516
 

(அ. சி.) எறிந்திடும் - விலக்கும். காவல் மறிந்திடும் - சிறையில் வைத்திடும். பொறிந்திடும் - கலக்கம் உறுகின்ற. புகை - துன்பம்.

(28)

1322. புகையில்லை சொல்லிய பொன்னொளி யுண்டாங்
குகையில்லை கொல்வ திலாமையி னாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ்
சிகையில்லை சக்கரஞ் சேர்ந்தவர் தாமே.

(ப. இ.) நவாக்கரி சக்கர வழிபாடு உடையவர்கட்குப் புகையாகிய துன்பம் இல்லை. அகத்தவத்தோராகிய யோகிகளுக் குண்டாகும் கடவுட் காட்சியாம் பொன்னொளி அகத்தே காணப்படும். அத்தகையோர் கொலையும் புலையும் விடுத்த சிவ நிலையினராதலின் அவர்கட்குப் பிறவியில்லை. மன்னுயிரையெல்லாம் வேறுபாடில்லாமல் ஒக்கப்பார்த்து அவர் புரியும் கடவுள் தொண்டினுக்கு முடிவில்லை.

(அ. சி.) குகை - கருப்பாசயம். சிகை - முடிவு.

(29)

1323. சேர்ந்தவர் என்றுந் திசையொளி யானவர்
காய்ந்தெழு மேல்வினை காணகி லாதவர்
பாய்ந்தெழும் உள்ளொளி பாரிற் பரந்தது
மாய்ந்தது காரிருள் மாறொளி தானே.

(ப. இ.) நவாக்கரி சக்கர வழிபாட்டினர் உள்ளொளியுடையவராதலின் எல்லாத் திசைகளினும் ஞாயிறும் திங்களும் போன்று விளக்கும் விளக்காவர். பின்னும் பிறவிக்கு வித்தாகிய சினந்தெழுகின்ற ஏறுவினை இலராவர். ஆவியெங்கணும் பரந்தெழுகின்ற சிவபெருமானின் முற்றுணர்வொளி உள்ளும் புறம்பும் ஒத்துத் திகழ்ந்தது. அதனால் ஆணவ வல்லிருள் அகன்று ஒடுங்கிற்று. ஒப்பொளியாகிய மாயாகாரிய ஒளியும் தூய அருளொளிக்குத் துணையாகும்.

(அ. சி.) திசை ஒளி - திக்குகள் எங்கும் புகழ் பெற்றவர். மேல்வினை - ஆகாமியம். உள்ளொளி - ஞான ஒளி. காரிருள் - ஆணவ இருள். மாறு ஒளி - மயக்கம்.

(30)

1324. ஒளியது ஹௌமுன் கிரீமது ஈறாங்
களியது சக்கரங் கண்டறி வார்க்குத்
தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப்
பணிவது பஞ்சாக் கரமது வாமே.

(ப. இ.) ஒளியுடையதாகிய ஹௌ என்பதை முதலிலும் கிரீம் என்பதை ஈற்றிலும் வரைந்து திருவருட் களிப்பை உண்டாக்கும் அச்சக்கரத்தை வழிபடுவார்க்குத் தெளிந்த மெய்யுணர்வும், தெளிந்த நாட்டமும் கைகூடும். பின் செந்தமிழ்த்திருவைந் தெழுத்தினை இடையறாது உருவேற்றி முழுமுதற் சிவபெருமானை வழிபாடு புரிவாயாக.

(அ. சி.) களியது - களிப்பினைத் தருவது. பஞ்சாக்கரம் அது - நவாக்கரி மந்திரமே பஞ்சாக்கரமாம்.

(31)