371
 

வகையாக எழுதப்பட்டுச் சிவயநம, நமசிவய என்பதும் இவற்றுடன் இணைத்து வரையப்படும் முறையும் காண்கின்றோம். இவையே திருக்கூத்தின் உட்பொருள்களாவன.

(28)

892. கூத்தே சிவாய நமமசி வாயிடுங்
கூத்தே-ஈ-ஊ- ஆ-ஏ-ஓம்- சிவாயநம வாயிடுங்
கூத்தே-ஈ-ஊ- ஆ-ஏ-ஓம்- சிவயநம வாயிடுங்
கூத்தே-ஈ-ஊ- ஆ-ஏ-ஓம்- நமசிவாய கோளொன்றுமாறே.

(ப. இ.) சிவயநம என்னும் செந்தமிழ்த் திருமறை ஐந்தெழுத்தாலாகிய திருக்கூத்து ஆருயிர்களை உருகிக் குழைவிக்கும். இக் குழைவினையே ஆவியின் ஒப்படைப்பாகிய ஆத்தும நிவேதனம் என்ப. சிவயநம, நமசிவய என்னும் நுண்மையும் பருமையும் ஆகிய இருவகைத் திருவைந்தெழுத்தினுடன் மேற்கூறிய நெட்டெழுத்து ஐந்தினையும் இணைத்துக் கணித்து வழிபடுதலே செந்நெறிக் கொள்கை என்க.

(29)

893. ஒன்றிரண் டாடவோ ரொன்று முடனாட
ஒன்றினின் மூன்றாட ஓரேழும் ஒத்தாட
ஒன்றினா லாடவோர் ஒன்பதும் உடனாட
மன்றினில் ஆடினான் மாணிக்கக் கூத்தே.1

(ப. இ.) திருச்சிற்றம்பலச்சிவனார் செய்தருளும் திருவைந்தெழுத்தானாம் திருக்கூத்தினுள் மாணிக்கக் கூத்தென்பதும் ஒன்று. அக் கூத்தானே உலகுயிர்கள் ஆடும் உண்மை இதன்கண் காணப்படும். ஒன்றிரண்டென்னப்படும் நிலம் நீர் இரண்டும் ஆடும். ஓரொன்று என்பது ஒப்பில்லாத ஒன்றாகிய சிவம்; அஃது உடனாட என்பது திருவருளுடன் விரவி நின்றாட என்பதாம். ஒன்றினின் மூன்று. ஒளிப் பொருளாம் ஒன்று தீ. அதுபோல் ஒளியுடை இருபொருள்கள் ஞாயிறும் திங்களுமாகும். இம்மூன்றும் ஆட, (ஓரேழ் என்பன உலகங்கள் ஏழும், உயிரின் பிறப்புவகை ஏழும் குறிப்பவாகும். இவ் விருவகை ஏழும் ஆடும், ஓரொன்பது என்பது இணையார்-(878)-இல் காணப்படும் எழுவகைத் திருவருள் ஆற்றல்களுடன் காண்டல் காட்டல் இரண்டும் கூடி ஒன்பதாகும். இவற்றை முறையே அறிவு, ஆற்றல், ஒலி, ஒளி, அருள், ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் அருவம் நாலு, அருவுருவம் ஒன்று, உருவம் நாலு என்பதாகிய மெய்நிலைகள் என்ப. இவையும் ஆடும். இவைகளெல்லாம் இடையீடின்றி ஆடும்படி பொன்னம்பலத்தின்கண் ஆடினான் என்க.

அசபை கூறப்புகுந்த இதன்கண் அஞ்செழுத்தருட்கூத்தும் திருவம்பலச் சக்கர அடிப்படையும் விளக்கியருளினர், அசபையும் ஐந்தெழுத்தும் முறையே நுண்மையும் பருமையும் என்னும் இணைவானென்க.

(அ. சி.) ஒன்று இரண்டு - பிருதிவி, அப்பு பூதங்கள். ஒன்றினில் மூன்று - அக்கின் பூத வேறுபாடாகிய சூரியன், சந்திரன், அக்கினி. ஏழும் - ஏழு உலகங்கள். ஒன்பது - ஒன்பது சிவவடிவங்கள் இவைகளெல்லாம் ஆட ஆடுவது மாணிக்கக் கூத்து.

(30)


1. சிவம்சத்தி. சிவஞானசித்தியார், 2. 4 - 2.