193
 

தினும் பரந்திருக்கும். இவையனைத்தையும் தொழிற்படுத்தும் ஆதியருள் இவற்றுடன் கலந்து மறைந்துநின்று அருள்புரியும். இவற்றைத் திருவுள்ளத்தால் சிவபெருமான் கண்டருள்வன்.

(அ. சி.) அரைக்கின்ற அருள் - மறைப்பு. அங்கங்கள் - தத்துவங்கள்.

(6)

423. ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
வெளிப்பட் டிறைஞ்சினும் வேட்சியு மாமே.

(ப. இ.) முழுமுதற். சிவபெருமான் திருவடியிணையினைத் திருவருளால் உணர்ந்தேன். அகத்தே வைத்து, திருமுறைவழியாகத் தொழுதேன். அகவழிபாடு அறிவிற்கு அறிவாய் விளங்கும் அவனை உணர்ந்து வழிபடுவதென்க. அச் சிவபெருமானைப் புறத்துவழிபட நேர்ந்தால் அருளோன், கூத்தப் பெருமான், அம்மை, ஆலமர்செல்வன், அம்மையப்ப பிள்ளை, மூத்தபிள்ளையார், இளையபிள்ளையார் என்னும் திருவுருவம் ஏழும், மெய்யடியார் திருவுரு வகைகள் ஒன்றும் ஆகிய எண்பெருநிலைகளும் வழிபடற்குரிய வடிவங்களாம். அவ்வடிவங்களுள் அருளால் மனம்பற்றிய தொன்றை முறைமுறையாக வழிபடுதல் வேண்டும். அவ் வழிபாட்டை ஏற்று அச் சிவபெருமானும் வெளிப்பட்டு அருள்வன். அளவிறந்த களிப்பினாலும் பெரும்பேரன்பாகிய காதன்மையாலும் மீண்டும்மீண்டும் வழிபட வழிபடப் பெருமை விளங்கித் தோன்றும். தோன்றலும் தொழுந்தோறும் பழுதில் வேட்கையும் மிகும் என்க. வேட்சி - வேட்கை.

(அ. சி.) வேட்சி - விருப்பம்.

(7)

424. ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் 1கங்கை
அருங்கரை பேணில் அழுக்கற லாமே.

(ப. இ.) செறிவுடைத்தாய் ஆருயிரும் பாசமும் வேறு என்று சொல்லமுடியாதபடி நிற்கும் பாசத்துள் ஆருயிரின் பொருட்டுக் கலந்தும் தோய்வின்றி நிற்பவன் சிவன். அவன் சார்ந்தார் அனைவரையும் காத்தருளுந் தன்மையால் தலையானவன் ஆவன். அத்தலையாய பேரறிவுப் பொருளாம் சிவபெருமானின் நிலைபேறாகிய அழிவில் புகலிடம் இருங்கரை எனப்படும். அப்புகலிடத்து உறைந்து பேரின்பம் துய்ப்பதற்கு நாடுங்கள். அங்ஙனம் நாடுவதால் எல்லையின்றிவரும் பிறவிக் கடலினை எண்ணிப் பார்ப்பதற்கே இடன் இல்லாமல் போகும். அங்ஙனம் போகத் திருவருளாகிய புனல்மகள் ஏற்றருளினள். அவளின் திருவருளால் மலஅழுக்கு முதலிய எல்லா அழுக்கும் அகலும். நாடி நாடுக என்று பொருள்படும் இகரவீற்று வியங்கோள். இஃது 'அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி' என்னும் மெய்கண்டார் திருமொழியான் உணர்க. கங்கை அருங்கரை - திருவருளின் எல்லையிலாத்துணை. உத்தமசித்தன் - தலையாய சிவபெருமான்.

(8)


1. காமம். திருக்குறள், 360.