எட்டாம் தந்திரம்

3. அவத்தை பேதம்
கீழாலவத்தை

1ஐ ஐந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கை கண்ட பல் நான்கில் கண்டு அங் கனா என்பர்
பொய் கண்டு இலாத புருடன் இதயம் சுழுனை
மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே.
உரை
   
2முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆகச்
செப் பதின் நான்காய்த் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி
அப் பதி ஆகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம் ஈறு ஆய்த் தேர்ந்து கொள்ளீரே.
உரை
   
3இந்தியம் ஈர் ஐந்து ஈர் ஐந்து மாத்திரை
மந்திரம் ஆய் நின்ற மாருதம் ஈர் ஐந்தும்
அந்தக் கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும்
பந்த அச் சக்கரப் பால் அது ஆகுமே.
உரை
   
4பார் அது பொன்மை பசுமை உடையது
நீர் அது வெண்மை செம்மை நெருப்பு அது
கார் அது மாருதம் கருப்பை உடையது
வானகம் தூமம் மறைந்து நின்றாரே.
உரை
   
5பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்து உளும்
ஏதம் படம் செய்து இருந்த புறநிலை
ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு
ஆதி அவத்தைக் கருவி தொண்ணூற்று ஆறே.
உரை
   
6இட வகை சொல்லில் இருபத்து அஞ்சு ஆனை
படு பர சேனையும் பாய் பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள் உறு நால்வர்
அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே.
உரை
   
7உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பு இடை நின்ற உயிரை அறியார்
உடம்பொடு உயிர் இடை நட்பு அறியாதார்
மடம் புகு நாய் போல் மயங்கு கின்றாரே.
உரை
   
8இருக்கின்ற வாறு ஒன்று அறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகம் தேர்ந்து
உருக் கொண்டு தொக்க உடல் ஒழியாதே.
உரை
   
9ஒளித்திட்டு இருக்கும் ஒருபதினாலை
அளித்தனன் என் உள்ளே ஆறியன் வந்து
அளிக்கும் கலைகளின் அறுபத்து
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.
உரை
   
10மண்ணினில் ஒன்று மலர் நீரும் அங்காகும்
பொன்னினில் அங்கி புகழ் வளி ஆகாயம்
மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய்
உன்னின் முடிந்த ஒரு பூத சயமே.
உரை
   
11முன்னிக்கு ஒருமகன் மூர்த்திக்கு இருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை
கன்னியைக் கன்னியே காதலித்தாளே.
உரை
   
12கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டை அது ஆகிப் பரந்த வியாக்கிரத்து
அண்டமும் தான் ஆய் அமர்ந்து நின்றானே.
உரை
   
13நின்றவன் நிற்கப் பதினாலில் பத்து நீத்து
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனை வாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவு அதே.
உரை
   
14தானம் இழந்து தனி புக்கு இதயத்து
மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி
ஆன விரிவு அறியா அவ் வியத்தத்தின்
மேனி அழிந்து சுழுத்தியது ஆமே.
உரை
   
15சுழுனையைச் சேர்ந்து உள மூன்று உடன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன் தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே இருந்து
விழுமப் பொருளுடன் மேவி நின்றானே.
உரை
   
16தானத்து எழுந்து தருக்கும் துரியத்தின்
வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டுக்
கானத்து எழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்து அவித்தை விட்டு ஊமனின் நின்றானே.
உரை
   
17ஊமை எழுத்தொடு பேசும் எழுத்து உறில்
ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓமயம் உற்றது உள் ஒளி பெற்றது
நாமயம் அற்றது நாம் அறியோமே.
உரை
   
18துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே
நரிகள் பதினாலும் நஞ்சு உண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே.
உரை
   
19மாறா மலம் ஐந்தான் மன்னும் அவத்தையின்
வேறு ஆய மாயா அநு கரண ஆதிக்கு இங்கு
ஈறு ஆகாதே எவ் உயிரும் பிறந்து இறுந்து
ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே.
உரை
   
20உண்ணும் தன் ஊடு ஆடாது ஊட்டிடும் மாயையும்
அண்ணல் அருள் பெற்ற முத்தி அது ஆவது
நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து
எண்ணூறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே.
உரை
   
21அதி மூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அரும் கன்மம் உன்னித்
திதம் ஆன கேவலம் இத் திறம் சென்று
பரம் ஆகா வைய அவத்தைப் படுவானே.
உரை
   
22ஆசான் முன்னே துயில் மாணவர்தமைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல் போல்
நேசாய ஈசனு நீடு ஆணவத் தரை
ஏசாத மாயாள் தன்னாலே எழுப்புமே.
உரை
   
23மஞ்சொடு மந்தாகினி குடம் ஆம் என
விஞ்சு அறி வில்லோன் விளம்பு மிகுமதி
எஞ்சலில் ஒன்று எனும் ஆறு என இவ் உடல்
அஞ்சு உணு மன்னன் அன்றே போம் அளவே.
உரை
   
24படி உடை மன்னவன் பாய் பரி ஏறி
வடி உடை மாநகர் தான் வரும் போது
அடி உடை ஐவரும் அங்கு உறை வோரும்
துடி இல்லம் பற்றித் துயின்றனர் தாமே.
உரை
   
25நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின்
நேரான வாறு உன்னி நீடு நனவினில்
நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து
நேர் ஆம் பரத்துடன் நிற்பது நித்தமே.
உரை
   
மத்திய சாக்கிராவத்தை
1சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோ தாயி
சாக்கிர சொப்பனம் தன் இடை மா மாயை
சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற் காமியம்
சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே.
உரை
   
2மாயை எழுப்பும் கலாதியை மற்று அதின்
நேய விராகு ஆதி ஏய்ந்த துரியத்துத்
தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி
ஆயினன் அந்தச் சகலத்து உளானே.
உரை
   
3மேவிய அந்தகன் விழி கண் குருடன் ஆம்
ஆவயின் முன் அடிக் காணும் அது கண்டு
மேவும் தடி கொண்டு சொல்லும் விழிபெற
மூவயினான் மா முயலும் கருமமே.
உரை
   
4மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள்
ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறுபோல்
அத்தனும் ஐம் பொறி ஆடகத்து உள் நின்று
சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணும் ஆறே.
உரை
   
