2736. ஒன்பதும் ஆட ஒருபதி னாறாட அன்புறு மார்க்கங்கள் ஆறும் உடனாட இன்புறும் ஏழினும் ஏழைம்பத் தாறாட அன்பது மாடினான் ஆனந்தக் கூத்தன்றே. (ப. இ.) 'சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், திகழும் ஈசன், உவந்தருள் உருத்திரன்றான், மால், அயன்' என்று சொல்லப்படும் சிவபெருமானின் பெருநிலைகள் ஒன்பதும் சிவபெருமான் புரிந்தருளும் திருக்கூத்தால் ஆடுதலாகிய தொழில்நிலை எய்தும். எட்டுத் திசையும், எட்டுத் திருவுருங்களும் ஆகிய பதினாறும் திருக்கூத்தால் ஆடுவனவாகும். இறவாத இன்பவாயிலாம் அன்புசேர் நெறிகள் சமயங்களெனப்படும். அவை தொகையான் அறுவகைப்படும். வகையான் அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என நான்காகும். விரியான் இருபத்து நான்காகும். அவைகளும் ஆடுவனவாகும். இன்பம் எய்தும் நிலைக்களமாகக் காணப்படும் உலகங்கள் ஏழும் ஆடுவனவாகும். ஆருயிர்களின் பிறப்பின்வகை ஏழாகக் காணப்படும். அவ்வேழும் ஆடுவனவாகும். நாடுகள் ஐம்பத்தாறென்று நவிலப்படும். அவைகளும் ஆடுவனவாகும். இவை யனைத்தும் அன்பதுவாகச் சிவபெருமான் ஆடும் ஆனந்தக் கூத்தினான் நிகழ்வனவாகும். அத்தகைய பேரின்பப் பெருங்கூத்தினைச் சிவபெருமானாடியருளினன். (21) 2737. ஏழினில் ஏழாய் இகழ்ந்தெழுந் தேழதாய் ஏழினில் ஒன்றாய் இழிந்தமைந் தொன்றாகி ஏழினிற் சன்மார்க்கம் எங்கள் பரஞ்சோதி ஏழிசை நாடகத் தேஇசைந் 1தானன்றே. (ப. இ.) பண்ணமைவு ஏழென்று கூறப்படும். அவை: குரல், துத்தம், கைக்கிளை, விளரி, தாரம்., உழை, இளி என எழுவகைப்படும். அவ் வேழும் உறழ நாற்பத்தொன்பதாகும். இகழ்ந்தெழுத்து ஆறும் திகழ்ந்தெழுத்து ஒன்றும் ஆகிய ஏழு எழுத்துக்களாகும். அவையாவன: ஆதாரமாகிய நிலைகள் ஆறுக்கும் உரிய எழுத்துக்கள் ஆறு. ஓமொழிப் பிரணவ எழுத்தொன்றும் ஆக ஏழு. இவ் வேழினுள்ளும் முதன்மை வாய்ந்தது ஓமொழியே. அதனால் ஏழினில் ஒன்றாயென்றனர். அறுவகை நெறியும் நடுவாக நன்றிக்கண் தங்கியான் நெறியும் என் நெறிகள் ஏழாம். நடுவாக நன்றிக்கண் தங்கல்: சமரச சன்மார்க்கம். இதனை நடுநெறி எனவும் கூறுப. நடுநெறியினைச் சமயாதீதம் எனவும் கூறுப. சமயாதீதமே சித்தாந்த சைவம். இவ் வுண்மை வரும் தாயுமான அடிகள் திருப்பாட்டான் உணரலாம். "சைவ சமய மேசமயஞ் சமயா தீதப் பழம்பொருளைக் கைவந் திடவே மன்றுள்வெளி காட்டுமிந்தக் கருத்தைவிட்டுப் பொய்வந் துழலுஞ் சமயநெறி புகுத வேண்டா முத்திதரும் தெய்வ சபையைக் காண்பதற்குச் சேர வாரும் சகத்தீரே." (தாயுமானார், 30. காடுங்கரையும், 2)
1. ஏழிசையாய். ஆரூரர், 7. 51 - 10.
|