(அ. சி.) கால் - வாயு. இருநூற்றிருபத்து நான்கு - புவனங்களின் தொகை. (15) 635. வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும் வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய் வீங்கிய வாதமுங் கூனு முடமதாம் வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே. (ப. இ.) வீங்கற்காற்றின் திரிபால் இதில் குறித்த பல நோய்கள் உண்டாகும். (16) 636. கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்சயன் கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன் கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற் கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே. (ப. இ.) வீங்கற்காற்றின் திரிபால் பலநோய்கள் கண்ணிலுண்டாம். விழிக்காற்றின் திரிபால் கண்நோய்கள் பலவும் உண்டாம்; கண்ணொளியும் விளங்காது. (17) 637. நாடியின் ஓசை நயனம் இருதயந் தூடி யளவுஞ் சுடர்விடு சோதியைத் தேவருள் ஈசன் திருமால் பிரமனும் ஓவற நின்றங் குணர்ந்திருந் தாரே. (ப. இ.) நடுநாடியிற் கேட்கப்படும் ஓசையினைக் கண்ணொளியாய் நெஞ்சத்துடிப்பாய் உணரலாம். இவ் வோசையினை ஆண்டான் அரி அயன் முதலியோரும் இடையறாது உணர்ந்திருந்தனர். இவர்கள் தூமாயையிலுள்ளவர். துடி என்பது முதல் நீண்டு தூடி என்றாயிற்று. (அ. சி.) தூடி - துடி; எட்டு விநாடி. (18) 638. ஒன்பது வாசல் உடையதோர் பிண்டத்துள் ஒன்பது நாடி யுடையதோ ரோரிடம் ஒன்பது நாடி ஒடுங்கவல் லார்கட்கு ஒன்பது காட்சி யிலைபல வாமே.1 (ப. இ.) ஒன்பது தொளைகளையுடைய இப் பிண்டமாகிய உடம்பகத்து வீங்கற்காற்று ஒழிந்த ஏனை ஒன்பது காற்றும் புகும் ஒன்பது நாடிகளையும் ஒடுக்கவல்ல யோகப்பயிற்சியுடையார் வல்லாராவர். அவர்கள் இந் நாடிகள் சேரும் நாற்சந்தியிடத்தை அருளால் காண்பர். அவர்கள் அகத்தே கேட்கப்படுவன பல்வேறு ஓசைகளாகும். ஒன்பது வாசல் - செவி முதலிய ஒன்பது தொளைகள். பிண்டம் - உடல். ஒன்பது
1. அருந்தின்பத். சிவஞானசித்தியார், அளவை - 7.
|