5வைச்சன வச்சு வகை இருபத்து அஞ்சு
முச்சும் ஊடன் அணைவான் ஒருவன் உளன்
பிச்சன் பெரியன் பிறப்பு இலி என்று என்று
நச்சி அவன் அருள் நான் உய்ந்த வாறே.
உரை
   
6நாலு ஆறு உடன் புருடன் அற்று தத்துவமுடன்
வேறு ஆன ஐ ஐந்து மெய்ப்புருடன் பரம்
கூறா வியோமம் பரம் எனக் கொண்டனன்
வேறு ஆன நாலு ஏழு வேத அந்த தத்துவமே.
உரை
   
7ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை
கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன்புக்கு
மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும்
காலம் கொண்டான் அடி காணலும் ஆமே.
உரை
   
8நாடிகள் பத்தும் நலம் திகழ் வாயுவும்
ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும்
கூடிய காமம் குளிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.
உரை
   
9பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும்
உய்த்த துரியமும் உள் உணர் காலமும்
மெய்த்த வியோமமும் மேலைத் துரியமும்
தத்துவ நால் ஏழு என உன்னத் தக்கதே.
உரை
   
10விளங்கிடும் முந்நூற்று முப்பதோடு ஒருபான்
தளம் கொள் இரட்டிய ஆறு நடந்தால்
வணங்கிடும் ஐம் மலம் வாயு எழுந்து
விளங்கிடும் அவ்வழி தத்துவம் நின்றே.
உரை
   
11நாலு ஒரு கோடியே நாற்பத்து எண் ஆயிரம்
மேலும் ஓர் ஐந்து நூறு வேறாய் அடங்கிடும்
பால் அவை தொண்ணூறோடு ஆறு உட் படும் அவை
கோலிய ஐ ஐந்துள் ஆகும் குறிக்கிலே.
உரை
   
12ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொது என்பர்
ஆகின்ற ஆறா அரும் சைவர் தத்துவம்
ஆகின்ற நால் ஏழ் வேதாந்தி வயின் அவர்க்கு
ஆகின்ற நாலு ஆறு ஐந்தும் மாய வாதிக்கே.
உரை
   
13தத்துவம் ஆனது தன் வழி நின்றிடில்
வித்தகன் ஆகி விளங்கி இருக்கலாம்
பொய்த்தவம் ஆம் அவை போயிடும் அவ்வழி
தத்துவம் ஆவது அகார எழுத்தே.
உரை
   
14அறிவு ஒன்று இலாதன ஐ ஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீ என்று அருள் செய்தார் நந்தி
அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே.
உரை
   
15சாக்கிர சாக்கிரம் ஆதி தனில் ஐந்தும்
ஆக்கும் மல அவத்தை ஐந்து நனவு ஆதி
போக்கி இவற்றொடும் பொய்யான ஆறு ஆறு
நீக்கி நெறி நின்றான் ஆகியே நிற்குமே.
உரை
   
16ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு
ஆணவம் ஆதி நான்கு ஆம் ஆற் அரனுக்கு
ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப
ஆணவம் ஒன்றே சதா சிவற்கு ஆவதே.
உரை
   
அத்துவாக்கள்
1தத்துவம் ஆறு ஆறு தன் மனு ஏழ்கோடி
மெய்த்தகு அன்னம் ஐம் பான் ஒன்று மேதினி
ஒத்து இரு நூற்று இருபான் நான்கு என்பான் ஒன்று
வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே.
உரை
   
2நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து
ஓடும் அவரோடு உள் இருபத்து அஞ்சும்
கூடுவர் கூடிக் குறிவழியே சென்று
தேடிய பின்னர்த் திகைத்து இருந்தார்களே.
உரை
   
3சாக்கிர சாக்கிரம் ஆதித் தலை ஆக்கி
ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்துத்
தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது
தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே.
உரை
   
சுத்த நனவாதி பருவம்
1நனவு ஆதி தூலமே சூக்கப் பகுதி
அனது ஆன ஐ ஐந்தும் விந்துவின் சத்தி
தனது ஆம் விந்து தான் நின்று போந்து
கனவா நனவில் கலந்தது இவ் ஆறே.
உரை
   
2நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார்
நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார்
நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார்
நனவில் கனவோடு நல் செய்தி ஆனதே.
உரை
   
3செறியும் கிரியை சிவ தத்துவம் ஆம்
பிறிவில் சுக யோகம் பேர் அருள் கல்வி
குறிதல் திருமேனி குணம் பல ஆகும்
அறிவில் சரா சரம் அண்டத்து அளவே.
உரை
   
4ஆதி பரம் சிவம் சத்தி சதாசிவம்
ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம்
போதம் கலை கால நியதி மா மாயை
நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே.
உரை
   
5தேசு திகழ் சிவம் சத்தி சதா சிவம்
ஈசன் நல் வித்தை இராகம் கலைகாலம்
ஆசு அகல் வித்தை நியதி மகா மாயை
ஆசு இல் புருட ஆதி ஆன்மா ஈறு ஆறே.
உரை
   
6ஆணவ மாயையும் கன்மமும் மா மலம்
காணு முளைக்கும் தவிடு உமிஆன்மாவும்
தாணுவை ஒவ்வாமல் தண் துலம் ஆய் நிற்கும்
பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே.
உரை
   
7பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒரு வண்ணம்
பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
உரை
   
8உடல் இந்திய மனம் ஒண்புத்தி சித்தம்
அடல் ஒன்று அகந்தை அறியாமை மன்னிக்
கெடும் அவ் உயிர் மயல் மேலும் கிளைத்தால்
அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே.
உரை
   
9தன் தெரியாத அதீதம் தன் காண அம்
சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம்
பெற்ற சுழுத்திப் பின் பேசு உறும் காதலால்
மற்று அது உண்டிக் கன நனவு ஆதலே.
உரை
   
10நனவில் கனவு இல்லை ஐந்து நனவில்
கனவு இலாச் சூக்குமம் காணும் சுழுத்தி
தனல் உண் பகுதியே தன் கூட்டு மாயை
நனவில் துரியது அதீதம் தலை வந்தே.
உரை
   
11ஆறு ஆறில் ஐ ஐந்து அகல நனா நனா
ஆறாம் அவை விட ஆகும் நனாக் கனா
வேறு ஆன ஐந்தும் விடவே நனா வினில்
ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே.
உரை
   
