ஏழாம் தந்திரம்

23. பசு இலக்கணம் - பிராணன்

1உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னும் மறைகள் பயிலும் பரமனை
என் உள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயம் என்று அறிந்து கொண்டேனே.
உரை
   
2அன்னம் இரண்டு உள ஆற்றங் கரையினில்
துன்னி இரண்டும் துணைப் பிரியாது அன்ன
தன்னிலை அன்னம் தனி ஒன்று அது என்றக் கால்
பின்ன மட அன்னம் பேறு அணு காதே.
உரை
   
3வைகரி ஆதியும் மாயா மலா தியும்
பொய் கரி ஆன புருட ஆதி பேதமும்
மெய் கரி ஞானம் கிரியா விசேடத்துச்
செய் கரி ஈசன் அனாதியே செய்ததே.
உரை
   
4அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார் கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
உரை
   
5படர் கொண்ட ஆல் அதின் வித்து அது போலச்
சுடர் கொண்ட அணுவினைத் தூவழி செய்ய
இடர் கொண்ட பாச இருள் அற ஓட்டி
நடர் கொண்ட நல்வழி நாடலும் ஆமே.
உரை
   
6அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணு அற நின்ற கலப்பது உணரார்
இணை இலி ஈசன் அவன் எங்கும் ஆகித்
தணிவு அற நின்றான் சராசரம் தானே.
உரை
   
7மேவிய சீவன் வடிவு அது சொல்லிடில்
கோவின் மயிர் ஒன்று நூறுடன் கூறு இட்டு
மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால்
ஆவியின் கூறு நூறு ஆயிரத்து ஒன்றே.
உரை
   
8உண்டு தெளிவன் உரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணம் இல்லை ஆயினும்
பண்டு பயிலும் பயில் சீவனார் பின்னைக்
கண்டு சிவன் உருக் கொள்வர் கருத்து உளே.
உரை
   
9மாயா உபாதி வசத்து ஆகும் சேதனத்து
ஆய குரு அருளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோடு ஒன்றி ஒன்றாது உயிர்
ஆய துரியம் புகுந்து அறிவு ஆகவே.
உரை
   
10கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறி கட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒரு குடம் பால் போதும்
மற்றைப் பசுக்கள் வறள் பசு தானே.
உரை
   
11கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வது என்
எல்லை கடப்பித்து இறைவன் அடி கூட்டி
வல்ல செய்து ஆற்ற மதித்த பின் அல்லது
கொல்லை செய் நெஞ்சம் குறிப்பு அறியாதே.
உரை
   
12சீவன் எனச் சிவன் என்ன வேறு இல்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனாய் இட்டு இருப்பரே.
உரை
   
13குண விளக்கு ஆகிய கூத்தப் பிரானும்
மண விளக்கு ஆகிய மன் உயிர்க்கு எல்லாம்
பண விளக்கு ஆகிய பல் தலை நாகம்
கண விளக்கு ஆகிய கண் காணி ஆகுமே.
உரை
   
14அறிவாய் அறியாமை நீங்கி அவனே
பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன போதன்
அறிவாய் அவற்றின் உள் தானா அறிவன்
செறிவு ஆகி நின்ற அச் சீவனும் ஆகுமே.
உரை
   
15ஆறு ஆறின் தன்மை அறியாது இருந்தேனுக்கு
ஆறு ஆறின் தன்மை அறிவித்தான் பேர் நந்தி
ஆறு ஆறின் தன்மை அருளால் அறிந்தபின்
ஆறு ஆறுக்கு அப்புறம் ஆகி நின்றானே.
உரை
   
16சிவம் ஆகிய அருள் நின்று அறிந்து ஓரார்
அவம் ஆம் மலம் ஐந்தும் ஆவது அறியா
தவம் ஆன செய்து தலைப் பறிகின்றார்
நவம் ஆன தத்துவம் நாட கிலாரே.
உரை
   
17நாள் தோறும் ஈசன் நடத்தும் தொழில் உன்னார்
நாள் தோறும் ஈசன் நயந்து ஊட்டல் நாடிடார்
நாள் தோறும் ஈசன் நல்லோர்க்கு அருள் நல்கல் ஆல்
நாள் தோறும் நாடார்கள் நாள் வினை யாளரே.
உரை