ஐந்தாம் தந்திரம்

8. ஞானம்

1ஞானத்தின் மிக்க அற நெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்று அன்று
ஞானத்தின் மிக்கவை நல் முத்தி நல்காவா
ஞானத்தின் மிக்கார் நரரின் மிக்காரே.
உரை
   
2சத்தமும் சத்த மனனும் தகுமனம்
உய்த்த உணர்வு உணர்த்தும் அகந்தையும்
சித்தம் என்று இம் மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தம் கடந்தவர் பெற்ற சன்மார்க்கமே.
உரை
   
3தன்பால் உலகும் தனக்கு அருகு ஆவதும்
அன்பால் எனக்கு அருள் ஆவதும் ஆவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவயோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடும் தானே.
உரை
   
4இருக்கும் சேம இடம் பிரமம் ஆகும்
வருக்கம் சராசரம் ஆகும் உலகம்
தருக்கிய ஆசாரம் எல்லாம் தருமே
திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்து உணர்ந்தோர்க்கே.
உரை
   
5அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர் மன்னும் பேர் அருளாளன்
குறியும் குணமும் குரை கழல் நீங்கா
நெறி அறிவார்க்கு இது நீர்த் தொனியாமே.
உரை
   
6ஞானம் விளைந்து எழுகின்றது ஓர் சிந்தையுள்
ஏனம் விளைந்து எதிரே காண்வழி தொறும்
கூனல் மதி மண்டலத்து எதிர் நீர் கண்டு
ஊனம் அறுத்து நின்று ஒண் சுடர் ஆகுமே.
உரை
   
7ஞானிக்கு உடன் குண ஞானத்தில் நான்கும் ஆம்
மோனிக்கு இவை ஒன்றும் கூடா முன் மோகித்து
மேல் நிற்றல் ஆம் சத்தி வித்தை விளைத்திடும்
தான் இக் குலத்தோர் சரியை கிரியையே.
உரை
   
8ஞானத்தின் ஞானாதி நான்கும் மா ஞானிக்கு
ஞானத்தின் ஞானமே நான் எனது என்னாமல்
ஞானத்தில் யோகமே நாத அந்த நல் ஒளி
ஞானக் கிரியையே நல் முத்தி நாடலே.
உரை
   
9நண்ணிய ஞானத்தின் ஞான ஆதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கு அற்றோன்
கண்ணிய நேயம் கரைஞானம் கண்டு உளோன்
திண்ணிய சுத்தன் சிவ முத்தன் சித்தனே.
உரை
   
10ஞானச் சமயமே நாடும் தனைக் காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதய
ஞான நிர்வாணமே நன்று அறிவான் அருள்
ஞான அபிடேகமே நற்குரு பாதமே.
உரை