598
 

20. உட்சமயம்

1532. இமையவர் தம்மையும் எம்மையும் முன்னம்
அமைய வகுத்தவன் ஆதி புராணன்
சமையங்க ளாறுந்தன் றாளிணை நாட
அமையங் குழல்கின்ற ஆதிப் பிரானே.1

(ப. இ.) பிறப்புத் தேவர்களையும், சிறப்பிற்குரிய மக்களையும் மல ஆற்றலின் வன்மை மென்மைகளுக்கேற்ப வினைக்கீடாகப் பொருந்தக் கருவுறா நுண்ணுடல் கருவுறும் பருவுடல்களை மாயையினின்றும் படைத்தருளியவன் அம்மையோடு கூடிய தொன்மையன். அறுவகைச் சமயங்களும் படிமுறையான் தன் திருவடியிணையினை எண்ண வகுத்தருளினவன் தொன்மைச் சிவபெருமானேயாவன். இவ் வுண்மையறியாது சிலர் அச்சமயங்களில் நின்று மேல் நோக்காது உழல்கின்றனர்.

(அ. சி.) இமையவர் - இமயமலை வாசிகள். ஆதி புராணன் - உலக உற்பத்திக்கு ஆதியாகிய அநாதி முதல்வன்.

(1)

1533. ஒன்றது பேரூர் வழியா றதற்குள
என்றுது போல இருமுச் சமயமும்
நன்றிது தீதிது என்றுரை யாளர்கள்
குன்று குரைத்தெழு நாயையொத் தார்களே.2

(ப. இ.) திருவடிப் பேறெய்துதற்குரிய வழிகள் ஆறாகும். அவ்வாறினையும் சமயங்கள் என்று கூறுவர். அவை படிமுறையின் வைத்து மேற்செலுத்துவன. இவ் வுண்மையினை உணராமல் இச் சமயம் நல்லது அச் சமயம் தீயது என்று சொல்லிச் சண்டையிடுவோர் குன்றினைப் பார்த்துக் குரைத்தெழுகின்ற நாயினைப் போன்றவராவர்.

(அ. சி.) குன்று குரைத்தெழு நாய் - (இஃது ஒரு பழமொழி.) குன்றைப்பார்த்து குரைக்கும் நாய், அஃதாவது, வீண் ஆரவாரம்.

(2)

1534. சைவப் பெருமைத் தனிநா யகன் தன்னை
உய்ய வுயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
மெய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.3

(ப. இ.) சித்தாந்த சைவத்தின் மாண்புமிக்க ஒப்பில்லாத தலைவனை, அனைத்துயிரும் உய்யும்படியாக உயிருக்கு உயிராக நின்று உயிர்ப்புக் கொள்ளுமாறு துணைசெய்யும் உணர்வொளிப்பிழம்பாம் நந்தியை, உண்மையான நன்னெறியின்கண் ஒழுகும் தக்க அடியார்கட்கு


1. அண்டமே. அப்பர். 6. 56 - 7.

" போற்றுந் தகையன. 4. 101 - 7.

2. ஓதுசம. சிவஞானசித்தியார். 8. 2 - 3.

3. விள்ளத்தா. அப்பர். 4. 76 - 7.