வடபுலத்துச் செல்வக்கோனும், வடகீழ்புலத்து ஆண்டானும் ஆக நிறைந்துநின்று காவல் புரியுமாறு திருவருளால் ஆணையிடுதல் வேண்டும். செம்பொருளாம் சிவவழிபாட்டினர் சிவமேயாகும் சிறப்பினராதலின் 'என்துரை தனதுரையாக' என்னும் இயல்பினராதலின், அவர்தம் கரணமெல்லாம் சிவநினைவால் சுடரும் சிவகரணமாதலின் ஆணையிடும் உரிமையும் தகுதியும் உடையோர் என்க. அதனால் எண்புலக் காவலரை ஆணையிட்டு நிறுவுவதன்றி அவரை வணங்கி வழிபடுவாரல்லர்; என்னை? சிவனை வழிபடும் மெய்யடியார்களை அக்காவலர் நாளும் வழிபட்டு வருதலான் என்க. மேலும், "நாரணன் நான்முகன் இந்திரன், வாரணன் குமரன் வணங்குங்கழற் பூரணன்" சிவன் என்பது புனிதத் திருமறை. (அ. சி.) இஃது எண்திசை இறைவர்களைப்பற்றிக் கூறியுள்ளது. (1) 2488. ஒருங்கிய பூவுமோ ரெட்டித ழாகும் மருங்கிய மாயா புரியத னுள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே. (ப. இ.) நெஞ்சத் தாமரையானது சேர்ந்து காணப்படும் எட்டிதழ்த் தாமரையென்று இயம்பப்படும். பெருமைமிக்கதாகிய மாயாபுரி என்னும் இவ்வுடம்பகத்து முதுகந்தண்டாகிய சுழுமுனைநாடி மிகவும் நுண்ணிதாய் அமைந்துள்ளது. அத் தண்டினூடே அடங்கிய அறிவுப் பேரொளியினை அகத்தவத்தால், அருளால் ஆய்ந்தெழுங்கள். அதுவே உய்யும் வழியாகும். இனி அப் பேரொளிப் பிழம்பினை நினைந்து உய்ந்து ஆய்ந்து எழுங்கள் என்றலும் ஒன்று. (அ. சி.) ஒருங்கிய - சேர்ந்துள்ள. மருங்கிய - பெருமையுடைய. மாயாபுரி - உடம்பு. தண்டு - வீணாத்தண்டு. முதுகுத்தண்டு எலும்பு. (2) 2489. மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும் விட்டலர் கின்றனன் சோதி விரிசுடர் எட்டல ருள்ளே இரண்டலர் உள்ளுறிற் பட்டலர் கின்றதோர் பண்டங் 1கனாவன்றே. (ப. இ.) நெஞ்சத் தாமரையின் விரிவினைப் பகுக்குங்கால் மூன்றாகப் பகுக்கப்படும். அவை முறையே இதழ், கொட்டை, கொட்டைநடு என்ப. கொட்டை - கர்ணிகை. இம்மூன்றினும் விட்டு நீங்காது தொன்மை உருவாக விளங்கும் மன்னும் ஆவி நிறைந்து நிற்கும் உலகமே உருவமாகக்கொண்டு திகழும் இறைவன் சோதிவிரிசுடர் எனப்படுவன். அவனை விராட்டெனவும் அழைப்பர். எட்டிதழ்த் தாமரையாகிய இதன்கண் கொட்டையும் நடுவும் அகமுள்ளனவாகும் அவ்விரண்டனுள்ளில் விளங்குவது ஆவியாகும். (அ. சி.) விட்டலர்கின்றனன் - விட்டுவிட்டு ஒளி வீசுகின்றான். பட்டலர்கின்றது - தோன்றி விளங்குவது. (3)
1. மண்முதல். சிவஞானபோதம். 9. 3 - 3.
|