ஐந்தாம் தந்திரம்

7. யோகம்

1நெறி வழியே சென்று நேர்மையுள் ஒன்றித்
தறி இருந்தால் போல் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண் என்று உணராக்
குறி அறி வாளர்க்குக் கூடலும் ஆமே.
உரை
   
2ஊழிதோறு ஊழி உணர்ந்தவர்க்கு அல்லால்
ஊழிதோறு ஊழி உணரவும் தான் ஒட்டான்
ஆழி அமரும் அரி அயன் என்று உளார்
ஊழி முயன்றும் ஒருச்சி உளானே.
உரை
   
3பூவினில் கந்தம் பொருந்திய வாறு போல்
சீவனுக்கு உள்ளே சிவ மணம் பூத்தது
ஓவியம் போல உணர்ந்து அறிவாளர்க்கு
நாவி அணைந்த நடுதறி ஆமே.
உரை
   
4உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரில் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை உறவே தெளிந்து இருள் நீங்கினால்
முந்தைப் பிறவிக்கு மூல வித்து ஆமே.
உரை
   
5எழுத்தொடு பாடலும் எண் எண் கலையும்
பழித்தலை பாசப் பிறவியும் நீங்கா
வழித்தலை சோமனோடு அங்கி அருக்கன்
வழித்தலை செய்யும் வகை உணர்ந்தேனே.
உரை
   
6விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும்
விரும்பி நின்றே செயின் மெய் உரை ஆகும்
விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும்
விரும்பி நின்றே செயின் விண்ணவன் ஆகுமே.
உரை
   
7பேணில் பிறவா உலகுஅருள் செய்திடும்
காணில் தனது கலவி உளே நிற்கும்
நாணில் நரக நெறிக்கே வழி செயும்
ஊனில் சுடும் அங்கி உத்தமன் தானே.
உரை
   
8ஒத்த செங் கோலார் உலப்பு இலி மாதவர்
எத்தனை ஆயிரம் வீழ்ந்தனர் எண் இலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவன் என்றே அன்பு உறுவார்களே.
உரை
   
9யோகிக்கு யோக ஆதி மூன்று உள கொண்டு உற்றோர்
ஆகத் தகு கிரி ஆதி சரியை ஆம்
தாகத்தை விட்ட சரியை ஒன்றாம் ஒன்றுள்
ஆதித்தன் பத்தியுள் அன்பு வைத்தேனே.
உரை
   
10யோகச் சமயமே யோகம் பல உன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகம் ஆம்
யோக நிர்வாணமே உற்ற பரோதயம்
யோக அபிடேகமே ஒண் சித்தி உற்றலே.
உரை