445. என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச் செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும் நன்பால் ஒருவனை நாடுகின் றேனே. (ப. இ.) எலும்புகளால் நெருங்கப்பெற்று, நரம்பினைக்கொண்டு வரிந்துகட்டித் தசையினைக் குருதி நீரால் இணைத்தமைத்துத் திருந்திய மனை செய்தருளினன் சிவன். அம் மனை உடம்பெனப்படும். அவ்வுடம்பகத்து உயிர் தங்கியிருக்கும். அதனால் அஃது உயிர்நிலை என்று அழைக்கப்படும். உயிர் உடலகத்துத் தங்குவது இன்பம் எய்துவதற்கேயாம். அதனால் இன்பால் உயிர்நிலை என்று ஓதப்பெற்றது. இவ்வாறு செய்தருளியவன் சிவன். அவனே இறைவனாவன். அவனே சிறந்த நன்மைப் பகுதி முழுவதும் ஒருங்கமைந்த முழுமுதல்வனானவன். அவனே ஒப்பில்லாத ஒருவனாவன். அவன் திருவடியினைச் சேர்ந்து உய்யுமாறு செந்தமிழ்த் திருவைந்தெழுத்தால் சீர்பெற வழுத்துகின்றேன். நன்பால் - நன்மைப்பகுதி. குருதிநீர் - செந்நீர். (அ. சி.) செம்பால் - உதிரம். (10) 446. பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனிப் பகலோன் இதஞ்செய்யு மொத்துடல் எங்கும் புகுந்து குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான் விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே. (ப. இ.) உடலுக்கு உறுதியாம் அழகினைத் தரும் பால்போன்று வெண்மை நிறம் பொருந்திய நெற்றியமிழ்து பால்வண்ணன் மேனிப் பகலோன் எனப்படும். அவ்வமிழ்து இனிமையாக்குதற் பொருட்டு உடலெங்கும் ஒத்துப் புகுந்து நிறைந்து நின்றது. குதமாகிய மூலத் திடமாக நின்று தோன்றும் தீயின் வெப்பத்தினைத் தணிவிக்கும் பொருட்டு இவ்வமிழ்தினை அமைத்தருளினன் சிவன். (அ. சி.) குதம் செய்யும் அங்கி - மூலச்சூடு. (11) 447. ஒழிபல செய்யும் வினையுற்ற நாளே வழிபல நீராடி வைத்தெழு வாங்கிப் பழிபல செய்கின்ற பாசக் கருவைச் சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே. (ப. இ.) ஆருயிர்கட்கு வினைத் துய்ப்பு முடிந்த நாளில் பலமுறை நீங்கிய இரப்பாகிய ஒடுக்கத்தினைச் செய்தருள்வன். பலவழியினாலும் திருவருள்புரிந்து எழுவகைப் பிறப்பினுள் வினைக்கீடாக ஒன்றிற் பிறக்குமாறு அருள்புரிவன். அங்ஙனம் அருள்புரிந்து தோற்றுவித்தலால் பாவமும் பழியும் பலவாகச் செய்யும் பிணிப்பாகிய கருவில் ஆவி புகுந்ததென்க. கருப்பையில் காணும் பலவகையான துன்பங்களை நீங்கச் செய்தனன். மூலத் தீ சுட்டுவிடாவண்ணம் அமைத்து வைத்தருளினன்,
|