1011
 

(ப. இ.) உணர்விற்கு உணர்வாம் நுண்ணறிவாக விளங்குபவன் சிவன். ஏழுலகினையும் இயைந்தியக்கும் எண்ணத்தக்க பேரறிவாய் நீக்கமற நின்றவனும் அவனே. அவனே எந்தை பிரானுமாவன். அவனே பண்ணறிவாளனாகிய கானத்தின் எழுபிறப்பின் காழில் கனியாவன். காழ் - வித்து. நிறைந்த பேரன்பால் நீங்காநினைவால் ஓங்கிவழிபட்டார் நீங்கரும் செம்பொருட் செல்வராவர். அத்தகைய மெய்யடியாரைத் தொழுதுய்ய வேண்டுமென்று விண்ணறிவாளரும் விரும்பி நண்ணித்தொழுகின்றனர்.

(அ. சி.) எண் - கருதப்பட்ட. பண் அறிவாளன்' - இசைஞான வடிவாளன். விண் - மேலான.

(7)

2479. விண்ணவ ராலும் அறிவறி யான்றன்னைக்
கண்ணற வுள்ளே கருதிடிற் காலையில்
எண்ணுற வாகமுப் போது மியற்றிநீ
பண்ணிடில் தன்மை பராபர 1னாகுமே.

(ப. இ.) விண்ணவர்களாலும் அவர்தம் முனைப்பறிவாகிய சுட்டறிவாலும் சிற்றறிவாலும் அறியவொண்ணா அன்பு இன்ப அண்ணலை வேறிடங்களில் முனைத்து விளங்குகின்றான் என்னும் பொது எண்ணத்தை விடுத்து நும்முள்ளத்தே செம்மை நினைவால் கருதுங்கள். அங்ஙனம் கருதினால் காலமுண்டாகவே கருதுவார் கருத்தினுள் மிக்கு விளங்கித் தோன்றியருள்வன். அத் தோற்றங்கண்டு எண்ணுதலாகிய தியானத்தைப் புரியுங்கள். அவ் வெண்ணவுறவு என்றும் நண்ணும் பொருட்டு முப்போதும் அகத்தும் புறத்தும் அன்புடன் இன்புறத் தொழுங்கள். அங்ஙனம் தொழுவார் வழுவாது விழுப்பொருட் சிவமாவர்.

(அ. சி.) கண்ணற - புற இடங்களில் அன்றி. எண்ணுற - உன்ன. இயற்றி - பூசைசெய்து. பண்ணிடின் - தவம்செய்தால்.

(8)

2480. ஒன்றா யுலகுடன் ஏழும் பரந்தவன்
பின்றா னருள்செய்த பேரரு ளாளவன்
கன்றா மனத்தார்தங் கல்வியுள் 2நல்லவன்
பொன்றாத போது புனைபுக ழானன்றே.

(ப. இ.) தான் ஒருவனுமாய் ஒப்பில்லாதவனுமாய்க் கலப்பால் உலகு ஏழுடனும் நீக்கமற நிறைந்துநிற்பவன் சிவபெருமான். அவன் திருவடியைப் புகலென அடைந்த பின்பு அளவிலாப் பேரருள்புரிந்த பேரருளாளனாவன். மாறுபாடில்லாத செம்மை மனத்தார்க்குக் 'கற்ற கல்வியினும் இனியானா'கலின் கல்வியுள் நல்லவனாக நின்றருளும் செல்வனாவன். ஈண்டுக் கல்வி என்பது 'வாலறிவன் நற்றாள்' தொழுங்கல்வி. என்றும் பொன்றாது வாடுதல் எய்தாது திருவடிசூடுதல் செய்து நிலவும் நெஞ்சத் தாமரையாகிய போதின்கண் நிலைத்துநிற்கும் புனைகழலோன் ஆகிய புண்ணியன் சிவபெருமான்.

(அ. சி.) பின் - அவனை அடைந்தபிறகு. கன்றா - விரோதமில்லாத. பொன்றாதபோது - வாடாத மலர்; உள்ளத்தாமரை.

(9)


1. வேண்டினுண். திருக்குறள், 342.

2. குற்றம். ஆரூரர். 7. 56 - 5.