கன்னியானமையால் அவள்தம் திருமுலை கை வாய்ப்படாதது. அவள் பிறவாப் பிறவியள் ஆதலின் அவளும் முலையுண்ணாதவள், என்னுள்ளம் அவள்பால் நிலைபெற்று நிற்பதன்பொருட்டு வெளிப்பட்டு நிறைந்து நின்றனள். மறை - வேதம். முறை - ஆகமம். (அ. சி.) கலைபலவென்றிடுங் கன்னி - வேதங்கள் ஆகமங்கள் வல்ல சத்தி. (16) 1037 .நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற என்றன் அகம்படிந் தேழுல குந்தொழ மன்றது வொன்றி மனோன்மனி மங்கலி ஒன்றனோ டொன்றிநின் றொத்தடைந் தாளே. (ப. இ.) நிறைந்து நின்ற அத் திருவருளம்மை சிறந்த அணிகலன் களையுடையவள். அழிவில்லாத நிறைந்த முழுக் கலைகளுடன் என் நெஞ்சகத்து வீற்றிருந்தனள். அவளே எல்லாவுலகினரும் வந்து எளிதாகத் தொழும்படி பொன்னம்பலத்தின்கண் பொருந்தி நின்றனள். மனோன்மனி எனவும், மங்கலம் உடையவளெனவும் அழைக்கப்படுபவளும் அவளே. அவள் சிவத்துடன் வேறற ஒன்றிநின்று யாண்டும் ஒத்து உறைந்தனன் என்க. மங்கலம்: மாண்கலம் என்பதன் மருவாகும். (அ. சி.) ஒன்றென ஒன்றி - சிவத்தோடு ஒன்றாகக் கலந்து. (17) 1038 .ஒத்தடங் குங்கும லத்திடை யாயிழை அத்தகை செய்கின்ற வாய பெரும்பதி மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே. (ப. இ.) சிவத்துடன் யாண்டும் மரமும் காழ்ப்பும்போல உடனொத்து அடங்கி நிற்கும் தாமரை யிருக்கையினையுடைய செல்வி தகுதி வாய்ந்த அருட்செயல்புரிந்த பெருமுதல்வி. களிப்படையச் செய்யும் மனோன்மனி, மங்கல மாண்பினள் என்னும் திருவருள் தன்னை வழிபடுவார்க்குப் பல்வேறு சித்திகளையும் எளிதாக அடைவிக்கும் நன்னெறியினைச் சிலர் உணராதிருக்கின்றனர். மத்து - களிப்பு. (அ. சி.) சித்தடைக்கும் வழி - சித்துக்களை அடையும் மார்க்கம். (18) 1039 .உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி மணங்கமழ் பூங்குழல் மங்கையுந் தானும் புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக் கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே. (ப. இ.) ஆருயிர்கட்கு விளக்கும் கருவியாக அமைந்து சிவத்துடன் கூடி உடனாய்நிற்பள். அகவொளியாய் விளங்குவள். மலர்சூடிய கூந்தலையுடைய மங்கையும் அத் திருவுருவுள் விளங்கும் சிவமுடன் ஒன்றாய் வெளிப்பட்டு அருள்வள். அப்பொழுது அவ் அம்மையைத் தூய
|