462. ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும்
தாண்மிகு மாகில் தரணி முழுதாளும்
பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.

(ப. இ.) காதலரிருவரும் மருவிப் பொருந்துங்கால் ஆண் ஆகிய வலப்பால் மூச்சு மிகுந்து சென்றால் கருவுற்றுப் பிறக்குமுயிர் ஆணாகப் பிறக்கும். பெண்ணாகிய இடப்பால் மூச்சு மிகுந்து சென்றால் பிறக்குமுயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு ஒத்திருந்தால் பிறக்குமுயிர் அலியாக இருக்கும். ஆள்வினை முயற்சியில் கருத்து மிகுதியாகவிருந்தால் பிறக்குமுயிர் சிறப்பாகப் பிறக்கும். அச் சிறப்புடன் பிறந்த உயிர் 'உழையார் புவனம் ஒருமூன்று' மொருங்குடன் ஆளும். அகப் பயிற்சியால் விந்து கட்டுப்பட்டுத் திண்மை ஏற்படின் மருவி இன்புறினும் விந்து வெளிச் செல்லுவதில்லை. ஆதலால் பாய்ந்ததும் இல்லை என்றனர். பாணவம்; பண்ணவம் என்பதன் செய்யுள் திரிபு. பண்ணவம் - திண்மை.

(27)