12மாயையில் வந்த புருடன் துரியத்தில்
ஆய முறை விட்டதுவும் தான் அன்றாகிச்
சேய கேவல விந்துடன் செல்லச் சென்றக் கால்
ஆய தனுவின் பயன் இல்லை ஆமே.
உரை
   
13அதீதத்து துரியத்து அறிவன் ஆம் ஆன்மா
அதீதத் துரிய அதனால் புரிந்தால்
அதீதத்து எழுந்து அறிவு ஆகிய மானன்
முதிய அனலில் துரியத்து முற்றுமே.
உரை
   
14ஐ ஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம்
கை கண்ட ஐ ஐந்தில் கண்டம் கனா என்பர்
பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின்
மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே.
உரை
   
15புரி அட்டகமே பொருந்தல் நனவு
புரி அட்டகம் தன்னின் மூன்று கனவு
புரி அட்டகத்தில் இரண்டு சுழுத்தி
புரி அட்டகத்து ஒன்று புக்கல் துரியமே.
உரை
   
16நனவின் நனவு புலன் இல் வழக்கம்
நனவில் கனவு நினைத்தல் மறத்தல்
நனவில் சுழுத்தி உண் ஆடல் இலாமை
நனவில் துரியம் அதீதத்து நந்தியே.
உரை
   
17கனவின் நனவு போல் காண்டல் நனவு ஆம்
கனவினில் கண்டு மறத்தல் கனவு ஆம்
கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அணு ஆதி செய்தலில் ஆன துரியமே.
உரை
   
18சுழுத்தி நனவு ஒன்றும் தோன்றாமை தோன்றல்
சுழுத்தி கனவு அதன் உண்மை சுழுத்தியில்
சுழுத்தி அறிவு அறிவாலே அழிகை
சுழுத்தி துரியம் ஆம் சொல் அறும் பாழே.
உரை
   
19துரிய நனவு ஆம் இதம் உணர் போதம்
துரியக் கனவு ஆம் அகம் உணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரம் எனத் தோன்றிடும் தானே.
உரை
   
20அறிவு அறிகின்ற அறிவு நனவு ஆம்
அறிவு அறியாமை அடையக் கனவு ஆம்
அறிவு அறி அவ் அறியாமை சுழுத்தி
அறிவு அறிவு ஆகும் ஆனதுரியமே.
உரை
   
21தான் எங்கும் ஆய அவனை அம் மலம் தான் விட்டு
ஞானம் தனது உரு ஆகி நயந்தபின்
தான் எங்கும் ஆய் நெறி நின்றது தான் விட்டு
மேன் அந்தச் சூக்கம் அவை வன்னம் மேல் இட்டே.
உரை
   
22ஐ ஐந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில்
எய்யும் நனவு கனவு சுழுத்தியா
மெய்யும் பின் சூக்கமும் மெய்ப் பகுதி மாயை
ஐயமும் தான் அவன் அத் துரியத்தனே.
உரை
   
23ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும்
ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன்
ஈது என்று அறியும் அறிவை அறிந்தபின்
ஈது என்று அறியும் இயல்பு உடையோனே.
உரை
   
24உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய்
அயல் புணர்வு ஆகி அறிவாய்ச் செறிவாய்
நயப்பு உறு சத்தியும் நாதன் உலகு ஆதி
இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே.
உரை
   
25சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி
ஒத்து உறு பாச மலம் ஐந்தோடு ஆறு ஆறு
தத்துவ பேதம் சமைத்துக் கருவியும்
வைத்தனன் ஈசன் மலம் அறும் ஆறே.
உரை
   
26சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை
சாக்கிரா தீதம் துரியத்தில் தான் உறச்
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடாச்
சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே.
உரை
   
27மலக் கலப்பாலே மறைந்தது சத்தி
மலக் கலப்பாலே மறைந்தது ஞானம்
மலக் கலப்பாலே மறைந்தனன் தாணு
மலக் கலப்பு அற்றான் மதி ஒளி ஆமே.
உரை
   
28திகைக் கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று
நகைக் கின்ற நெஞ்சுள் நரிக் குட்டி நான்கு
வகைக் கின்ற நெஞ்சின் உள் ஆனைக் கன்று ஐந்து
பகைக் கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே.
உரை
   
29கதறு பதி னெட்டுக் கண்களும் போகச்
சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும்
விதறு படா முன்னம் மெய் வழி நின்றால்
அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே.
உரை
   
30நனவு அகத்தே ஒரு நால் ஐந்தும் வீடக்
கனவு அகத்தே உள் கரணங்களோடு
முனவு அகத்தே நின்று உதறி உள் புக்கு
நினைவு அகத்து இன்றி சுழுத்தி நின்றானே.
உரை
   
31நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய்
ஒன்றி உலகின் நியம் ஆதிகள் உற்றுச்
சென்று துரிய ஆதீதத்தே சில காலம்
நின்று பரன் ஆய் நின்மலன் ஆமே.
உரை
   
32ஆன அவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத்
தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி
மேனிகள் ஐந்தும் போய் விட்டுச் சிவம் ஆகி
மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே.
உரை
   
33மண்டலம் மூன்றின் உள் மாய நல் நாடனைக்
கண்டு கொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற
விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆகத்
தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே.
உரை
   
34போது அறியாது புலம்பின புள் இனம்
மாது அறியா வகை நின்று மயங்கின
வேதறி ஆவணம் நின்றான் எம் இறை
சூது அறிவார் உச்சி சூடி நின்றாரே.
உரை
   
35கருத்து அறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே
பொருத்து அறிந்தோன் புவனாபதி நாடித்
திருத்து அறிந்தேன் மிகு தேவர் பிரானை
வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே.
உரை
   
36ஆன விளக்கு ஒளி தூண்டும் அவன் என்னத்
தான விளக்கு ஒளியாம் மூல சாதனத்து
ஆன விதி மூலத் தானத்தில் அவ் விளக்கு
ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே.
உரை
   
37உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய
விண் நாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்து ஐவர் கூடிய சந்தியில்
கண்ணாடி காணும் கருத்து என்றானே.
உரை
   
38அறியாத வற்றை அறிவான் அறிவான்
அறிவான் அறியாதான் தன் அறிவு ஆகான்
அறியா தவத்தை அறிவானைக் கூட்டி
அறியாது அறிவானை யார் அறிவாரே.
உரை
   
