ஒன்பதாம் தந்திரம்

18. மோன சமாதி

1நின்றார் இருந்தார் கிடந்தார் என இல்லை
சென்றார் தம் சித்த மோன சமாதி
மன்றேயும் அங்கே மறைப் பொருள் ஒன்று
சென்று ஆங்கு அணைந்தவர் சேர்கின்ற வாறே.
உரை
   
2காட்டும் குறியும் கடந்தவர் காரணம்
ஏற்றின் புறத்தில் எழுதி வைத்து என் பயன்
கூட்டும் குரு நந்தி கூட்டிடின் அல்லது
ஆட்டின் கழுத்தில் அதர் கிடந்து அற்றே.
உரை
   
3உணர்வு உடையார் கட்கு உலகமும் தோன்றும்
உணர்வு உடையார் கட்கு உறுதுயர் இல்லை
உணர்வு உடையார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வு உடையார்கள் உணர்ந்து கண்டாரே.
உரை
   
1மறப்ப அதுவாய் நின்ற மாய நல் நாடன்
பிறப்பினை நீங்கிய பேர் அருளாளன்
சிறப்பு உடையான் திரு மங்கையும் தானும்
உறக்கம் இல் போகத்து உறங்கிடும் தானே.
உரை
   
2துரியங்கள் மூன்றும் கடந்து ஒளிர் சோதி
அரிய துரியம் அதில் மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரை இல் அநுபூதிகத்து உள்ளானே.
உரை
   
3உருவு இலி ஊன் இலி ஊனம் ஒன்று இல்லி
திரு இலி தீது இலி தேவர்க்குத் தேவன்
பொருஇலி பூதப் படை உடையாளி
மரு இலி வந்து என் மனம் புகுந்தானே.
உரை
   
4கண்டு அறிவார் இல்லைக் காயத்தின் நந்தியை
எண் திசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டம் கடந்த அளவு இலா ஆனந்தத்
தொண்டர் முகந்த துறை அறியோமே.
உரை
   
5தற்பரம் அல்ல சதாசிவன் தான் அல்ல
நிட்களம் அல்ல சகள நிலை அல்ல
அற்புதம் ஆகி அநுபோகக் காமம் போல்
கற்பனை இன்றிக் கலந்து நின்றானே.
உரை
   
6முகத்தில் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண் கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய் தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல் என்றால் சொல்லும் ஆறு எங்ஙனே.
உரை
   
7அப்பினில் உப்பு என அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பரா பரம் சேர் பரமும் விட்டுக்
கப்புறு சொற்பதம் ஆளக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே.
உரை
   
8கண்டார்க்கு அழகு இது காஞ்சிரத்தின் பழம்
தின்றார்க்கு அறியலாம் அப்பழத்தின் சுவை
பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம் பல தானே.
உரை
   
9நந்தி இருந்தான் நடுவுள் தெருவிலே
சந்தி சமாதிகள் தாமே ஒழிந்தன
உந்தியின் உள்ளே உதித்து எழும் சோதியைப்
புந்தியினாலே புணர்ந்து கொண்டேனே.
உரை
   
10விதறு படா வண்ணம் வேறு இருந்து ஆய்ந்து
பதறு படாதே பழ மறை பார்த்துக்
கதறிய பாழைக் கடந்த அந்தக் கற்பனை
உதறிய பாழில் ஒடுங்கு கின்றேனே.
உரை
   
11வாடா மலர் புனை சேவடி வானவர்
கூடார் அற நெறி நாள்தொறும் இன்பு உறச்
சேடார் கமலச் செழும் சுடருள் சென்று
நாடார் அமுது உற நாடார் அமுதமே.
உரை
   
12அதுக்கு என்று இருவர் அமர்ந்த சொல் கேட்டும்
பொதுக்கு எனக் காமம் புலப்படு மா போல்
சதுக்கு என்று வேறே சமைந்தாரைக் காண
மதுக் கொன்றைத் தாரான் வளம் தரும் அன்றே.
உரை
   
13தானும் அழிந்து தனமும் அழிந்து நீடு
ஊனும் அழிந்து உயிரும் அழிந்து உடன்
வானும் அழிந்து மனமும் அழிந்து பின்
நானும் அழிந்தமை நான் அறியேனே.
உரை
   
14இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளில் பொருளாய்ப் பொருந்த உள் ஆகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல் மனம் உற்று நின்றேனே.
உரை
   
15ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றி நின்று உள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றி நின்றே பல ஊழி கண்டேனே.
உரை