எட்டாம் தந்திரம்

33. சோதனை

1பெம்மான் பெரு நந்தி பேச்சு அற்ற பேர் இன்பத்து
அம்மான் அடி தந்து அருள் கடல் ஆடினோம்
எம்மாயமும் விடுத்து எம்மைக் கரந்திட்டுச்
சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே.
உரை
   
2அறிவு உடையான் அரு மாமறை உள்ளே
செறிவு உடையான் மிகு தேவர்க்கும் தேவன்
பொறி உடையான் புலன் ஐந்தும் கடந்த
குறி உடையானொடும் கூடுவன் நானே.
உரை
   
3குறியாக் குறியினில் கூடாத கூட்டத்து
அறியா அறிவில் அவிழ்ந்து ஏக சித்தம் ஆய்
நெறி ஆம் பரா நந்தி நீடு அருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவம் எனலாமே.
உரை
   
4காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும்
பாலின் உள் நெய்யும் பழத்துள் இரதமும்
பூவின் உள் நாற்றமும் போல் உளன் எம் இறை
காவலன் எங்கும் கலந்து நின்றானே.
உரை
   
5விருப்பொடு கூடி விகிர்தனை நாடிப்
பொருப்பு அகம் சேர் தரு பொன் கொடி போல
இருப்பர் மனத்து இடை எங்கள் பிரானார்
நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே.
உரை
   
6நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்து என் அகம் படி கோயில் கொண்டான் கொள்ள
எந்தை வந்தான் என்று எழுந்தேன் எழுதலும்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.
உரை
   
7தன்மை வல்லோனைத் தத்துவத்துள் நலத்தினை
நன்மை வல்லோனை நடுவுறை நந்தியைப்
புன்மை பொய்யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் உம்மைப் பரிசு செய்வானே.
உரை
   
8தொடர்ந்து நின்றான் என்னைச் சோதிக்கும் போது
தொடர்ந்து நின்றான் அல்ல நாதனும் அங்கே
படர்ந்து நின்று ஆதிப் பராபரன் எந்தை
கடந்து நின்று அவ்வழி காட்டு கின்றானே.
உரை
   
9அவ்வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள்
இவ்வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும்
செவ்வழி சேர் சிவலோகத்து இருந்திடும்
இவ்வழி நந்தி இயல்பு அது தானே.
உரை
   
10எறிவது ஞானத்து உறைவாள் உருவி
அறிவு அதனோடே அவ் ஆண் தகையானைச்
செறிவது தேவர்க்குத் தேவர் பிரானைப்
பறிவது பல் கணப் பற்று விட்டாரே.
உரை
   
11ஆதிப்பிரான் தந்த வாள் அங் கைக் கொண்டபின்
வேதித்து என்னை விலக்க வல்லார் இல்லை
சோதிப்பன் அங்கே சுவடு படா வண்ணம்
ஆதிக் கண் தெய்வம் அவன் இவன் ஆமே.
உரை
   
12அந்தக் கருவை அருவை வினை செய்தல்
பந்தம் பணி அச்சம் பல் பிறப்பும் வாட்டிச்
சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அச்சோதனை
சந்திக்கத் தற்பரம் ஆகும் சதுரர்க்கே.
உரை