39துரிய தரிசனம் சொற்றோம் வியோமம்
அரியன தூடணம் அந் நனவு ஆதி
பெரியன கால பரம்பில் துரியம்
அரிய அதீதம் அதீதத்தம் ஆமே.
உரை
   
40மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன்
மாயையின் மற்று அது நீவு தன் மாயை ஆம்
கேவலம் ஆகும் சகலமா யோனியுள்
தோயும் மனிதர் துரியத்துள் சீவனே.
உரை
   
கேவல சகல சுத்தம்
1தன்னை அறி சுத்தன் தற்கே ஏவலன் தானும்
பின்னம் உற நின்ற பேத சகலனும்
மன்னிய சத்து அசத்து சத சத்துடன்
துன்னுவர் தத்தம் தொழிற்கு அளவு ஆகவே.
உரை
   
2தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான் செய்த வினைப் பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே.
உரை
   
3பாசம் அது ஆகும் பழமலம் பற்று அற
நேசம் அதாய் நின்ற ஆறாது நீங்கிடக்
காசம் இலாத குணம் கேவல சுத்தம்
ஆசு அற நிற்றல் அது சுத்த சைவமே.
உரை
   
4ஆம் உயிர் கேவலம் மா மாயை இன் நடந்து
ஆம் உயிர் மாயை எறிப்ப அறிவு உற்றுக்
காமியம் மாயேயமும் கலவா நிற்பத்
தாம் உறு பாசம் சகல அத்தம் ஆமே.
உரை
   
5சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர்
புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர்
நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள்
நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே.
உரை
   
6தாவிய மாயையில் தங்கும் பிரளய
மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன
ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர்
ஆவயின் நூற்று எட்டு உருத்திரர் ஆமே.
உரை
   
7ஆகின்ற கேவலத்து ஆணவத் தானவர்
ஆகின்ற இத் தேசர் ஆம் அனந்த ஆதியர்
ஆகின்ற எண்மர் எழு கோடி மந்திரர்
ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே.
உரை
   
8ஆம் அவரில் சிவனார் அருள் பெற்று உளோர்
போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு
ஓம் மயம் ஆகி ஒடுங்கனலின் மலம்
தோம் அறு சுத்தா அவத்தைத் தொழிலே.
உரை
   
9ஓரினும் மூவகை நால் வகையும் உள
தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை
சாரியல் ஆயவை தாமே தணப் பவை
வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே.
உரை
   
10பொய் ஆன போதாந்தம் ஆறு ஆறும் விட்டு அகன்று
எய்யாமை நீங்கவே எய்தவன் தான் ஆகி
மெய் ஆம் சரா சரம் ஆய் வெளி தன் உள்புக்கு
எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே.
உரை
   
11அனாதி பசு வியாத்தி ஆகும் இவனை
அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி
அனாதியில் கேவலம் அச்ச கலத்து இட்டு
அனாதி பிறப்பு அறச் சுத்தத்து உளாகுமே.
உரை
   
12அந்தரம் சுத்தா வத்தை கேவலத்து ஆறு
தந்தோர் தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத்து
இன் பால் துரியத்து இடையே அறிவுறத்
தன் பால் தனை அறி தத்துவம் தானே.
உரை
   
13ஐ ஐந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும்
மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும்
துய்ய அவ் வித்தை முதல் மூன்றும் தொல் சத்தி
ஐய சிவம் சித்தி ஆம் தோற்றம் அவ்வாறே.
உரை
   
14ஐ ஐந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும்
மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில்
கை கண்ட சத்தி சிவ பாகத்தே காண
எய்யும் படி அடங்கும் நால் ஏழ் எய்தியே.
உரை
   
15ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர்
பேணிய மாயைப் பிரளயாகலர் ஆகும்
காணும் உருவினர் காணாமை காண்பவே
பூணும் சகலர் முப் பாசமும் புக்கோரே.
உரை
   
16ஆணவம் ஆகும் விஞ்ஞான கலருக்குப்
பேணிய மாயை பிரளயா கலருக்கே
ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே
காணும் சகலர்க்குக் காட்டு மலங்களே.
உரை
   
17கேவலம் தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர்
கேவலம் தன்னில் கிளர் விந்து சத்தியால்
ஆவயில் கேவலத்து அச் சகலத்தையும்
மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே.
உரை
   
18மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து
மாயையும் தோன்றா வகை நிற்க ஆணவ
மாய சகலத்துக் காமிய மாமாயை
ஏய மன் நூற்று எட்டு உருத்திரர் என்பவே.
உரை
   
19மும் மலம் கூடி முயங்கி மயங்குவோர்
அம் மெய்ச் சகலத்தர் தேவர் சுரர் நரர்
மெய்ம்மை இல் வேதா விரிமிகு கீடாந்தத்து
அம் முறை யோனி புக்கார்க்கும் சகலரே.
உரை
   
20சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும் மலச்
சத்து அசத்தோடு அத்தனித் தனி பாசமும்
மத்த இருள் சிவன் ஆன கதிராலே
தொத்து அற விட்டிடச் சுத்தர் ஆவார்களே.
உரை
   
21தற்கே வலம் முத்தி தானே தனிமை ஆம்
பிற்பால் சகலம் கலாதிப் பிறிவது ஆம்
சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம்
தற்பால் புரிவது தற் சுத்தம் ஆமே.
உரை
   
22அறிவு இன்றி முத்தன் அரா காதி சேரான்
குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி
செறியும் செயல் இலான் இனம் கற்றவல்லோன்
கிறியன் மல வியாபிக்கே வலம் தானே.
உரை
   
23விந்துவும் மாயையும் மேவும் கிரியையும்
சந்தத ஞான பரையும் தனுச் சத்தி
விந்துவின் மெய்ஞ் ஞானம் மேவும் பிரளயர்
வந்த சகல சுத்த ஆன்மாக்கள் வையத்தே.
உரை
   
24கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில்
கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள்
ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே
ஒவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர் கட்கே.
உரை
   
25கேவலத்தில் கேவலம் அதீதா தீதம்
கேவலத்தில் சகலங்கள் வயின் தவம்
கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு
ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே.
உரை
   
