ஏழாம் தந்திரம்

12. குருபூசை

1ஆகின்ற நந்தி அடித் தாமரை பற்றிப்
போகின்று உபதேசம் பூசிக்கும் பூசையும்
ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல்
போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.
உரை
   
2மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப் பரன்
ஆவயின் ஞான நெறி நிற்றல் அர்ச்சனை
ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம்
சேவடி சேரல் செயல் அறல் தானே.
உரை
   
3உச்சியும் காலையும் மாலையும் ஈசனை
நச்சு மின் நச்சி நம என்று நாமத்தை
விச்சு மின் விச்சி விரி சுடர் மூன்றினும்
நச்சு மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே.
உரை
   
4புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகும் ஆம்
பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகும் ஆம்
எண் இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகும் ஆல்
பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே.
உரை
   
5இந்துவும் பானுவும் இலங்கும் தலத்து இடை
வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரி ஆம்
இந்துவும் பானுவும் இலங்காத் தலத்து இடை
வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே.
உரை
   
6இந்துவும் பானுவும் என்றே எழுகின்றது ஓர்
விந்துவும் நாதமும் ஆகி ஈது ஆனத்தே
சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
நந்தியைப் பூசிக்க நல்பூசை ஆமே.
உரை
   
7மன பவனங்களை மூலத்தான் மாற்றி
அனித உடல் பூதம் ஆக்கி அகற்றிப்
புனிதன் அருள் தனில் புக்கு இருந்து இன்பத்து
தனி உறு பூசை சதாசிவற்கு ஆமே.
உரை
   
8பகலும் இரவும் பயில் கின்ற பூசை
இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆகப்
பகலும் இரவும் பயிலாத பூசை
சகலமும் தான் கொள்வன் தாழ் சடையோனே.
உரை