அதன்வழியில் நிற்பவராவர். திருவருள்கண்ணாக அறிவினிடத்து உணர்தலாகிய அனுபவம் பார்த்திடில், ஆத்தனாகிய சிவபெருமான் அறிவிற்கறிவாய் ஒன்றாய்நிற்கும் நிலையில் அவன் பரப்பெங்கும் ஆவி நிற்றலால் அவ் ஆவி சிவனும் ஆகும். ஒன்று ஏ அலர்ந்திடும்: எங்கணும் ஒன்றாய்ச் செறிந்திடும். அலர்ந்திடும் - செறிந்திடும்; வியாபகமாகும். (16) 736. ஒன்றில் வளர்ச்சி உலப்பிலி கேளினி நன்றென்று மூன்றுக்கு நாளது சென்றிடுஞ் சென்றிடு முப்பதுஞ் சேர இருந்திடிற் குன்றிடைப் பொன்திகழ் கூத்தனு மாமே. (ப. இ.) நடுநாடி ஒன்றில் உயிர்ப்புச் செல்வதாகிய அழிவிலா நிலைவு எய்தின் மூன்று நாடிகளிலும் செல்லுவதால் குறைந்தும் கூடியும் வரும் வாழ்நாள், பெருகும். முப்பத்தாறு மெய்களும் பற்றற்ற நிலையில் உற்றிடின் பொன்மலைக்கண் விளங்கியருளும் கூத்தனாகிய சிவனுமாவன். பொன் மலை ஈண்டு நடுநாடியாகும். முப்பதும் சேர என்பதன்கண் உள்ள உம்மையால் எஞ்சிய ஆறும் கூட்டி முப்பத்தாறு மெய்களெனக் கொள்ளப்பட்டது. மெய் - தத்துவம். (அ. சி.) ஒன்றில் - சுழுமுனை நாடி ஒன்றில். மூன்றுக்கு - மூன்று நாடிகளுக்கு. நாள் - வாழ்நாள். (17) 737. கூத்தவன் ஒன்றிடுங் கூர்மை அறிந்தங்கே ஏத்துவர் பத்தினில் எண்டிசை தோன்றிடப் பார்த்து மகிழ்ந்து பதுமரை நோக்கிடிற் சாத்திடு நூறு தலைப்பெய்ய லாமே. (ப. இ.) சிவபெருமான் நெஞ்சமாகிய அனாகதத்தின்கண் இடையறாது இயற்றும் திருக்கூத்தின் உண்மைகண்டு தொழுவார், மெய்யுணர்ந்தோராவர். அவர் பத்தெழுத்துச் சேர்ந்திருக்கும் இடமாகிய அந் நெஞ்சத்திடமாக நின்று அறிவான் நோக்குவர். அவர்க்கு எட்டுத் திசைப்பொருள்களும் இயல்பாகத் தோன்றும். அவற்றைக் கண்டு களிகூர்ந்து, ஆயிர இதழ்த்தாமரை என்று சொல்லப்படும் பரவெளியில் விளங்கும் சிவபெருமானை அருளால் காண்பர். கண்டால் நூல்கள் கூறும் அகவை நூறும் எய்துவர். (அ. சி.) பத்தினில் - பத்து அக்கரங்கள் கூடும் அனாகதத்தில். பதுமர் - சிவபெருமான். நூறு தலைப்பெய்தலாம் - நூறு வயது இருக்கலாம். (18) 738. சாத்திடு நூறு தலைப்பெய்து நின்றவர் காத்துடல் ஆயிரங் கட்டுறக் காண்பர்கள் சேர்த்துடல் ஆயிரஞ் சேர இருந்தவர் மூத்துடன் கோடி யுகமது வாமே. (ப. இ.) மேற்கூறியபடி நூறு ஆண்டுகள் வாழ்ந்தவர் அம் முறையானே ஆயிரம் ஆண்டுகள் வாழ்வர். ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர் அறிவு முதிர்ந்து ஊழியும் காண்பர். ஊழி - உகமுடிவு; உலகமுடிவு.
|