26சகலத்தில் கேவலம் சாக்கிரா தீதம்
சகல சகலமே சாக்கிர சாக்கிரம்
சகலத்தின் சுத்தமே தற் பரா வத்தை
சகலத்தில் இம் மூன்று தன்மையும் ஆமே.
உரை
   
27சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல்
சுத்தத்தில்கேவலம் தொல் உப சாந்தம் ஆம்
சுத்த சகலம் துரிய விலாசம் ஆம்
சுத்தத்தில் இம் மூன்றும் சொல்லலும் ஆமே.
உரை
   
28சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடும்
சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே
சாக்கிரா தீதம் தனில் சுக ஆனந்தமே
ஆக்கு மறை ஆதி ஐம் மல பாசமே.
உரை
   
29சாக்கிரா தீதத்தில் தான் அறும் ஆணவம்
சாக்கிரா தீதம் பராவத்தை தங்காது
ஆக்கு பரோ பாதியா உப சாந்தத்தை
நோக்கு மலம் குண நோக்குதல் ஆகுமே.
உரை
   
30பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும்
சுத்த அதீதமும் தோன்றாமல் தான் உணும்
அத்தன் அருள் என்று அருளால் அறிந்தபின்
சித்தமும் இல்லை செயல் இல்லை தானே.
உரை
   
31எய்திய பெத்தமும் முத்தமும் என்பன
எய்தும் அரன் அருளே விளையாட்டோடு
எய்திடு உயிர் சுத்தத்து இடு நெறி என்னவே
எய்தும் உயிர் இறை பால் அறிவாமே.
உரை
   
32ஐம் மலத்தாரும் மதித்த சகலத்தர்
ஐம் மலத்தாரும் அருவினைப் பாசத்தார்
ஐம் மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர்
ஐம் மலத்தார் அரனார்க்கு அறிவோரே.
உரை
   
33கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை
அரிய துரியம் அதில் உண்ணும் ஆசையும்
உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து
அரிய கனா, தூலாம் அந் நனவு ஆமே.
உரை
   
34ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும்
பூணும் துரியம் சுழுத்தி பொய்க் காமியம்
பேணும் கனவும் மா மாயை திரோதாயி
காணும் நனவில் மலக் கலப்பு ஆகுமே.
உரை
   
35அரன் முதல் ஆக அறிவோன் அதீ தத்தன்
அரன் முதல் ஆம் மாயை தங்கிச் சுழுனை
கருமம் உணர்ந்து மா மாயைக் கைக் கொண்டோர்
அருளும் அறைவர் சகலத்து உற்றாரே.
உரை
   
36உரு உற்றுப் போகமே போக்கி அந்துற்று
மரு உற்றுப் பூதம் அனாதியான் மன்னி
வரும் அச் செயல் பற்றிச் சத்து ஆதி வைகிக்
கரு உற்றிடும் சீவன் காணும் சகலத்தே.
உரை
   
37இருவினை ஒத்திட இன் அருள் சத்தி
மருவிட ஞானத்தில் ஆதன மன்னிக்
குருவினைக் கொண்டு அருள் சத்திமுன் கூட்டிப்
பெருமலம் நீங்கிப் பிறவாமை சுத்தமே.
உரை
   
38ஆறு ஆறும் ஆறதின் ஐ ஐந்து அவத்தையோடு
ஈறு ஆம் அதீதத் துரியத்து இவன் எய்தப்
பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து
நீறு ஆர் பரம் சிவ மாதேயம் ஆகுமே.
உரை
   
39தன்னை அறியாது உடலை முன் தான் என்றான்
தன்னை முன் கண்டான் துரியம் தனைக் கண்டான்
உன்னும் துரிய மும் ஈசனோடு ஒன்று ஆக்கால்
பின்னையும் வந்து பிறந்திடும் தானே.
உரை
   
40சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில்
ஆக்கிய அந்த வயிந் தவம் ஆனந்த
நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம்
வாக்கும் மனமும் மருவல் செய்யாவே.
உரை
   
41அப்பும் அனலும் அகலத்துளே வரும்
அப்பும் அனலும் அகலத்துளே வாரா
அப்பும் அனலும் அகலத்து உளே ஏது எனில்
அப்பும் அனலும் கலந்தது அவ்வாறே.
உரை
   
42அறு நான்கு அசுத்தம் அதி சுத்தா சுத்தம்
உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம்
பெறு மாறு இவை மூன்றும் கண்டத்தால் பேதித்து
உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே.
உரை
   
43மாயை கைத் தாய் ஆக மா மாயை ஈன்றிட
ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே
ஏயும் உயிர்க்கேவல சகலத்து எய்தி
ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே.
உரை
   
பராவத்தை
1அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வ
நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி
விஞ்சும் உடல் உயிர் வேறு படுத்திட
வஞ்சத்து இருந்த வகை அறிந்தேனே.
உரை
   
2சத்தி பரா பரம் சாந்தி தனில் ஆன
சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து
சத்திய மாயை தனுச் சத்தி ஐந்துடன்
சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே.
உரை
   
3ஆறு ஆறுக்கு அப்பால் அறிவார் அறிபவர்
ஆறு ஆறுக்கு அப்பால் அருளார் பெறுபவர்
ஆறு ஆறுக்கு அப்பால் அறிவு ஆம் அவர்கட்கே
ஆறு ஆறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே.
உரை
   
4அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்குப்
பஞ்சணி காலத்துப் பள்ளி துயில் நின்ற
விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு
நஞ்சு உற நாதி நயம் செய்யும் ஆறே.
உரை
   
5உரிய நனாத் துரியத்தில் இவன் ஆம்
அரிய துரிய நனா ஆதி மூன்றில்
பரிய பர துரியத்தில் பரன் ஆம்
திரிய வரும் துரியத்தில் சிவமே.
உரை
   
6பரம் ஆம் அதீதமே பற்று அறப் பற்றப்
பரம் ஆம் அதீதம் பயிலப் பயிலப்
பரம் ஆம் அதீதம் பயிலாத் தபோதனர்
பரம் ஆகார் பாசமும் பற்று ஒன்று அறாதே.
உரை
   
7ஆயும் பொய்ம் மாயை அகம்புறம் ஆய் நிற்கும்
வாயும் மனமும் கடந்த மயக்கு அறின்
தூய அறிவு சிவானந்தம் ஆகிப் போய்
வேயும் பொருளாய் விளைந்தது தானே.
உரை
   
