ஒன்பதாம் தந்திரம்

13. ஊழ்

1செற்றில் என் சீவில் என் செஞ் சாந்து அணியில் என்
மத்தகத்தே உளி நாட்டி மறிக்கில் என்
வித்தகன் நந்தி விதிவழி அல்லது
தத்துவ ஞானிகள் தன்மை குன்றாரே.
உரை
   
2தான் முன்னம் செய்த விதி வழி தான் அல்லால்
வான் முன்னம் செய்து அங்கு வைத்தது ஓர் மாட்டு இல்லை
கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று
நான் முன்னம் செய்ததே நல் நிலம் ஆனதே.
உரை
   
3ஆறு இட்ட நுண் மணல் ஆறே சுமவாதே
கூறு இட்டுக் கொண்டு சுமந்து அறிவார் இல்லை
நீறு இட்ட மேனி நிமிர் சடை நந்தியைப்
பேறு இட்ட என் உள்ளம் பிரிய கிலாவே.
உரை
   
4வான் நின்று இடிக்கில் என் மா கடல் பொங்கில் என்
கான் நின்ற செந் தீக் கலந்து உடன் வேகில் என்
தான் ஒன்றி மாருதம் சண்டம் அடிக்கில் என்
நான் ஒன்றி நாதனை நாடுவேன் நானே.
உரை
   
5ஆனை துரக்கில் என் அம்பு ஊடு அறுக்கில் என்
கானத்து உழுவை கலந்து வளைக்கில் என்
ஏனைப் பதியினில் எம் பெருமான் வைத்த
ஞானத்து உழவினை நான் உழுவேனே.
உரை
   
6கூடு கெடின் மற்று ஓர் கூடு செய்வான் உளன்
நாடு கெடினும் நமர் கெடுவார் இல்லை
வீடு கெடின் மற்று ஓர் வீடு புக்கால் ஒக்கும்
பாடது நந்தி பரிசு அறிவார்க்கே.
உரை