீபத்தை
ஆம் என்று எழுப்பி அவ்வாறு அறிவார்கள்
மா மன்று கண்டு மகிழ்ந்து இருந்தாரே.
உரை
   
32ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்தும்
பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திக்கும்
ஆகின்ற ஐம்பத்து ஓர் எழுத்துள் நிற்கப்
பாகு ஒன்றி நிற்கும் பரா பரன் தானே.
உரை
   
33பரம் ஆய அஞ்சு எழுத்துள் நடு ஆகப்
பரம் ஆய நவசிம பார்க்கில் மவய நசி
பரம் ஆய சிய நம ஆம் பரத்து ஓதில்
பரம் ஆய வாசி மய நம ஆய் நின்றே.
உரை
   
34நின்ற எழுத்துக்கள் நேர் தரு பூதமும்
நின்ற எழுத்துக்கள் நேர் தரு வண்ணமும்
நின்ற எழுத்துக்கள் நேர் தர நின்றிடில்
நின்ற எழுத்து உள்ளும் நின்றனன் தானே.
உரை
   
35நின்றது சக்கரம் நீளும் புவி எல்லாம்
மன்ற அதுவாய் நின்ற மாய நல் நாடனைக்
கன்று அது ஆகக் கறந்தனன் நந்தியும்
குன்று இடை நின்றிடும் கொள்கையன் ஆமே.
உரை
   
36கொண்ட இச் சக்கரத்து உள்ளே குணம் பல
கொண்ட இச் சக்கரத்து உள்ளே குறி ஐந்தும்
கொண்ட இச் சக்கரம் கூத்தன் எழுத்து ஐந்தும்
கொண்ட இச் சக்கரத்து உள் நின்ற கூத்தே.
உரை
   
37வெளியில் இரேகை இரேகையில் அத்தலை
சுளியில் உகாரம் ஆம் சுற்றிய வன்னி
நெளிதரு கால் கொம்பு நேர் விந்து நாதம்
தெளியும் பிரகாரம் சிவ மந்திரமே.
உரை
   
38அகார உகார சிகார நடுவாய்
வகார மோடு ஆறும் வளியுடன் கூடிச்
சிகாரம் உடனே சிவன் சிந்தை செய்ய
ஒகார முதல்வன் உவந்து நின்றானே.
உரை
   
39அற்ற இடத்தே அகாரம் அது ஆவது
உற்ற இடத்தே உறு பொருள் கண்டிடச்
செற்றம் அறுத்த செழும் சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன் போலும் குளிகையே.
உரை
   
40அவ் என்ற போதினில் உவ் எழுத்து ஆலித்தால்
உவ் என்ற முத்தி உருகிக் கலந்திடும்
மவ் என்று என் உள்ளே வழி பட்ட நந்தியை
எவ் வணம் சொல்லுகேன் எந்தை இயற்கையே.
உரை
   
41நீரில் எழுத்து இவ் உலகர் அறிவது
வானில் எழுத்து ஒன்று கண்டு அறிவார் இல்லை
யார் இவ் எழுத்தை அறிவார் அவர்கள்
ஊனில் எழுத்தை உணர்கிலர் தாமே.
உரை
   
42காலை நடுஉறக் காயத்தில் அக்கரம்
மாலை நடுஉற ஐம்பதும் ஆவன
மேலை நடுஉற வேதம் விளம்பிய
மூலம் நடு உற முத்தித் தானே.
உரை
   
43நாவியின் கீழ் அது நல்ல எழுத்து ஒன்று
பாவிகளத்தின் பயன் அறிவார் இல்லை
ஓவியராலும் அறிய ஒண்ணாது அது
தேவியும் தானும் திகழ்ந்து இருந்தானே.
உரை
   
44அவ்வொடு சவ் என்றது அரன் உற்ற மந்திரம்
அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிகிலர்
அவ்வொடு சவ் என்றது ஆரும் அறிந்த பின்
அவ்வொடு சவ்வும் அனாதியும் ஆமே.
உரை
   
45மந்திரம் ஒன்றுள் மலரால் உதிப்பது
உந்தியின் உள்ளே உதயம் பண்ணா நிற்கும்
சந்தி செய்யா நிற்பர் தாம் அறிகிலர்
அந்தி தொழுது போய் ஆர்த்து அகன்றார்களே.
உரை
   
46சேவிக்கும் மந்திரம் செல்லும் திசை பெற
ஆவிக்குள் மந்திரம் ஆதாரம் ஆவன
பூவுக்குள் மந்திரம் போக்கு அற நோக்கிடில்
ஆவிக்குள் மந்திரம் அங்குசம் ஆமே.
உரை
   
47அருவினில் அம்பரம் அங்கு எழு நாதம்
பெருகு துடி இடை பேணிய விந்து
மருவி அகார சிகார நடுவாய்
உருவிட ஊறும் உறு மந்திரமே.
உரை
   
48ஆறு எழுத்து ஓதும் அறிவார் அறிகிலார்
ஆறு எழுத்து ஒன்று ஆக ஓதி உணரார்கள்
வேறு எழுத்து இன்றி விளம்ப வல்லார்கட்கு
ஓர் எழுத்தாலே உயிர் பெறலாமே.
உரை
   
49ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூ அஞ்சும்
ஆதி எழுத்து அவை ஐம்பதோடு ஒன்று என்பர்
சோதி எழுத்தினில் ஐ இரு மூன்று உள
நாத எழுத்து இட்டு நாடிக் கொள்ளீரே.
உரை
   
50விந்துவிலும் சுழி நாதம் எழுந்திடப்
பந்தத் தலைவி பதினாறு கலை அதாய்க்
கந்தர வாகரம் கால் உடம்பு ஆயினாள்
அந்தமும் இன்றியே ஐம்பத்து ஒன்று ஆயதே.
உரை
   
51ஐம்பது எழுத்தே அனைத்தும் வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமம் களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
ஐம்பது எழுத்தும் போய் அஞ்சு எழுத்து ஆமே.
உரை
   
52அஞ்சு எழுத்தால் ஐந்து பூதம் படைத்தனன்
அஞ்சு எழுத்தால் பல யோனி படைத்தனன்
அஞ்சு எழுத்தால் இவ் அகல் இடம் தாங்கினன்
அஞ்சு எழுத்தாலே அமர்ந்து நின்றானே.
உரை
   
53வீழ்ந்து எழலாம் விகிர்தன் திருநாமத்தைச்
சோர்ந்து ஒழியாமல் தொடங்கும் ஒருவற்குச்
சார்ந்த வினைத் துயர் போகத் தலைவனும்
போந்திடும் என்னும் புரி சடையோனே.
உரை
   
54உண்ணும் மருந்தும் உலப்பு இலி காலமும்
பண் உறு கேள்வியும் பாடலும் ஆய் நிற்கும்
விண் நின்று அமரர் விரும்பி அடி தொழ
எண் நின்று எழுத்து அஞ்சும் ஆகிநின்றானே.
உரை
   
55ஐந்தின் பெருமையே அகல் இடம் ஆவதும்
ஐந்தின் பெருமையே ஆலயம் ஆவதும்
ஐந்தின் பெருமையே அறவோன் வழக்கமும்
ஐந்தின் வகை செயப் பாலனும் ஆமே.
உரை
   
56வேர் எழுத்தாய் விண்ணாய் அப்புறமாய் நிற்கும்
நீர் எழுத்தாய் நிலம் தாங்கியும் அங்கு உளன்
சீர் எழுத்தாய் அங்கியாய் உயிராம் எழுத்து
ஓர் எழுத்து ஈசனும் ஒண் சுடர் ஆமே.
உரை
   
57நால் ஆம் எழுத்து ஓசை ஞாலம் உருவது
நால் ஆம் எழுத்தின் உள் ஞாலம் அடங்கிற்று
நால் ஆம் எழுத்தே நவில வல்லார் கட்கு
நால் ஆம் எழுத்து அது நல் நெறி தானே.
உரை
   
58பட்ட பரிசே பரம் அஞ்சு எழுத்து அதின்
இட்டம் அறிந்திட்டு இரவு பகல் வர
நட்டம் அது ஆடு நடுவே நிலயம் கொண்டு
அட்ட தேசப் பொருள் ஆகி நின்றாளே.
உரை
   
59அகாரம் உயிரே உகாரம் பரமே
மகார மலமாய் வரு முப்பதத்தில்
சிகாரம் சிவம் ஆய் வகாரம் வடிவமாய்
அகாரம் உயிர் என்று அறையலும் ஆமே.
உரை
   
60நகார மகார சிகார நடுவாய்
வகாரம் இரண்டும் வளியுடன் கூடி
ஒகார முதல் கொண்டு ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மனத்து அகத்தானே.
உரை
   
61அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன
அஞ்சுக்கும் அஞ்சு எழுத்து அங்குசம் ஆவன
அஞ்சையும் கூடத் தடுக்க வல்லார் கட்கே
அஞ்சு ஆதி ஆதி அகம் புகல் ஆமே.
உரை
   
62ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகர் ஆதி மாற்றி மகர் ஆதி
நந்தியை மூலத்தே நாடிப் பரை யொடும்
சந்தி செய்வார்க்குச் சடங்கு இல்லை தானே.
உரை
   
63மருவும் சிவாயமே மன்னும் உயிரும்
அருமந்த யோகமும் ஞானமும் ஆகும்
தெருள் வந்த சிவனார் சென்று இவற்றாலே
அருள் தங்கி அச் சிவம் ஆவது வீடே.
உரை
   
64அஞ்சுக அஞ்சு எழுத்து உண்மை அறிந்தபின்
நெஞ்சு அகத்து உள்ளே நிறையும் பராபரம்
வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவு இல்லை
தஞ்சம் இது என்று சாற்றுகின்றேனே.
உரை
   
65சிவாயவொடு அவ்வே தெளிந்து உளத்து ஓதச்
சிவாயவொடு அவ்வே சிவன் உரு ஆகும்
சிவாயவொடு அவ்வும் தெளிய வல்லார்கள்
சிவாயவொடு அவ்வே தெளிந்து இருந்தாரே
உரை
   