8துரியப் பரியில் இருந்த அச்சீவனைப்
பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு
நரிகளை ஓடத் துரத்திய நாதர்க்கு
உரிய வினைகள் நின்று ஓலம் இட்டு அன்றே.
உரை
   
9நின்ற இச் சாக்கிர நீள் துரியத்தினின்
மன்றனும் அங்கே மணம் செய்ய நின்றிடும்
மன்றன் மணம் செய்ய மாயை மறைந்திடும்
அன்றே இவனும் அவன் வடிவு ஆமே.
உரை
   
10விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய்
இருந்த இடத்து இடை ஈடு ஆன மாயை
பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும்
தெரிந்த துரியத்தே தீது அகலாதே.
உரை
   
11உன்னை அறியாது உடலை முன் நான் என்றாய்
உன்னை அறிந்து துரியத்து உற நின்றாய்
தன்னை அறிந்தும் பிறவி தணவாது ஆல்
அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே.
உரை
   
12கரு வரம்பு ஆகிய காயம் துரியம்
இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார்
குருவரம் பெற்றவர் கூடிய பின்னை
இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே.
உரை
   
13அணுவின் துரியத்தில் ஆன நனவும்
அணு அசைவின் கண் ஆன கனவும்
அணு அசைவில் பரா தீதம் சுழுத்தி
பணியில் பரதுரியம் பரம் ஆமே.
உரை
   
14பர துரியத்து நனவும் பரந்து
விரி சகம் உண்ட கனவு மெய்ச் சாந்தி
உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவத்
தெரியும் சிவ துரி அத்தனும் ஆமே.
உரை
   
15பரமா நனவின் பின் பாற்சகம் உண்ட
திரமார் கனவும் சிறந்த சுழுத்தி
உரம் ஆம் உப சாந்தம் உற்றல் துறவே
தரனாம் சிவ துரி அத்தனும் ஆமே.
உரை
   
16சீவன் துரிய முதல் ஆகச் சீர் ஆன
ஆவ சிவன் துரி யாந்தம் அவத்தை பத்து
ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே
மேவிய நால் ஏழ் விடுத்து நின்றானே.
உரை
   
17பரம் சிவன் மேல் ஆம் பரமம் பரத்தில்
பரம் பரன் மேல் ஆம் பர நனவு ஆக
விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை
உரம்தகு மா நந்தி ஆம் உண்மை தானே.
உரை
   
18சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம்
மேல் ஆய விந்து சதா சிவம் மிக்கு ஓங்கிப்
பால் ஆய்ப் பிரமன் அரி அமராபதி
தேவாம் உருத்திரன் ஈசன் ஆம் காணிலே.
உரை
   
19கலப்பு அறியார் கடல் சூழ் உலகு ஏழும்
உலப்பு அறியார் உடலோடு உயிர் தன்னை
அலப்பு அறிந்து இங்கு அர சாள கிலாதார்
குறிப்பது கோல மடல் அது வாமே.
உரை
   
20பின்னை அறியும் பெரும் தவத்து உண்மைசெய்
தன்னை அறியில் தயாபரன் எம் இறை
முன்னை அறிவு முடிகின்ற காலமும்
என்னை அறியல் உற்று இன்புற்ற வாறே.
உரை
   
21பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம்
தன்னை மறைத்தது தன் கணரணங்கள் ஆம்
தன்னின் மறைந்தது தன் கரணங்களே.
உரை
   
22மரத்தை மறைத்தது மா மத யானை
மரத்தில் மறைந்தது மா மத யானை
பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே.
உரை
   
23ஆறு ஆறு அகன்று நமவிட்டு அறிவாகி
வேறு ஆன தானே அகரமாய் மிக்கு ஓங்கி
ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன்
பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே.
உரை
   
24துரியத்தில் ஓர் ஐந்தும் சொல் அகராதி
விரியப் பரையின் மிகுநாதம் அந்தம்
புரியப் பரையின் பரா வத்தார் போதம்
திரியப் பரமம் துரியம் தெரியவே.
உரை
   
25ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்றுப்
பந்திடும் சுத்த அவத்தைப் பதைப் பினில்
நந்தி பராவத்தை நாடச் சுடர் முனம்
அந்தி இருள் போலும் ஐம் மலம் ஆறுமே.
உரை
   
26ஐ ஐந்தும் எட்டுப் பகுதியும் மாயையும்
பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு
எய்யும் படியாய் எவற்றும் ஆய் அன்று ஆகி
உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே.
உரை
   
27நின்றான் அருளும் பரமும் முன் நேயமும்
ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும்
சென்றான் எனை விடுத்து ஆங்கில் செல்லாமையும்
நன்றான ஞானத்தின் நாதப் பிரானே.
உரை
   
முக்குண நிர்க்குணம்
1சாத்திகம் எய்து நனவு எனச் சாற்றுங் கால்
வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப
ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தி ஆம்
மாய்த்திடு நிர்க்குண மாசு இல் துரியமே.
உரை
   
அண்டாதி பேதம்
1பெறு பகிரண்டம் பேதித்த அண்டம்
எறிகடல் ஏழின் மணல் அளவு ஆகப்
பொறி ஒளி பொன் அணி என்ன விளங்கிச்
செறியும் அண்டா சனத் தேவர் பிரானே.
உரை
   
2ஆனந்த தத்துவம் அண்டா சனத்தின் மேல்
மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்து ஆறாய்த்
தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை
ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே.
உரை
   
பதினொராம் தானமும் அவத்தை எனக் காணல்
1அஞ்சில் அமுதும் ஓர் ஏழின் கண் ஆனந்த
முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில்
வஞ்சமே நின்று வைத்திடில் காயம் ஆம்
கிஞ்சுகச் செவ்வாய்க் கிளிமொழி கேளே.
உரை
   
2புருடன் உடனே பொருந்திய சித்தம்
அருவ மொடு ஆறும் அதீதத் துரியம்
விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும்
அரிய பதினொன்றும் ஆம் அவ் அவத்தையே.
உரை
   
3காட்டும் பதினொன்றும் கை கலந்தால் உடல்
நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை
ஆட்டம் செய்யாத அது விதியே நினை
ஈட்டும் அது திடம் எண்ணலும் ஆமே.
உரை
   
