1056
 

(ப. இ.) சீலம், நோன்பு, செறிவென்னும் முத்திறப் பாகுபாட்டின் கண்ணும் உள்ள மெய்யடியார்கட்குத் திருவருளால் அடிமை பூண்டார் அறிவு நெறியினராவர். அவர்க்கும் அடியேன் திருவருளால் அடிமை பூண்டேன். பூணவே அம் மெய்யடியார் பொய்யில் திருவருளால் சிவபெருமான் திருவடியிணையினைக்கூடும் திருப்பேறு பெற்றேன். பெறலும் அச்சிவபெருமான் இவன் நம்மடிமை என ஏன்று கொண்டருளினன். அருளித் தன் திருவடியையும் தந்தளித்தான்.

(2)

2579. நீரிற் குளிரும் நெருப்பினிற் சுட்டிடும்
ஆரிக் கடனந்தி யாமா ரறிபவர்
பாரிற் பயனாரைப் பார்க்கிலும் நேரியர்
ஊரில் உமாபதி யாகிநின் றானன்றே.

(ப. இ.) தம் முனைப்பற்று அருள்வழிச் செல்வார்க்குச் சிவபெருமான் நீரினும் தண்ணியனாய்க் குளிர்ந்து இன்பம் செய்தருள்வன். தம்முனைப்புற்று மருள்வழிச் செல்வார்க்கு நெருப்பைவிட வெய்யனாய்த் தீயினும் மிக்க துன்பத்தை ஈந்தருள்வன். அத் துன்பம் அருளுவதும் திருவடியின்பம் எய்தும் பெருநெறியாம் நன்னெறியிற் செலுத்துவதற்கேயாம். இம் முறையாக நடுநிலை கோடாது கடமையை நிறைவேற்றுபவர் சிவபெருமானை யன்றி வேறு யாவர் உளர்? ஒருவரும் இலர் என்பதாம். அத்தகைய நந்திப் பெருமானை நாமா அறியும் ஆற்றலுடையோம். அனைத்துலகினும் எய்தும் நிறை பயனினும் சிறந்தவர் ஒருகால் அறிவர். உலகனைத்தையும் நன்னெறிச் செலுத்தும் தென்னாடு சிவனுறையும் பொன்னாடாகும். அந்நாடே திருவூர் என்று அழைக்கப்படும். அத்தகைய திருவூரில் அம்மையப்பராகச் செம்மையொடு விளங்குபவன் சிவன். அவன் உமாபதியாகி நின்றருளினன்.

(அ. சி.) ஆர் இக்கடன் - பொருந்தும் இம் முறைமை. நேரியர் - முறைதவறாதவர். ஊரில் - சித்தத்தில்.

(3)

2580. ஒத்துல கேழும் அறியா 1ஒருவனென்று
அத்தன் இருந்திடம் ஆரறி வார்சொல்லப்
பத்தர்தம் பத்தியிற் பாற்படில் அல்லது
முத்தினை யார்சொல்ல முந்துகின் றாரன்றே.

(ப. இ.) ஏழு உலகத்தாரும் ஒருங்கு திரளினும், ஏழுலகத்தின் எல்லா இடங்களின் ஆயினும் அறிதற்கரியவன் சிவன். அவன் ஒப்பில் ஒருவன். அவனே அத்தன். அவன் மறைந்து நின்றருளும் மாண்பினன். அத்தகையானை உள்ளவாறறிந்து தெள்ளிதின் உரைக்கும் வல்லார் யாவர்? ஒருவரும் இலர். அவன் மெய்ப்பத்தர்தம் மையில் பத்தியில் விளங்குபவனாவன். அவ் வுண்மை 'பத்திவலையிற் படுவோன் காண்க' என்னும் தமிழ்மறை முடிபான் உணரலாம். அவ்வாறன்றி முத்தனை யானை எத்திறத்தான் உணர்ந்து எவர் சொல்ல முந்துவர்? ஒருவருமிலர் என்க. மை குற்றம். மையில் - குற்றமில்லாத.

(அ. சி.) படின் - அகப்படின்.

(4)


1. உலகெலாமுணர்ந். 12. பாயிரம், 1.