66சிகார வகார யகாரம் உடனே
நகார மகார நடுஉற நாடி
ஒகாரம் உடனே ஒருகால் உரைக்க
மகார முதல்வன் மதித்து நின்றானே.
உரை
   
67நம் முதல் ஓர் ஐந்தின் நாடும் கருமங்கள்
அம் முதல் ஐந்தில் அடங்கிய வல்வினை
சிம் முதல் உள்ளே தெளிய வல்லார் கட்குத்
தம் முதல் ஆகும் சதா சிவம் தானே.
உரை
   
68நவமும் சிவமும் உயிர் பரம் ஆகும்
தவம் ஒன்று இலாதன தத்துவம் ஆகும்
சிவம் ஒன்றி ஆய்பவர் ஆதரவால் அச்
சிவம் என்பது ஆனாம் எனும் தெளி உற்றதே.
உரை
   
69கூடிய எட்டும் இரண்டும் குவிந்து அறி
நாடிய நந்தியை ஞானத்து உள்ளே வைத்து
ஆடிய ஐவரும் அங்கு உறவு ஆவார்கள்
தேடி அதனைத் தெளிந்து அறியீரே.
உரை
   
70எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு எனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.
உரை
   
71எட்டு வரையின் மேல் எட்டு வரை கீறி
இட்ட நடுவுள் இறைவன் எழுத்து ஒன்றில்
வட்டத்திலே அறை நாற்பத்து எட்டும் இட்டுச்
சிட்டம் அஞ்சு எழுத்தும் செபி சீக்கிரமே.
உரை
   
72தானவர் சட்டர் சதிரர் இருவர்கள்
ஆன இம் மூவரோடு ஆற்றவர் ஆதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய் சிவ சக்கரத்தானே.
உரை
   
73பட்டன மாதவம் ஆறும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர்
எட்டனை ஆயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்று அறியேனே.
உரை
   
74வித்து ஆம் செக மயம் ஆக வரை கீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப் பின்
உத்தாரம் பன்னிரண்டு ஆதி கலை தொகும்
பத்து ஆம் பிரம சடங்கு பார்த்து ஓதிடே.
உரை
   
75கண்டு எழுந்தேன் கமலம் மலர் உள் இடை
கொண்டு ஒழிந்தேன் உடன் கூடிய காலத்துப்
பண்டு அழியாத பதிவழியே சென்று
நண் பழியாமே நம எனல் ஆமே.
உரை
   
76புண்ணிய வானவர் பூ மழை தூவி நின்று
எண்ணுவர் அண்ணல் இணை அடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நம என்று நாமத்தைக்
கண் என உன்னிக் கலந்து நின்றாரே.
உரை
   
77ஆறு எழுத்து ஆவது ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலு என்பர்
சாவித்திரியில் தலை எழுத்து ஒன்று உள
பேதிக்க வல்லார் பிறவி அற்றார்களே.
உரை
   
78எட்டினில் எட்டு அறை இட்டு ஓர் அறையிலே
கட்டிய ஒன்று எட்டாய்க் காண நிறை இட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டு
மட்டும் உயிர்கட்கு உமாபதியான் உண்டே.
உரை
   
79நம் முதல் அவ்வொடு நாவினர் ஆகியே
அம் முதல் ஆகிய எட்டு இடை உற்று இட்டு
உம் முதல் ஆகவே உண்பவர் உச்சி மேல்
உம் முதல் ஆயவன் உற்று நின்றானே.
உரை
   
80நின்ற அரசு அம் பலகை மேல் நேர் ஆக
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
துன்று எழுகையுள் பூசிச் சுடர் இடைத்து
அன்ற வெதுப்பு இடத் தம்பனம் காணுமே.
உரை
   
81கரண விறளிப் பலகை யமன் திசை
மரணம் இட்டு எட்டின் மகார எழுத்து இட்டு
வரணம் இல் ஐங்காயம் பூசி அடுப்பு இடை
முரணில் புதைத்திட மோகனம் ஆகுமே.
உரை
   
82ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பங்கு படவே பலாசப் பலகையில்
ஆங்கு அரு மேட்டில் கடுப் பூசி விந்து விட்டு
ஓங்காரம் வைத்திடும் உச்சாடனத்துக்கே.
உரை
   
83உச்சி அம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச் சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சதுரத்தின் முது காட்டில் வைத்திட
வைச்சபின் மேலோர் மாரணம் வேண்டிலே.
உரை
   
84ஏய்ந்த அரிதாரம் ஏட்டின் மேலே பூசி
ஏய்ந்த வகாரம் உகாரம் எழுத்து இட்டு
வாய்ந்தது ஓர் வில்லம் பலகை வசியத்துக்கு
ஏய்ந்தவைத்து எண் பதினாயிரம் வேண்டிலே.
உரை
   
85எண்ணாக் கருடனை ஏட்டின் அகாரம் இட்டு
எண்ணாப் பொன் ஒளி எழுவெள்ளி பூசிடா
வெண் நாவல் பலகையில் இட்டு மேற்கே நோக்கி
எண்ணா எழுத்து எட்டாயிரம் வேண்டிலே.
உரை