கலவு செலவு
1கேவலம் தன்னில் கலவச் சகலத்தின்
மேவும் செலவு விட வரு நீக்கத்துப்
பாவும் தனைக் காண்டல் மூன்றும் படர் அற்ற
தீது அறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.
உரை
   
2வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை
செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை
அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால்
கல்லும் பிளந்து கடுவெளி ஆமே.
உரை
   
நின்மலாவத்தை
1ஊமைக் கிணற்று அகத்து உள்ளே உறைவது ஓர்
ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள
வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல்
ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே.
உரை
   
2காலங்கி நீர்பூக் கலந்த ஆகாயம்
மாலங்கி ஈசன் பிரமன் சதா சிவன்
மேல் அஞ்சும் ஓடி விரவ வல்லார் கட்குக்
காலனும் இல்லை கருத்து இல்லை தானே.
உரை
   
3ஆன்மாவே மைந்தன் ஆயினான் என்பது
தான் மா மறை அறை தன்மை அறிகிலர்
ஆன் மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றல்
ஆன் மாவும் இல்லைஆல் ஐ ஐந்தும் இல்லையே.
உரை
   
4உதயம் அழுங்கல் ஒடுங்கல் இம் மூன்றின்
கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி
பதி தரு சேதனன் பற்று ஆம் துரியத்து
அதி சுபன் ஆயன் தான் நந்தி ஆகுமே.
உரை
   
5எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி
நல்லாம் துரியம் புரிந்தக்கால் நல் உயிர்
பொல்லாத ஆறா உள் போகாது போதம் ஆய்ச்
செல்லாச் சிவகதி சென்று எய்தும் அன்றே.
உரை
   
6காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும்
வாய்ந்த கனல் என வாதனை நின்றால்போல்
ஏய்ந்த கரணம் இறந்த துரியத்துத்
தோய்ந்த கருமத்து துரிசு அகலாதே.
உரை
   
7ஆன மறை ஆதி யாம் உரு நந்தி வந்து
ஏனை அருள் செய் தெரி நனா வத்தையில்
ஆன வகையை விடும் அடைத்தாய் விட
ஆன மலா தீதம் அப்பரம் தானே.
உரை
   
8சுத்த அதீதம் சகலத்தில் தோய் உறில்
அத்தன் அருள் நீங்கா ஆங்கு அணிற்றான் ஆகச்
சித்த சுகத்தைத் தீண்டாச் சமாதி செய்
அத்தனோடு ஒன்றற்கு அருள் முதல் ஆமே.
உரை
   
9வேறு செய்தான் இருபாதியின் மெய்த் தொகை
வேறு செய்தான் என்னை எங்கணும் விட்டு உய்த்தான்
வேறு செய்யா அருள் கேவலத்தே விட்டு
வேறு செய்யா அத்தன் மேவி நின்றானே.
உரை
   
10கறங்கு ஓலை கொள்ளிவட்டம் கடலில் திரை
நிறம்சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு
அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து
இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே.
உரை
   
11தானே சிவம் ஆன தன்மை தலைப் பட
ஆன மலமும் அப் பாச பேதமும்
மான குணமும் பரான்மா உபாதியும்
பானுவின் முன் மதிபோல் படராவே.
உரை
   
12நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு
அருக்கனும் சோமனும் அங்கே அமரும்
திருத் தக்க மாலும் திசை முகன் தானும்
உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே.
உரை
   
13ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவு என்னும்
ஞானத் திரியைக் கொளுவி அதன் உள்புக்கு
கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு
வானகம் ஏற வழி எளிது ஆமே.
உரை
   
14ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும்
தாடித்து எழுந்த தமருக ஓசையும்
பாடி எழுகின்ற வேத ஆகமங்களும்
நாடியின் உள் ஆக நான் கண்ட வாறே.
உரை
   
15முன்னை அறிவினில் செய்த முது தவம்
பின்னை அறிவினைப் பெற்றால் அறியலாம்
தன்னை அறிவது அறிவாம் அஃது அன்றிப்
பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே.
உரை
   
16செயல் அற்று இருக்கச் சிவானந்தம் ஆகும்
செயல் அற்று இருப்பார் சிவ யோகம் தேடார்
செயல் அற்று இருப்பார் செகத் தொடும் கூடார்
செயல் அற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே.
உரை
   
17தான் அவன் ஆகும் சமாதி கை கூடினால்
ஆன மலம் அறும் அப் பசுத் தன்மை போம்
ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து
ஊனங்கள் எட்டு ஒழித்து ஒன்றுவோர் கட்கே.
உரை
   
18தொலையா அரன் அடி தோன்றும் அம் சத்தி
தொலையா இருள் ஒளி தோற்ற அணுவும்
தொலையா தொழில் ஞானம் தொன்மையில் நண்ணித்
தொலையாத பெத்த முத்திக்கு இடை தோயுமே.
உரை
   
19தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ் சத்தி
மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை
தான் தரு ஞானம் தன் சத்திக்குச் சாதன் ஆம்
ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே.
உரை
   
20அறிகின்று இலாதன ஐ ஏழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியாது இருந்தேன்
அறிகின்றாய் நீ என்று அருள் செய்தான் நந்தி
அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே.
உரை
   
21தான் அவன் ஆகிய ஞானத் தலைவனை
வானவர் ஆதியை மா மணிச் சோதியை
ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை
ஊனம் இலாள் தன்னை ஊன் இடைக் கண்டதே.
உரை
   
22ஒளியும் இருளும் பரையும் பரையுள்
அளியது எனல் ஆகும் ஆன் மாவை அன்றி
அளியும் அருளும் தெருளும் கடந்து
தெளிய அருளே சிவானந்தம் ஆமே.
உரை
   
23ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில்
தான் அந்தம் ஆம் உயிர் தானே சமாதி செய்
ஊன் அந்தம் ஆய் உணர்வாய் உள் உணர்வு உறில்
கோன் அந்தம் வாய்க்கும் மகா வாக்கியம் ஆமே.
உரை
   
24அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர் வோர்க்கும்
அறிவிக்க வேண்டாம் அறிவில் செறிவோர்க்கும்
அறிவு உற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே
அறிவிக்கத் தம் அறிவார் அறிவோரே.
உரை
   
25சத்தும் அசத்தும் சத சத்தும் தான் கூடிச்
சித்தும் அசித்தும் சிவ சித்தாய் நிற்கும்
சுத்தம் அசுத்தம் தொடங்கா துரியத்துச்
சுத்தரா மூன்றுடன் சொல் அற்றவர்களே.
உரை
   
26தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன்
தானே அறிவான் அறிவு சத சத்து என்று
ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்கத்
தானே அறிந்து சிவத்துடன் தங்குமே.
உரை
   
27தத்துவ ஞானம் தலைப்பட்டவர் கட்கே
தத்துவ ஞானம் தலைப்படலாய் நிற்கும்
தத்துவ ஞானத்துத் தான் அவன் ஆகவே
தத்துவ ஞானம் தந்தான் தொடங்குமே.
உரை
   
28தன்னை அறிந்து சிவனுடன் தான் ஆக
மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும்
பின்னது சன் முத்தி சன்மார்க்கப் பேர் ஒளி
நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே.
உரை
   
29ஞானம் தன் மேனி கிரியை நடு அரங்கம்
தான் உறும் இச்சை உயிர் ஆகத் தற்பரன்
மேனி கொண்டு ஐங் கருமத்து வித்து ஆதலான்
மோனிகள் ஞானத்து முத்திரை பெற்றார்களே.
உரை
   
30உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம்
உயிர்க்குக் கிரியை உயிர் மாயை சூக்கம்
உயிர்க்கு இவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே
உயிர்ச் செயல் அன்றி அவ் உள்ளத்து உளானே.
உரை
   
31தொழில் இச்சை ஞானங்கள் தொல் சிவ சீவர்
கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும்
பழி அற்ற காரண காரியம் பாழ் விட்டு
அழிவு அற்ற சாந்தன் அதீதன் சிவன் ஆமே.
உரை
   
32இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி
இல்லதும் உள்ளதும் ஆயன் தாம் அண்ணலைச்
சொல்லாது சொல்லிடில் தூர் ஆதி தூரம் என்று
ஒல்லை உணர்ந்தால் உயிர்க்கு உயிர் ஆகுமே.
உரை
   
33உயிர் இச்சை ஊட்டி உழி தரும் சத்தி
உயிர் இச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம்
உயிர் இச்சை ஊட்டி உடன் உறலாலே
உயிர் இச்சை வாட்டி உயர் பதம் சேருமே.
உரை
   
34சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர்
ஓர் ஒன்று இலார் ஐம் மல இருள் உற்றவர்
பாரின் கண் விண்ணர் அகம்புகும் பான்மையர்
ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே.
உரை
   
35எய்தினர் செய்யும் இரு மாயா சத்தியின்
எய்தினர் செய்யும் இரு ஞான சத்தியின்
எய்தினர் செய்யும் இரு ஞால சத்தியின்
எய்தினர் செய்யும் இறை அருள் தானே.
உரை
   
36திருந்தனர் விட்டார் திருவின் அரகம்
திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கம்
திருந்தனர் விட்டார் செறிமலக் கூட்டம்
திருந்தனர் விட்டார் சிவமாய் அவமே.
உரை
   
37அவமும் சிவமும் அறியார் அறியார்
அவமும் சிவமும் அறிவார் அறிவார்
அவமும் சிவமும் அருளால் அறிந்தால்
அவமும் சிவமும் அவன் அருள் ஆமே.
உரை
   
38அருளான சத்தி அனல் வெம்மை போலப்
பொருள் அவன் ஆகத்தான் போதம் புணரும்
இருள் ஒளியாய் மீண்டும் மும் மலம் ஆகும்
திரு அருள் ஆன நந்தி செம் பொருள் ஆமே.
உரை
   
39ஆதித்தன் தோன்ற வரும் பதுமாதிகள்
பேதித்த அவ்வினையால் செயல் சேதிப்ப
ஆதித்தன் தன் கதிரால் அவை சேட்டிப்பப்
பேதித்துப் பேதியா வாறு அருட் பேதமே.
உரை
   
40பேதம் அபேதம் பிறழ் பேதா பேதமும்
போதம் புணர் போதம் போதமும் நாதமும்
நாதமுடன் நாத நாதாதி நாதமும்
ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே.
உரை
   
41மேவிய பொய்க் கரி ஆட்டும் வினை எனப்
பாவிய பூதம் கொண்டாட்டிப் படைப் பாதி
பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள்
ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே.
உரை
   
42ஆறு அகன்று தனை அறிந்தான் அவன்
ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த
வேறு ஆய் வெளிபுக்கு வீடு உற்றான் அம் அருள்
தேறாத் தெளி உற்றுத் தீண்டச் சிவம் ஆமே.
உரை
   
43தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை
மீண்டு உற்று அருளால் விதி வழியே சென்று
தூண்டிச் சிவ ஞான மா வினைத் தான் ஏறித்
தாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.
உரை
   
44சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்
சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர்
சார்ந்தவர் சத்தி அருள் தன்மை யாரே.
உரை
   
45தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவம்
தான் என்று அவன் என்று இரண்டு அற்ற தன்மையைத்
தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர்
தான் இன்றித் தான் ஆகத் தத்துவ சுத்தமே.
உரை
   
46தன்னினில் தன்னை அறியும் தலைமகன்
தன்னினில் தன்னை அறியத் தலைப்படும்
தன்னினில் தன்னைச் சார்கிலன் ஆகில்
தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே.
உரை
   
47அறியகிலேன் என்று அரற்றாதே நீயும்
நெறி வழியே சென்று நேர் பட்ட பின்னை
இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும்
ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே.
உரை
   
48ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று
கூம்புகின்றார் குணத்தினொடும் கூறுவர்
தேம்பு கின்றார் சிவம் சிந்தை செய்யாதவர்
கூம்ப கில்லார் வந்து கொள்ளலும் ஆமே.
உரை
   
49குறி அறியார்கள் குறிகாண மாட்டார்
குறி அறியார்கள் தம் கூடல் பெரிது
குறி அறியா வகை கூடுமின் கூடி
அறிவு அறியா விருந்து அன்னமும் ஆமே.
உரை
   
50ஊனோ உயிரோ உறுகின்றதே இன்பம்
வானோர் தலைவி மயக்கத்து உற நிற்கத்
தானோ பெரிது அறிவோம் என்னும் மானுடர்
தானே பிறப்போடு இறப்பு அறியாரே.
உரை